தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு:
முதலில் ஆதரவு... பின்னர் எதிர்ப்பு
இராஜாஜிக்கு ஏற்பட்ட மனமாற்றம் - மருத்துவர் இராமதாசு அய்யா விளக்கம்.
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு இப்போது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடந்துள்ள போதிலும் 1937 ஆம் ஆண்டு இராஜாஜி ஆட்சிக் காலத்திலும், 1965 ஆம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற போராட்டங்கள் தான் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
17.07.1937 ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்ற இராஜாஜி அவர்கள், அடுத்த ஒரு மாதத்தில் அதாவது 11.08.1937 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கி ஆணையிட்டார். இந்த ஆணை 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நீதிக்கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் தமிழகம் முழுவதும் பரவியது. போராட்டத்தில் பங்கேற்ற பலரும் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
05.12.1938 அன்று கைது செய்யப்பட்ட நடராசன் 15.01.1939 அன்றும், 13.02.1939 அன்று கைது செய்யப்பட்ட தாளமுத்து 11.03.1939 அன்று சிறைக்கொடுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அவர்களை விடுதலை செய்ய ராஜாஜி அரசு தயாராக இருந்த போதிலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்க மறுத்து சிறைவாழ்வை தொடர்ந்து உயிர் துறந்தனர். 1930-களில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வில்லனாக பார்க்கப்பட்டவர் அப்போதைய முதலமைச்சர் இராஜாஜி ஆவார்.
தாளமுத்து, நடராசன் ஆகியோரின் இறப்புக்கு இராஜாஜி அரசு தான் காரணம். அது மக்களைக் கொந்தளிக்க வைத்தது. அதைவிட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாளமுத்து குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இராஜாஜி கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது.
1950-ஆம் ஆண்டு இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கின. 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்திக்கு எதிரான உணர்வு மீண்டும் வெடித்தது. 1954-ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த இராஜாஜி, முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இந்தித் திணிப்பு குறித்த தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, தமிழ், தெலுங்கு, மலையாளம், அசாமி, ஒரியா, மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று இராஜாஜி நடத்தினார். அப்போது "இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே” என முழங்கினார். அதற்குப் பிறகு1958 தொடங்கி நேருவுக்கு எழுதிய கடிதங்களில், “வேண்டாம் இந்தி ஒரு போதும், வேண்டும் ஆங்கிலம் எப்போதும்” என வலியுறுத்தினார்.
1965-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதாகும். இந்தப் போராட்டத்தை முதலில் மாணவர் அமைப்புகள் தொடங்கினாலும், பின்னர் இதை திமுக கையில் எடுத்துக் கொண்டது. முதல்கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கிய இராஜாஜி மூன்றாம் கட்டப் போராட்டத்தை ஆதரித்தார். திமுகவுடன் கைக்கோர்த்து இந்தியை எதிர்த்தார்.
இந்தியின் ஆதரவாளராக இருந்த இராஜாஜி, பின்னாளில் இந்தியை எதிர்த்தார் என்பது வியப்பு என்றால், அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றும் உள்ளது.....
முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தந்தை பெரியார் மூன்றாம் கட்ட போராட்டத்தை கடுமையாக எதிர்த்தார். அந்தப் போராட்டத்தை தந்தை பெரியார் ஏற்கவில்லை . அதுமட்டுமின்றி, போராடுபவர்களின் அரசியல் உள் நோக்கத்தை கடுமையாக விமர்சித்தார். அது தான் அதிர்ச்சி தரும் செய்தியாகும்
No comments:
Post a Comment