வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள். - Agnipuratchi

வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

Share This

வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

3. தமிழகத்தில் முழு அடைப்பு

மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியதற்காக  பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேரணிகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்திக் கொண்டிருந்த போது, அடுத்தடுத்து  இரு செய்திகள் இதயத்தைத் தாக்கின.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்த நிலையில்,   இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1990-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்திரா சகானி என்ற பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடரப்பட்ட பின்னர் நடந்த முதல் விசாரணையிலேயே 27% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டாவது அதிர்ச்சி செய்தி, மண்டல் ஆணையப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்பாத பாரதிய ஜனதாக் கட்சி,  வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து 1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் தோல்வியடைந்து பதவி விலகினார். மற்றொருபுறம் சந்திரசேகர் தலைமையில் தமது ஆதரவுடன் பொம்மை அரசு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்த தீமைகளுக்கு எதிராகவும் பா.ம.க. போராடியது.

மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்தும், அந்தத்  தடையை நீக்க வலியுறுத்தியும் 19.10.1990-இல் தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, 02.01.1991-இல் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் முன்பாக,  மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி  போராட்டம் நடத்தியது.

அதுமட்டுமின்றி, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்திய வி.பி.சிங் அரசைக் கவிழ்த்து விட்டு,புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகரைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 10.11.1990-இல் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் ஆணைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை ஓராண்டாகியும் நீக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இன்னொரு அரசாணையை நரசிம்மராவ் தலைமையிலான அரசு பிறப்பித்தது. அதை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன. 27% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கும், 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால்  வழக்கு விசாரணையும், தீர்ப்பும் மேலும் தாமதமாகலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற தடையை நீக்கி 27% இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியும் தில்லியில் பிரதமர் நரசிம்மராவ் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்திற்கான நாளாக 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி குறிக்கப்பட்டது.

நாளை.... பிரதமர் நரசிம்மராவ் வீட்டு முன் போராட்டம்

( வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாளையொட்டிய குறுந்தொடர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages