ஈகையையும், கட்டுப்பாட்டையும் போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இதயங்கனிந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கும், தனி மனிதனுக்கும் பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் இரமலான் திருநாளாகும்.
எந்த ஒரு மதத் திருநாளாக இருந்தாலும் அவை மகிழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் என்பதைக் கடந்து வாழ்க்கை நெறிமுறைகளை போதிக்கும் நிகழ்வுகளாகவே அமைகின்றன. அதற்கு இரமலான் திருநாளும் விலக்கல்ல. தூய்மையாக இருக்க வேண்டும்; நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும்; எதிரிகளையும் மன்னிக்க வேண்டும்; அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பாடங்களை இஸ்லாமிய சொந்தங்களுக்குக் கற்றுத் தருவது தான் இரமலான் திருநாளின் நோக்கம் ஆகும். இது போற்றத்தக்கதாகும்.
இந்த பாடங்களை உலகம் கற்றுக் கொள்ளாததால் தான் 21&ஆவது நூற்றாண்டிலும் போர்கள் நடத்தப் படுகின்றன. இன்றைய சூழலில் உலகின் முதன்மைத் தேவை அமைதியும், வளர்ச்சியும் தான். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment