மரம் நடும் அறமே மாபெரும் அறம்! - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
நான் ஏற்கனவே பலமுறை கூறிய செய்தி தான். ஆனாலும், மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் நான் சொல்லலாம்; நான் சொல்வதை நீங்களும் செய்யலாம். அதனால் இயற்கைக்கு நன்மை தான். நமக்கும் நன்மை தான்.
இந்த உலகில் நாம் வாழ்ந்ததற்கு ஏதேனும் அடையாளத்தை உருவாக்க வேண்டும். நம்மைச் சுமக்கும் இந்த மண்ணுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை இயற்கையை காக்க மரம் வளர்க்கும் அறமே மாபெரும் அறம் ஆகும்.
உங்களுக்கு குழந்தை பிறந்தவுடன், அதைக் கொண்டாடும் வகையில் உங்கள் வீட்டில் ஓர் மரம் நடுங்கள். அடுத்து ஒவ்வொரு ஆண்டும் உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் போது ஏற்கனவே நடப்பட்ட மரத்திலிருந்து 10 அடி தொலைவில் இன்னொரு மரக் கன்றை நட்டு வளருங்கள்.
இப்படியாக ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரக் கன்றை நட்டு வளர்த்து பராமரியுங்கள். வீடுகளில் இடம் இல்லாதவர்கள் அருகிலுள்ள பொது இடங்கள், விளையாட்டுத் திடல்களின் வெளிவட்டப் பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள், பள்ளிகள், அரசு அலுவலக வளாகங்கள் ஆகியவற்றில் மரக்கன்றுகளை நடலாம்.
உங்களின் குழந்தைகள் வளர்ந்த பிறகு மரங்கள் வளர்க்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அழகாகவும், கம்பீரமாகவும் வளர்ந்து நிற்கும் மரங்களைக் காட்டி,‘‘ இதோ பாருங்கள்... உங்களைப் போலவே ஓங்கி வளர்ந்திருக்கும், உங்கள் பிறந்தநாளுக்காக நடப்பட்ட மரங்களை பாருங்கள்’’ என்று காட்டலாம். அது உங்களுக்கு மனநிறைவையும், உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். குழந்தைகளின் பிறந்த நாளுக்கு மட்டும் தான் என்றில்லை. உங்களின் பிறந்த நாளுக்கும் மரக்கன்று நடலாம்.
உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ பிறந்தநாள் வந்தால் அந்த நாளில் நடுவதற்கான மரக்கன்றை சில நாட்களுக்கு முன்பே வீட்டுக்கு வாங்கி வந்து வைக்க வேண்டும். மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அந்த மரக்கன்றைக் காட்டி , குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.
இதை நடைமுறைப்படுத்தினால் ஒவ்வொரு குடும்பம் சார்பிலும் ஆண்டுக்கு குறைந்தது நான்கு மரங்கள் நடப்படும். காலப்போக்கில் தமிழகம் சோலையாக மாறும். வெம்மை என்பதே இல்லாமல் போகும். நாம் நினைத்தால் இதை சாதிக்கலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களின் பிறந்தநாளுக்காக மரம் நட்ட பாட்டாளிகள் அதை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உங்களுடன் பேச நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே....
மரம் நட்டு வளருங்கள்...
அறம் செய்து மகிழுங்கள்!
No comments:
Post a Comment