வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.
4. பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன் போராட்டம்
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அறிவிக்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன் போராட்டம் நடத்த முடிவு செய்தேன். போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என சுமார் 700 பேர் சென்னையிலிருந்து தில்லிக்கு தொடர்வண்டியில் சென்றோம்.
19.10.1991 பிற்பகல் 2.00 மணிக்கு பிரதமர் நரசிம்மராவ் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்....
அதற்கு முன்பாக 2 கி.மீ தொலைவிலிருந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக சென்றோம். சென்னையிலிருந்து 700 பேர் சென்ற நிலையில் அவர்களை விட கூடுதலாக 50 அல்லது 100 பேர் மட்டும் தான் ஊர்வலத்திலும், போராட்டத்திலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்களே வியக்கும் அளவுக்கு 2500க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்திலும், போராட்டத்திலும் கலந்து கொண்டனர். தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் எங்களின் போராட்ட அழைப்பை ஏற்று பெருந்திரளாக வந்திருந்தனர். எங்களின் மிக நீண்ட ஊர்வலத்தைப் பார்த்து தில்லி அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அங்குள்ள ஊடகங்களும் வியந்தன. தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்குச் சென்று போராட்டம் நடத்திய எந்தக் கட்சிக்கும் எங்களுக்கு கூடிய அளவுக்கு கூட்டம் கூடியிருக்காது. போராட்டத்திற்காக குவிந்த பா.ம.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தலைநகர் தில்லி குலுங்கியது.
ஊர்வலம் முடிவடைந்தவுடன் பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன் நடைபெற்ற போராட்டத்திற்கு நான் தலைமையேற்றேன். அப்போதைய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், அன்றைய பொதுச் செயலாளர் தலித் எழில்மலை, பொருளாளர் குணங்குடி ஆர்.எம்.அனீபா, அன்றைய தொண்டர் அணித் தலைவரும், இன்றைய பா.ம.க. கவுரவத்தலைவருமான ஜி.கே.மணி, சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, பாதிரி கோவிந்தசாமி, சி.ஆர்.பாஸ்கரன், இராம. முத்துக்குமார், உத்திரமேரூர் விஸ்வநாதன், சந்தானமூர்த்தி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து, லோக்தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இராம் அவதேஷ்சிங், அன்றைய ஜனதாதள மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இராம்விலாஸ் பாஸ்வான், தலித் வாய்ஸ் ஆசிரியர் பெங்களூர் வி.கே. இராஜசேகர ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை அகற்றி, 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனைவரும் மத்திய அரசை வலியுறுத்தினர்.
தலைநகர் தில்லியின் அதிகார மையமான பிரதமர் இல்லத்திற்கு அருகில் நாங்கள் போராட்டம் நடத்திய போது, அந்த பகுதி முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளாக காட்சியளித்தது. எனது இளையமகளும், அப்போதைய இதழியல் மாணவியுமான கவிதா அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், பேரணி மற்றும் போராட்டக் காட்சிகளை புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதி பயணத்தில் அந்த போராட்டம் முக்கிய மைல்கல்லாகும்.
( வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டிய குறுந்தொடர்)
No comments:
Post a Comment