ஒற்றை எச்சரிக்கையும் உடனே திறக்கப்பட்ட மேம்பாலங்களும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள். - Agnipuratchi

ஒற்றை எச்சரிக்கையும் உடனே திறக்கப்பட்ட மேம்பாலங்களும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

Share This

ஒற்றை எச்சரிக்கையும் உடனே
திறக்கப்பட்ட மேம்பாலங்களும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

அது 2016-ஆம் ஆண்டு.

சென்னை வடபழனி சந்திப்பிலும்,  அமைந்தகரை அண்ணா வளைவு அருகிலும் இரு பாலங்கள் கட்டப்பட்டன.  பணிகள் முடிந்து  ஒரு மாதமாகியும் அந்த பாலங்கள் திறக்கப்படவில்லை.  அதைக் கண்டித்து  26.11.2016 அன்று அறிக்கை விடுத்தேன்.  அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன்பின் 30.11. 2016 அன்று  சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நான், கீழ்க்கண்டவாறு எச்சரித்தேன்.

’’சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையையும், கிழக்குக் கடற்கரை சாலையையும் இணைக்கும் 100 அடி சாலையான ஜவகர்லால் நேரு சாலையில் வடபழனி சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையடுத்து அங்கு மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.2011 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டு, பல மாத தாமதத்திற்குப் பிறகு 2016 அக்டோபர் மாதத் தொடக்கத்தில் முடிக்கப்பட்டன.

அதேபோல், தந்தை பெரியார் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அண்ணா வளைவு அருகில் இரு எல் வடிவ பாலங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் ஒரு பாலம்  தேர்தலுக்கு முன் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக பெரியார் சாலையின் ஒரு புறத்தில் தொடங்கி அண்ணா வளைவு வழியாக அண்ணா நகர் செல்லும் சாலையில் அண்ணா சித்த மருத்துவமனை வளாகம் வரை எல் வடிவத்தில் ரூ.117 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை திறக்கப்படவில்லை. காரணம் கேட்டால் அம்மா வந்து தான் திறக்க வேண்டும் என்கிறார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனவே, சென்னை வடபழனி மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம் உட்பட நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனே தொடங்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரு பாலங்களையும் பாட்டாளி மக்கள் கட்சியினரே  திறந்து வைப்பார்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’’

30.11.2016 அன்று இரவு 9.30 மணிக்கு சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எச்சரிக்கை விடுத்தேன். அதன் பயனாக  அதற்கு அடுத்த நாள், 01.12.2016 காலை 6 மணிக்கு  சென்னை  வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு ஆகிய இரு இடங்களிலும் கட்டி  முடிக்கப்பட்ட பாலங்கள் எந்த விழாவும் இன்றி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.

அது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages