களைகட்டிய சுற்றுலா! நீண்ட நாள்களுக்கு பிறகு மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி!
ஊட்டியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. இந்தியா முழுவதிலும் நேற்று பொது வேலைநிறுத்தித்திற்கு பல்வேறு தொழிற்சங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் முழுபந்த் 2 நாட்கள் நடக்கும் நிலையில், நேற்று கேரள மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். நேற்று முன்தினம் முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரத் துவங்கினர். நேற்று காலை முதல் அதிகளவு கேரள மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால், ஊட்டி- கூடலூர் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், ஊட்டி நகரில் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் செல்லும் சாலை ஆகியவைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. சேரிங்கிராசில் இருந்து கேசினோ சந்திப்பு, ஸ்டேட் பேங்க் சந்திப்பு, கலெக்டர் அலுவலகம் வழியாக தாவரவியல் பூங்காவிற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பூங்காவில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. கமர்சியல் சாலையும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2 ஆண்டுகளுக்கு பின் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், அனைத்து லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன.
அனைத்து கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment