தமிழை வீழ்த்தியவர்கள் யார்?
25. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்! - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.
தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இனம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்ற எண்ணம் பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்றே வேறுபல அமைப்புகளுக்கும் இருந்தது. ஒரே கோரிக்கைக்காக, ஒத்தக்கருத்துள்ள கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்துவதைவிட, ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினால் கோரிக்கைகள் ஆட்சியாளர்களின் காதுகளில் வலிமையாக ஒலிக்கும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதை ஏற்றுக்கொண்டு தமிழ் சார்ந்த பிரச்சினைகளுக்குப் போராடுவதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற புதிய அமைப்பை நான் தோற்றுவித்தேன். இந்த அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் மருத்துவர் ந.சேதுராமன் ஆகியோர் இணைந்தனர். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் நடைபெற்றது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் செயல்திட்டங்கள்
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தை முதலில் முன்னெடுப்பது என்று ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயில்களில் தமிழில் வழிபாடு, தமிழில் திருமணம் நடத்துதல், தமிழைப் பயிற்றுமொழி ஆக்குதல், தமிழை ஆட்சிமொழியாக்குதல், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தமிழில் நடத்துதல், ஊடகங்களில் சரியாகத் தமிழை உச்சரித்தல், சின்னத் திரை மற்றும் வண்ணத் திரைகளில் பண்பாட்டுச் சீரழிவைக் கண்டித்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வதென்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழுக்கு மாற்றுவதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் எத்தகையப் போராட்டத்தை நடத்தவுள்ளது என்பது குறித்து கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் விளக்கினேன். அதன் முக்கிய அம்சம் வருமாறு:
“கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழ் மொழியில் எழுதவேண்டும் என்ற எங்களின் கோரிக்கை வணிகர்களுக்கு எதிரானது அல்ல. மாறாக, தமிழுக்கு ஆதரவானது. இதை உணர்ந்து வணிகர்கள் தங்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழ் மொழியில் மாற்றி எழுத வேண்டும். இதற்காக வணிகர்களுக்கு 23.10.2004 வரை ஒரு மாத அவகாசம் வழங்கப்படும். அதற்குள் வணிகர்கள் பெயர்ப் பலகைகளை தமிழுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழில் பெயர்ப் பலகைகளை அமைக்கவில்லை என்றால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் 2.11.2004 அன்று சென்னையில் உள்ள கடைகளில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்படும். அவ்வாறு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும். அதன் பிறகும் பெயர்ப் பலகைகள் தமிழுக்கு மாற்றப்படவில்லை என்றால், அந்தப் பெயர்ப் பலகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தும்” என்று கூறினேன்.
வணிகர் சங்கங்களின் ஆதரவு
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் இந்தக் கோரிக்கையை வணிகர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டத்திட்டங்கள் குறித்து விளக்குவதற்காக சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், “எங்களின் வணிகர் சங்கங்களின் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் அமைக்க முயற்சி எடுப்போம்” என்றார்.
அடுத்த ஒரு மாதத்தில் பல கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழுக்கு மாறின. ஆனாலும், மாற்றத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. ஒரு சாலையில் 100 கடைகள் இருந்தால், அவற்றில் தமிழில் பெயர்ப் பலகை கொண்ட கடைகளின் எண்ணிக்கை 5 முதல் 10 என்ற அளவிலேயே இருந்தது. இந்த மாற்றம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. அதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு தமிழில் பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சி 2.11.2004 அன்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், அன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் தமிழில் பெயர்ப் பலகைகளை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கடைகளில் நானும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மற்ற தலைவர்களும் துண்டறிக்கைகளை வழங்கி, பெயர்ப் பலகைகளை தமிழ் மொழியில் எழுதும்படி வணிகர்களை கேட்டுக்கொண்டோம்.
வணிகர்களுக்கு வேண்டுகோள்
“தமிழர்கள் வைத்திருக்கும் கடைகளில், தமிழர்கள் வாங்கும் கடைகளில், தமிழ் மண்ணில் கடைகளின் பெயர் தமிழில் இல்லை. பாரதிதாசன் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் எங்கும் தமிழ் இருக்க வேண்டும். இந்த ஆண்டு முடிவதற்குள் அனைத்துக் கடைகளிலும் உள்ள பெயர்ப் பலகைகளை தமிழில் இருக்க வேண்டும். எனவே, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து வணிகர்களும் தமிழன் என்ற பெருமையோடு கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரவு தர வேண்டும்” என்றும் கோரினேன்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துண்டறிக்கைகளை வழங்கும் நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனும் கலந்துகொண்டார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் இந்த முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், “இப்பொழுது வணிகர்கள் மீது ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த முக்கியத்துவத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வணிர்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்க நிர்வாகிகள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்” என்று வெள்ளையன் உறுதியளித்தார். ஆனாலும், பெயர்ப் பலகைகளை தமிழுக்கும் மாற்றும் முயற்சியில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மாநாட்டில் தீர்மானம்
இதனிடையே 2005ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மூன்றாவது மொழிப்போர் அறிவிப்பு மாநாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்:
“வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றின் பெயர்மற்றும் விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதன்மை இடம் கொடுக்க வேண்டும் என்ற மூன்று அரசாணைகளை (1984 அரசாணை நிலை எண் 1541), 1989 மற்றும் 1990 (அரசாணை நிலை எண்.291) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் வணிகப் பெருமக்களுக்கும், அரசுக்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. “ஹோட்டல்” என்ற ஆங்கிலச் சொல்லை “ஓட்டல்” என்று அப்படியே தமிழ்ப்படுத்தி எழுதாமல் “உணவகம்” என்று எழுத வேண்டும். அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது அரசாணையின் விதி. தமிழக அரசின் ஆணைகளை வணிகப் பெருமக்கள் பொருட்படுத்தாத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசும் அவற்றை நடைமுறைப்படுத்தவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இந்நிலையில், அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்த, வணிகர்களும் தமிழக அரசும் உடனடியாக முன்வரவேண்டும் என மீண்டும் இம்மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் துண்டறிக்கை
வழக்கம்போலவே இந்தத் தீர்மானமும் விழலுக்கு இறைத்த நீராக மாறியது. இந்தக் கோரிக்கையை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை, வணிகர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், நானும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களும் சளைக்கவில்லை. பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்றுவதற்கான அடுத்த முயற்சியைத் தொடங்கினோம். 2005ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பிறமொழிப் பெயர்ப் பலகைகளை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்துவதுதான் எங்களின் அடுத்த முயற்சியாகும். இந்தப் போராட்டம் குறித்து வணிகர்களுக்கு அறிவிப்பு செய்யவேண்டும் என்பதற்காக, மூன்றாவது மொழிப்போர் அறிவிப்பு மாநாட்டில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அச்சிட்டு, அத்துடன் “கோடானு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எமது வேண்டுகோளை ஏற்று வணிகர்கள் அரசாணையை நிறைவேற்றுவார்கள் என மிகுந்த தோழமையோடு எதிர்பார்க்கிறோம். இதன் பின்னரும் எமது வேண்டுகோளைப் புறக்கணித்தால் அன்னைத் தமிழைப் பாதுகாத்திடும் வகையில் வரும் மே 23, 2005 அன்று தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளில் பிறமொழிப் பெயர்களைக் கரி மை பூசி அழிக்கும் அறப்போர் நடத்துவதென இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது” என்ற போராட்ட அறிவிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கை வணிகர்களிடம் வழங்கப்பட்டது.
பெயர்ப் பலகைகள் கரி பூசி அழிப்பு
ஆனாலும் வணிகர்கள் பெயர்ப்பலகைகளை தமிழ் மொழியில் மாற்றவில்லை. அவ்வாறு மாற்றும்படி அவர்களை தமிழக அரசும் கட்டாயப்படுத்தவில்லை. அதனால், வேறுவழியின்றி 23.5.2005 அன்று திட்டமிட்டபடி சென்னையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை கரி மை பூசி அழிக்கும் போராட்டத்தை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியது. சென்னை அரசுப் பொது மருத்துவமனை மற்றும் நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) அருகில் அமைக்கப்பட்டிருந்த பிறமொழிப் பெயர்ப் பலகைகளை நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவனும் தார்ப்பூசி அழித்தோம். இதற்காக நாங்களும், எங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றவர்களும் கைது செய்யப்பட்டோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகையப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நான், “தமிழுக்கு அனைத்து நிலையிலும் முதலிடம் கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் இப்போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நிலையை அடையும் வரை ஓயமாட்டோம்” என்று அறிவித்தேன். இப்போதும் தமிழில் பெயர்ப் பலகைகளை அமைப்பதற்கான எனது முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதே நேரத்தில், பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்ற உண்மையையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தமிழில் பெயர்ப் பலகைகள் அமைப்பது தொடர்பான அரசாணையை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படாத வரை பெயர்ப் பலகைகள் தமிழுக்கு மாறாது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். எந்த அதிகாரம் இல்லாததால், தமிழ் மொழிக்கு பெயர்ப் பலகைகளை மாற்ற முடியவில்லையோ, அந்த அதிகாரம் விரைவில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைக்கும். அப்போது தமிழ்நாட்டில் உள்ள பெயர்ப் பலகைகள் அனைத்தும் தமிழுக்கு மாறும்.
நாளை... தமிழ் ஆட்சிமொழி மாநாடு!
*******
No comments:
Post a Comment