நம்மூர் அம்மூர் சகோதரர்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யாவின் பழைய நினைவுகள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆகப்பெரிய வலிமை யார்? என்று கேட்டால் பாட்டாளி சொந்தங்கள் தான் என்று யோசிக்காமல் கூறி விட முடியும். தமிழகத்தில் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அங்கு பாட்டாளி மக்கள் கட்சியையே தனது உயிராகக் கருதும் பலரைப் பார்க்க முடியும். அத்தகைய தன்னலம் கருதாத பலரில் அம்மூர் சகோதரர்களும் அடக்கம்.
வன்னியர் சங்க காலத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகும் கட்சிக்காக உழைத்த சொந்தங்களின் நினைவுகள் அவ்வப்போது மனதிற்குள் வந்து செல்கின்றன. அவ்வாறு நினைவுக்கு வந்த அம்மூர் சகோதரகளின் மூத்தவரான தயாளனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும், பின்னர் அண்மையில் பிரிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்திலும் அமைந்துள்ள பேரூராட்சி தான் அம்மூர் ஆகும். காப்புக்காடுகள் நிறைந்த மலைக்கு கீழ் அமைந்துள்ள அழகான பேரூர் அம்மூர்.
வன்னியர் சங்க காலமாக இருந்தாலும், அதன்பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதற்கு பிந்தைய காலமாக இருந்தாலும் அம்மூருக்கு அடிக்கடி சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். ‘‘அம்மூர்... நம்மூர்’’ என்பது தான் அங்கு நான் அடிக்கடி பேசும் வசனம் ஆகும். அந்த அளவுக்கு அங்குள்ள மக்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்கின்றனர்.
அம்மூரைச் சேர்ந்த சகோதரர்கள் தயாளன், சத்தியமூர்த்தி, பாண்டியன், இளங்கோவன். இவர்கள் அனைவரும் ஒன்றாகத் தான் வாழ்ந்தார்கள். அம்மூர் அல்லது அதன் சுற்றுப்பகுதிக்கு செல்லும் போதெல்லாம் தயாளன் வீட்டில் தான் உணவருந்தி விட்டு, இளைப்பாறுவேன்.
1993&ஆம் ஆண்டு இராணிப்பேட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது, தயாளன் வீட்டில் தங்கி தான் பரப்புரை மேற்கொண்டேன். சத்தியமூர்த்தி பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கிய போது அதை நான் தான் திறந்து வைத்தேன். அம்மூர் சகோதரர்கள் நால்வரும் என்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர்கள். என்னால் மறக்க முடியாதவர்களின் பட்டியலில் அம்மூர் சகோதரர்களுக்கு நிச்சயமாக இடம் உண்டு.
வன்னியர் சங்க காலத்தில் தயாளன் முதல் இளங்கோவன் வரை அனைவரும் இளைஞர்கள். தயாளனுடன் நேற்று தொலைபேசியில் பேசிய போது அனைத்து சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தேன். தயாளனிடம் உனது வயது என்ன? என்று கேட்டேன். தயாளனுக்கு 70 வயது ஆகிவிட்டது என்று அவரே கூறியபோது வியப்பாக இருந்தது. நேற்று தான் இளைஞராக பார்த்தது போல இருந்தது.... அதற்குள் அந்த இளைஞர் 70 வயதைக் கடந்து விட்டார் என்பதே வியப்புக்குக் காரணம்.
வன்னியர் சங்கக் காலம் தொடங்கி இன்று வரை அம்மூர் சகோதரர்கள் தயாளன், சத்தியமூர்த்தி, பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் தடம் மாறாமல், எனது பாதையில் தான் பயணிக்கிறார்கள்.
அம்மூரைப் போலவே நம்மூர்கள் பலவற்றிலும் இதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட பாட்டாளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தூண்கள்!
பாட்டாளிகளான நாம் வாழ்வோம்.... தமிழ்நாட்டை நிச்சயம் ஆள்வோம்!
****************
No comments:
Post a Comment