வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் விழுப்புண்களே! - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள் - Agnipuratchi

வாழ்க்கைப் பயணத்தின் வழியெல்லாம் விழுப்புண்களே! - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்

Share This

வாழ்க்கைப் பயணத்தின்
வழியெல்லாம் விழுப்புண்களே! - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்

பொது வாழ்க்கையில் நான் கடந்து வந்த 42ஆண்டுகள் எனக்கு விலைமதிப்பற்ற அனுபவங்களை வழங்கியுள்ளது.

வண்ணங்கள் ஆயிரம்... எண்ணங்கள் பல்லாயிரம் என்பார்கள்...

அதைப்போல நாம் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை வகைப்படுத்தினால் லட்சக்கணக்கான வகைகளில் இருப்பார்கள்.

நான் எனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த மனிதர்களை அவ்வாறு வகைப்படுத்த முடியும்.

சிலர் அய்யா தான்  எனக்கு எல்லாம் என்பார்கள்...
வேறு சிலரோ அய்யா இல்லாவிட்டால் நான் இல்லை என்பார்கள்...

அய்யாவுக்கு நான் என்னென்றும் விசுவாசமாக இருப்பேன் என்பவர்கள் இன்னொரு வகை...

அய்யாவை நான் கடவுளாக மதிக்கிறேன் என்பார்கள் சிலர். இதையெல்லாம் நான் விரும்புவதில்லை. ஆனாலும் பலர் இத்தகைய வசனங்களை உதிர்ப்பார்கள்.

என்னை சந்திப்பவர்களில் பெரும்பான்மையினர் ‘‘அய்யா தான் எங்கள் குடும்பத்தலைவர்’’ என்பார்கள்.

பாட்டாளிகளில் பெரும்பான்மையானவர்கள் என் மீது பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பெரும்பான்மையினர் எந்த நேரமும் என்னை நினைத்துக் கொண்டே இருப்பதாக தெரிவிப்பார்கள்.

பலர் தங்களின் இதயத்தில் எனக்கு தனி இடம் ஒதுக்கியிருப்பதாக கூறுவார்கள்.

இப்படி சொல்பவர்களில் 99 விழுக்காட்டினர் உண்மையானவர்கள். அவர்கள் தான் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள். அவர்கள் தான் என்னை இயங்கச் செய்யும் ஆதார சக்திகள்.

இவர்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் மகாகவி பாரதியார் பாடிய ‘நடிப்பு சுதேசிகள்’ கவிதைகளின் வார்த்தைகளுக்கு முற்றிலுமாக பொறுத்தமானவர்கள்.

‘‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடீ !
கூட்டத்திற்  கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்திற்  கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ !’’
- என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் இவர்களைப் போன்றவர்கள் தான்.

இவர்கள் உதவிகளை பெறுவதற்காக வருவார்கள்.... நன்றாக நடிப்பார்கள்... உதவிகளை வாங்கிய பிறகு மறைந்து விடுவார்கள். அதன்பின் மீண்டும் உதவி தேவைப்படும் போது தான் ‘அய்ய்ய்ய்யா’ என்று அழைத்துக் கொண்டே வருவார்கள்.

இன்னும் ஒருவர் இருந்தார்....

‘‘ அண்ணாச்சி... உங்கள் தொடை மீது தான் எனது உயிர் பிரியும்’’ என்று வசனம் பேசியவர். அவர் அமைச்சர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றை அனுபவித்தார். காரியம் முடிந்ததும் கழன்று சென்று விட்டார்.

இவர்களைப் போல பலருண்டு. பலரை எனது குடும்ப உறுப்பினராகவே நினைத்து ஏராளமானவற்றை செய்திருக்கிறேன். ஏராளமானவர்களை வாழ்க்கையில் கைதூக்கி விட்டிருக்கிறேன். ஆனால், அத்தனை பேரும் நன்றியுடன் இருக்கிறார்களா? என்றால் அது விடை தெரியாத வினா தான்.

வாழ்க்கைப் பயணத்தில் வழியெல்லாம் இவர்களைப் போன்றவர்கள் கொடுத்த விழுப்புண்களை தாங்கிக் கொண்டு தான் நிற்கிறது வீரமிக்க மார்புகள். நல்லவேளையாக முதுகில் குத்தாமல் மார்பில் குத்தினார்களே அதுவரை மகிழ்ச்சி.

இத்தகைய அனுபவங்கள் நிறைய இருந்தாலும், ‘‘ பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!’’ என்ற பாரதியாரின் வரிகள் தான் நம்மை முடக்கி வைக்காமல் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. பாட்டாளிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்.... உழைப்போம்... உழைத்துக் கொண்டே இருப்போம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages