பா.ம.க. சிங்கங்களின் கூட்டம்:
அங்கு சிறுநரிகளுக்கு இடமில்லை! - மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல்
இந்த அடக்குமுறைகளுக்கு அப்பாற்பட்ட கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி. சமூகநீதிக்காக 1980-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும் வரை, சந்திக்காத அடக்குமுறைகள் எதுவுமில்லை. சாலை மறியல் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையிலும் அரசாங்க அடக்குமுறைகளுக்கு பணிய மறுத்து முழங்கி வீரச்சாவடைந்த சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, ஒரத்தூர் ஜெகநாதன், கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தாண்டவராயன், கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், தொடர்ந்தனூர் வேலு, சிறுதொண்டமாதேவி தேசிங்கு போன்றவர்கள் தான் நமது வீரத்திற்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டுகள். அவர்களுக்கு இணையான வீரமும், தியாகமும் கொண்டவர்கள் தான் இப்போதும் பாமகவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் வீரச் சிங்கங்கள். அவர்கள் இப்போது மட்டுமல்ல.... எப்போதும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் களமாடும் சிங்கங்கள்.
நன்கு முற்றிய நெல்மணிகளுக்கு நடுவே தவிர்க்கவே முடியாத சில பதர்களும் இருப்பது வாடிக்கை தானே. நம்மிலும் பல பதர்கள் உள்ளன. அதை நானும் நன்றாக அறிவேன். அத்தகைய பதர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிக்கு துரோகம் செய்த சிறுநரிகளுக்கும் கட்சியில் இடமில்லை. சிங்கங்களும், சிறுநரிகளும் ஒன்றாக வாழ முடியாது; நெல்மணிகளின் மூட்டையில் பதர்களுக்கு இடமில்லை. நெல்மணிகளை புடைக்கும் போது பதர்கள் பறந்து போய்விடும். சிறுநரிகளின் முகத்திரை விலகும் போது அவற்றை சிங்கங்கள் விரட்டியடித்து விடும். இவை அனைத்தும் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டுவிடும்.
இந்தப் பணிகளையெல்லாம் செய்து முடிக்க வேண்டியது கட்சித் தலைமையின் பணி. அதை கட்சித் தலைமை கவனித்துக் கொள்ளும். பாட்டாளியான நீ செய்ய வேண்டியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்களின் வெற்றிகளை உறுதி செய்ய உழைப்பது தான்.
மீண்டும் சொல்கிறேன்....
தடைகளை தகர்ப்பதும், அடக்குமுறைகளை உடைப்பதும் நமது பிறவி குணங்கள். எனவே, அனைத்து முட்டுக்கட்டைகளையும் நொறுக்கித் தள்ளி மக்களிடம் செல்லுங்கள்... அவர்களின் மனங்களை வெல்லுங்கள்... மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை அள்ளுங்கள். நகர்ப்புறங்களும் நமதே என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணியாற்றும்படி பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment