90-ஐ வாழ்த்திய 83! வயதுடைய மருத்துவர் இராமதாசு அய்யா
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பெருந்தொண்டர் பெருமாள் கவுண்டர். அவருக்கு இன்று 90 வயது நிறைவடைகிறது. நாளை முதல் அவருக்கு 91 வயது தொடங்குகிறது. அதையொட்டி குடும்பத்தினருடன் மரக்கன்று நட்டார். அதையறிந்த நான் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.
ஆனால், இன்று பிறந்தநாள் கொண்டாடிய அந்த 90 வயது குழந்தை, என் முகத்தைப் பார்க்க வேண்டும் என்றும், என்னுடன் வீடியோ அழைப்பில் பேச வேண்டும் என்றும் அடம் பிடித்தது. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவருடன் வீடியோ அழைப்பில் பேசினேன். அதில் அந்த 90 வயது குழந்தைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 90 வயதிலும் அவருக்குக் கம்பீரமானத் தோற்றம். வீரத்தை வெளிப்படுத்தும் மீசை.
அவரது வாழ்க்கை முறையையும், உடல் நலத்தை பேணும் முறையையும் பாராட்டினேன். பின்னர் இன்று மாலையில் மீண்டும் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். 90 வயதைக் கடக்கும் பெருமாள் கவுண்டர் வன்னியர் சங்கத்திலும், பாட்டாளி மக்கள் கட்சியிலும் தொடக்கத்திலிருந்து பயணிக்கிறார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியத் தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு 5 மகன்கள். அவர்களின் ஒருவர் தவறிவிட்ட நிலையில், 4 பேர் உள்ளனர். இரு மகள்கள். இளைய மகள் அமுதாவின் வீட்டில் தான் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் அமுதா முதுகலை பட்டம் பெற்றவர். தந்தையையும், தாயையும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்.
பெருமாள் கவுண்டர் இன்றைய இளைஞர்களுக்கு வாழ்வியல் உதாரணம். அவரை இன்றைய இளைய தலைமுறை பின்பற்றி நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும்.
*************
No comments:
Post a Comment