கல்விக் கோயிலில் வாடிய
பயிர்களைக் கண்டு வாடினேன் - மருத்துவர் இராமதாசு அய்யா
திண்டிவனம் ஒலக்கூரில் உள்ள கல்விக் கோயிலுக்கு நான் இன்று மாலை சென்றேன். அதன் வளாகத்தில் 2918 அடிகள், அதாவது 2.11 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப் பயிற்சி மேற்கொண்டேன். இது ஒரு சுகமான அனுபவம் தான்.
ஆனால் கல்விக் கோயில் வளாகத்தில் நான் கண்ட காட்சிகள், இந்த சுகமான அனுபவத்தை ரசிக்க முடியாமல் செய்துவிட்டன.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். ஆனால், நான் பார்த்துப் பார்த்து வாங்கி வந்து வைத்து வளர்த்த மரம் செடி கொடிகளே வாடி வதங்கி நிற்பதைப் பார்க்கும் போது, எவ்வளவு வேதனை எனக்கு ஏற்பட்டிருக்கும்?
கல்விக் கோயில் கட்டப்பட்ட போது, ஆந்திர மாநிலம் ராஜமந்திருக்கு சென்று அங்குள்ள ஆயிரக்கணக்கான நர்சரிகளில் அலைந்து திரிந்து, விதவிதமான மரம், செடி, கொடிகளை வாங்கி வந்து கல்விக் கோயிலில் நட்டு வளர்த்தேன். அந்த மரங்கள், செடி, கொடிகளின் பெயர்களைக் கண்டுபிடிப்பது கூட தாவரவியல் வல்லுநர்களுக்கே கடினமானதாகத்தான் இருக்கும்.
அவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்ட அந்த தாவரங்கள், வாடிப் போயிருப்பதைப் பார்த்து வேதனையடைந்தேன், கண்கலங்கினேன். என்னைப் பார்த்து அந்தத் தாவரங்கள் அனைத்தும், "இரண்டாண்டு காலமாக எங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை?" என்று என்னிடம் முறையிட்டன. கொரோனா ஊரடங்கு காரணமாகத்தான் உங்களைக் காண வரமுடியவில்லை என்று விளக்கம் அளித்தும் கூட அதை அவைகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உடனடியாக கல்விக் கோயில் வளாக பராமரிப்பாளர்களை அழைத்த நான், தாவரங்களை பராமரிப்பதற்காக அவர்களை கடிந்துகொண்டேன். நாளை காலை தொடங்கி, அனைத்துச் செடிகளுக்கும் நேரம் தவறாமல் நீரூற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நாளை காலை முதல் கல்விக் கோயில் வளாக தாவரங்கள் நன்றாக கவனித்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். அடுத்தமுறை நான் கல்விக் கோயில் வளாகத்திற்குச் செல்லும் போது அவை முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்பதைக் காண காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment