அரங்க.வேலுவின் கண்ணீரும்,
என்னை வாட்டும் கவலையும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வருத்தம்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று மூன்றாவது நாள்!
தொடர்ந்து மாத்திரை எடுத்து வருவதால் காய்ச்சல் குறைந்து விட்டது.
தொண்டை வலி தான் பாடாய் படுத்துகிறது. கொரோனா வைரசின் தாக்குதல் தொண்டையில் தான் தொடங்கும் என்பதால் அங்கு வலி அதிகமாகவே இருக்கிறது. அத்துடன் லேசான உடல் சோர்வு. இந்த இரண்டைத் தவிர வேறு பாதிப்பு எதுவும் இல்லை.
தொண்டை வலி குறையவும் வீட்டிலிருந்த படியே மருத்துவம் பெற்று வருகிறேன். ஒரு சில நாட்களில் நிலைமை சரியாகி விடும்; அது வரை அதிகமாக பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் அதிகமாக யாருடனும் பேசுவதில்லை.
அமெரிக்காவில் மகள் வீட்டுக்கு சென்றிருக்கும் தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணையமைச்சர் அரங்க. வேலு நேற்று மாலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது குரல் கம்மி கண்ணீர் விட்டு அழத் தொடங்கி விட்டார். அவரது கண்ணீரை என்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனது உடல் நலம் குறித்து விசாரித்து என்னைத் தேற்றுவதற்காகத் தான் அவர் எனக்கு தொலை பேசினார். ஆனால், இறுதியில் கலங்கி கண்ணீர் விட்ட அவரை நான் தேற்ற வேண்டியதாகி விட்டது.
அரங்க.வேலு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதனால், அவரது உணர்வை என்னால் உணர முடிந்தது. அவரைப் போல இன்னும் ஒரு கோடி பேர் இருக்கின்றனர். அவர்களும் என்னை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் தான் எனது உயிர், எனது வலிமை எல்லாமே. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவர்களின் உணர்வு தெரியவில்லை.
மாலை நேரமாகி விட்டால் எனது ஒற்றைப் பணி பாட்டாளி சொந்தங்களுக்கு பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பது தான். அதில் எனக்கும் மகிழ்ச்சி, என்னிடம் வாழ்த்து பெறுபவர்களுக்கும் மகிழ்ச்சி. ஆனால், கடந்த இரு நாட்களாக பாட்டாளி சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. இன்றைய நிலையில் என்னை வாட்டும் பெரும் கவலை அது தான்.
பிறந்தநாள் மற்றும் திருமண நாளைக் கொண்டாடுபவர்களுக்கு என்னால் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லையே தவிர, மனதிற்குள் அனைவரையும் நான் வாழ்த்திக் கொண்டு தான் இருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் நான் குணமடைந்து விடுவேன். அதன் பிறகு அனைவரையும் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பேன். அனைவருக்கும் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment