காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் கிராமத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் மதூர் ம. குப்பன் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.
காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் சங்கம் என்றாலே மதூர் ம.குப்பனின் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு வன்னியர் சங்கத்திற்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைத்தவர். 1982ஆம் ஆண்டில் எனக்கு அவர் அறிமுகமானார். அதன்பின் 40 ஆண்டுகளாக தொடர்ந்து என்னுடன் பயணம் செய்தவர். வன்னியர் சங்கக் காலத்திலிருந்து இட ஒதுக்கீடு போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்ற தியாக வரலாறு மதூர் ம. குப்பனுக்கு உண்டு.
எந்தக் கூட்டம் நடந்தாலும் அதில் மதூர் ம.குப்பன் தெளிவாகத் தெரிவார். எப்போதும் மஞ்சள் சட்டை தான் அணிந்திருப்பார். என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். அடிக்கடி என்னுடன் பேசுவார். நேற்று மாலை கூட கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் இன்னும் அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
குப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க, வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment