சோழர்கள் கடல் கடந்தது எப்படி?
10.09.2022 டைம்ஸ் ஆங்கில ஏடு ஆய்வுக் கட்டுரை 3 சுருக்கம்.
கடுவையாறு ஆறு கடலுடன் கலக்கின்ற இடத்தில் இருக்கின்ற நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்துதான்,
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்களின் கடல் படை அணிவகுத்துப் புறப்பட்டது.
ஆனால், அதற்கும் முந்தைய பண்டைக் காலத்தில், காவிரிபுகும்பட்டினம்தான், தமிழ்நாட்டின் பெரிய துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது.
கடுவையாறு வழியாக, சோழர்களின் கலங்கள் உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பொருட்களைக் கொண்டு வந்தன.
அங்கே நாவாய்கள் அணிவகுத்து நின்றதாக, தேவாரப் பாடலில் அப்பர் குறிப்பிடுகின்றார்.
சோழர்கள் கலம் கட்டுவதற்காக,
புன்னை, பாளை,, அயினி, வேங்கை, தேக்கு, வேம்பு, நாவல், பூவரசு, இலுப்பை போன்ற பல வகையான மரங்களைத் தெரிவு செய்து வெட்டி,
அந்த மரத்துண்டுகளைக் கடலில் ஊறப் போட்டு விட்டுவிடுவர். அவை, பல வாரங்கள் கடலில் மிதக்கும்.
உப்பு நீரை உறிஞ்சி அளவில் சுருங்கும்.
அதன்பிறகு, அவற்றைக் கரைக்கு இழுத்து வந்து, மேலும் பல வாரங்கள் வெளியிலில் காயப் போடுவார்கள். அவற்றின் மீது வேம்பு எண்ணெய், எலுமிச்சைச் சாறு என பலவகையான எண்ணெய்களைப் பூசுவார்கள். அதன்பிறகு, அந்த மரங்களை எலிகள் துளைக்காது.
இப்படிப் பல கட்டங்களாகப் பதப்படுத்தி,
100 அடிகள் நீளமும், 30 அடிகள் அகலமும் கொண்ட ஒரு கலத்தைக் கட்டுவதற்கு, ஓராண்டு ஆகும்.
10 அடிகள் அகலமும், 150 அடிகள் நீளமும் கொண்ட சிறு கலங்களும் செய்தனர். அவை வங்கம் எனப்பட்டன.
சோழர்கள் கட்டிய கலங்கள் முழுமையும் மரத்தால் ஆனவை. இரும்பு பயன்படுத்தவில்லை. இணைப்புகள் அனைத்தும் மரங்களால் செய்யப்பட்டவைதான்.
அந்தக் கலங்களின் முகப்பில், யானை, சிங்கம், எருமைத் தலைகளைச் செதுக்கினர். மயில், முதலை, பாம்பு, புலி வடிவங்களும் உண்டு.
இன்று நமக்கு வழிகாட்டுகின்ற ஜிபிஎஸ் போல, அன்று சோழர்களின் கடலோடிகள், தங்கள் விரல் நுனியில் கணக்கு வைத்து இருந்தனர். அது விரல் கணக்கு எனப்படும்.
கடல் நீரோட்டத்தைக் கணித்து, அதன் போக்கிலேயே நீந்துகின்ற ஆமைகளைப் பின் தொடர்ந்து கலம் செலுத்தினர் என்று சொல்லப்படுகின்றது.
இத்தகைய தொழில்நுட்பங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்தன. அதுபோல, கடல் நீரோட்டத்தைக் கணிக்க, மேலும் பல வழி முறை0களைக் கையாண்டனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து 2300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற கடாரத்திற்கு, சோழர்களின் கலங்கள் 30 நாள்களில் போய்ச் சேர்ந்தன.
சோழர்களின் கலங்களில், அரிசி, பருப்புகள், கருவாடு, காய வைத்த இறைச்சி, கடலில் பிடித்த மீன்கள் மற்றும் பல்வேறு பொருட்களைக் கொண்டு சென்றார்கள்.
பெரிய பெரிய அண்டாக்களில், குடிநீர் தேக்கி வைத்து இருந்தனர். வழியில் உள்ள தீவுகளில், குடிநீரைச் சேகரித்துக் கொண்டனர்.
இன்று கலங்கரை விளக்கம் போல,
அன்று கடற்கரைகளில் எண்ணெயில் முக்கிய துணிகளைக் கொண்டு தீப்பந்தங்களை எரித்து, கலங்களுக்கு வழி காட்டினர்.
அதைத்தான் சங்க இலக்கியங்கள்,
கலங்கரை விளக்கம் எனக் குறிப்பிடுகின்றன. அந்தச் சொல்லை, இன்றைக்கும் நாம் பேசி, எழுதி வருகின்றோம்.
கப்பல் என்ற சொல், 17 ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு வரையிலும், கலம், நாவாய், வங்கம் போன்ற சொற்களே பயன்பாட்டில் இருந்தன.
மலாக்கா நீரிணை வழியாக, சோழர்கள் தாய்லாந்து, கடாரம், சீனம் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்டு வந்த கடல் வணிகத்தை, இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜயப் பேரரசின் கடல் படைகள் மறித்துக் கொள்ளை அடிக்க முயன்றன.
எனவே, இராசேந்திர சோழன், ஒரு பெரும் கடல் படையை அமைத்து, மலாக்கா நீரிணையில், ஸ்ரீ விஜயப் பேரரசின் படைகளைத் தோற்கடித்து,
அவர்களுடைய கடல் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டினார். கடாரம், சுமத்ரா பகுதிகளில் சோழப் படை வீரர்களைக் குடி அமர்த்தினார்.
கடாரம் என அழைக்கப்படுகின்ற,
மலேசியாவின் இன்றைய கெடா மாநிலத்தில், புஜாங் பள்ளத்தாக்கு பகுதியில், அத்தகைய குடியிருப்புகளை இன்றும் காணலாம். சோழப் படைகள் கட்டிய கோவில்களும் உள்ளன.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் செதுக்கப்பட்டு உள்ள பௌத்த சிற்பங்களில், சோழர்களின் கலம் மற்றும் சோழப் படை வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.
இன்று நாகப்பட்டினம் நீதிமன்றம் இருக்கின்ற இடத்தில்தான், அன்று ராஜராஜ சோழன் அமைத்த பௌத்தர்களின் விகாரை இருந்தது.
தான் கடல் கடந்து கலம் செலுத்தியதை,
தஞ்சாவூர் பெரிய கோவிலில், ராசேந்திர சோழன் கல்வெட்டுகளில் பொறித்து உள்ளார்.
மேலும் விவரங்கள் அறிய, டைம்ஸ் ஆங்கிலக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.
கடல்வழி வணிகம் என்ற தலைப்பில்,
கடலோடி நரசய்யா அவர்கள் எழுதி இருக்கின்ற புத்தகத்தையும் படியுங்கள்.
பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு.
25 பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014
தொலைபேசி 2813 2863
கடல், கப்பல் என்ற தலைப்பில் நான் புத்தகம் எழுதியபொழுது, அவரைச் சந்தித்து உரையாடினேன்.
எனது முயற்சியைப் பாராட்டினார்.
The Agnipuratchi is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment