அக்னிப்புரட்சி இன்றைய (13.09.2022) முக்கிய செய்திகள்.
* எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.
* அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது.
* ஞானவாபி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடக்கும்: வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு
வாரணாசி: ஞானவாபி மசூதி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் மசூதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதனை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அன்ஜூமான் இண்டஜமியா மஸ்ஜித் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஞானவாபி மசூதி வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருந்தது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது. இதில் இருதரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய மாவட்ட நீதிபதி ஏகே. விஷ்வேஷ், ஞானவாபி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும். மசூதி தரப்பில் ஆஜரான மனு நிராகரிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். மேலும், வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்....
* திருவள்ளூர்,மஞ்சக்கரணையில் செயல்படும் வேல்ஸ் மருத்துவமனைக்கு விதிகளை மீறி அனுமதி என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார்.
திரைப்பட தயாரிப்பாளர்,வேல்ஸ் கல்விக்குழும தலைவர் ஐசரி கணேஷ் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.
வேல்ஸ் குழும மருத்துவக் கல்லூரி வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.
* எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.
கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார்.
தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு.
தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதால் கைது என தகவல்.
* தெலங்கானா : செகந்திராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் - பிரதமர் மோடி
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் - பிரதமர் மோடி
* எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
19 வது இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய நிதின் கட்கரி பேசுகையில்,
மத்திய போக்குவரத்துத் துறை ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்வதற்காக ‘தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்' பொருத்தப்படவுள்ளது.
இதன்மூலம், கட்டணச் சாலைகளில் வாகனத்தில் செல்பவர்கள், அவர்கள் செல்லும் தூரத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கணக்கிடப்பட்டு, உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணம் எடுத்துக் கொள்ளப்படும். இதன்மூலம், சுங்கச் சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
கடந்த 2018-2019ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு சுங்கசாவடியை கடந்து செல்ல 8 நிமிடங்கள் ஆனது. ஆனால், ஃபாஸ்ட் டேக் திட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் நேரமானது 47 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இதுவரை முடிவெடுக்கவில்லை என்றாலும், இந்த புதிய திட்டம் அறிமுகமானால், எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இருக்காது” எனத் தெரிவித்தார்.
* ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் ‘தரகிரி' அறிமுகம்
ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த தரகிரி போர்க்கப்பல் உடன் எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவுள்ளன. எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் ஏழு பி17ஏ ரக போர்க்கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.
ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க்கப்பல் போன்ற சிக்கலான முன்னணி கப்பல்களின் உள்நாட்டு கட்டுமானம், கப்பல் கட்டும் துறையில் நாட்டை ஓர் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மேலும், இதன்மூலம் பொருளாதார மேம்பாடு, இந்திய கப்பல் கட்டும் தளங்கள், அதன் துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்களில் வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும். 17ஏ போர்க்கப்பலின் 75% ஆர்டர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, சேவை கட்டணம் இரு மடங்காக உயர்வு
சென்னை: மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணங்கள் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம், வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் மூலமாகவும், தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவும் மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்கள் இருமடங்காக நிர்ணயம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, மின்கம்பங்கள் மூலமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளில் மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750, இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000, பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800, வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200, வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம், இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000, மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750, வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு மின் கட்டண விவரம்: https://youtu.be/DcPX8d3uVL0
மேலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒருமுனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக ரூ.5,200-ம், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.7,100-ம் கூடுதலாக வசூலிக்கப்படும். வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆகவும், பழுதடைந்த மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின்இணைப்புக்கு ரூ.500-ல்இருந்து ஆயிரம் ரூபாயாகவும், மும்முனை மின்இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருமுனை மின்இணைப்பு மீட்டரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது
* பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய தேசியக் கொடியை அசைத்த அப்ரிடி மகள் - காரணம் என்ன?
லாகூர்: நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தனது மகள் இந்திய தேசியக் கொடியை பிடித்தார் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. சூப்பர்-4 சுற்றில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. அந்த அணிக்கு முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இந்தப் போட்டியின்போது தான் தனது மகள் இந்திய தேசியக் கொடியை அசைத்ததாக பேசியுள்ளார் ஷாஹித் அப்ரிடி.
பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேசும்போது இதை வெளிப்படுத்திய அப்ரிடி அதற்கான காரணத்தையும் விளக்கினார். அதில், “ஸ்டேடியத்தில் 10% பாகிஸ்தான் ரசிகர்கள் இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் இந்திய ரசிகர்கள் என்றும் என் மனைவி என்னிடம் கூறினார். அங்கு பாகிஸ்தான் கொடிகள் கிடைக்கவில்லை, அதனால் எனது இளைய மகள் இந்தியக் கொடியை அசைத்துக்கொண்டிருந்தார். நான் அங்கு இல்லை. எனினும் அந்த வீடியோ எனக்கு கிடைத்தது. ஆன்லைனில் பகிரலாமா வேண்டாமா என்பது தெரியாததால் அதை வெளியிடவில்லை" என்று தெரிவித்தார்.
அப்ரிடி மகளின் இந்த செயல் இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்றிருந்த அப்ரிடி, அங்கு இந்திய ரசிகர்களை சந்திக்கும்போது இந்திய தேசியக்கொடியை பிடித்து போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது
* ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது?
ப்ரீ பயர் போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிபதிகள் கருத்து.
தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - நீதிபதிகள்.
நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.
* மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ( CSSS ) பெற அக்டோபர் 31-ம் தேதி வரை scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை tndce.in இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
* திமுக அமைச்சருக்கு எதிராக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை திசை திருப்ப, எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் நடத்தும் நாடகம் லஞ்ச ஒழிப்பு சோதனை-தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம் - ஈபிஎஸ்.
* அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன - சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்.
விசாரணை குறித்த அறிக்கையை செப்.19ல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிபிசிஐடி விசாரணையை விரைந்து மேற்கொள்ள கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு செப்.19க்கு தள்ளிவைப்பு.
* குவைத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடலை கேட்டு கூத்தாநல்லூரில் பேரணி.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன், குவைத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு நீதியும், அவரது உடலையும் கேட்டு, கூத்தாநல்லூர் மக்கள் சார்பில் பேரணி நடைபெற்றது.
* டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் ஷமி இல்லாததற்கு இதுதான் காரணமா?
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் முகமது ஷமியின் பெயர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அணியில் பும்ரா, அர்ஷல்,அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அர்திக் பாண்டியாவும் ஃபார்முக்கு வந்துவிட்டார். இதனால் ஷமிக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ கவனம் செலுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
* சென்னை-பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் சேவை விரைவில் தொடக்கம்
சென்னை-பெங்களூரு இடையே 'வந்தே பாரத்' ரயில்களை இயக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. சென்னை பேசின்பாலம் நிலையத்தில் இருந்து இந்த ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அங்கு ரூ.19 கோடி செலவில் 6 ரேக் வசதி உருவாக்கப்படுகிறது.
* ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்த சச்சின்
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு இன்று (13ம் தேதி) 53வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ''உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன் வார்னி! சீக்கிரம் சென்று விட்டீர்கள். உங்களுடன் பல மறக்கமுடியாத தருணங்கள் உள்ளன. நமது நட்பு என்றென்றும் அவற்றை நினைவு கூறும்'' என்று கூறியுள்ளார்.
* அடுத்த ஆஸ்திரேலியா கேப்டன் யார்?
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆருண் ஃபின்ச் ஓய்வு பெற்றுள்ளார். டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு சர்வதேச ஓய்வை அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணைக் கேப்டனே அடுத்த கேப்டன் என்ற முறைப்படி பேட் கம்மின்ஸ்தான் அடுத்த கேப்டன் ஆக வேண்டும். ஆனால் கம்மின்ஸ், வார்னர் கேப்டனாக வேண்டும் என்று கூறியுள்ளார். வார்னரைவிட ஸ்மித்துக்கும் அதிக வாய்ப்புள்ளது.
* முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பான சோதனையில் ₹32.08 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் தங்கம், 348 கிராம் வெள்ளி மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டன.
வழக்கில் தொடர்புடைய 315 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன லஞ்ச ஒழிப்புத்துறை.
* முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான சோதனையில் ₹18.37 லட்சம் பணம், 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டன.
வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் பரவும் திடீர் காய்ச்சல்...
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த ஃபுளூ காய்ச்சல்’ ஏற்படுகிறது.
குழந்தைகளை தாக்கும் ஃப்ளூ காய்ச்சல்
தற்போது குழந்தைகளிடையே வேகமாக பரவிவரும் ப்ளூ’ வகை காய்ச்சல் 3 முதல் 4 நாட்கள் நீடிக்கிறது.
கடுமையான காய்ச்சல், உடல் சில்லிடுதல், அதீத சோர்வு, தலைவலி, உடல்வலி, வறட்டு இருமல், தொண்டைப் புண், வாந்தி மற்றும் அடிவயிற்று வலி உள்ளிட்டவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
இருமல் குறைய 2 வாரங்கள் கூட ஆகலாம். குழந்தைகளுக்கு ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவல்: என்ன செய்வது?
தற்போது பரவும் காய்ச்சல் சில நாட்களில் குணமாகிவிடும் என்றாலும், குழந்தைகளுக்கு அதிக அசவுகரியத்தை அளிக்கிறது.
ஏற்கெனவே காய்ச்சல் பாதித்த குழந்தை (அ) நபரின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் சளித்துளிகள் காற்றில் பரவி, அடுத்தவருக்கு காய்ச்சல் தொற்றுகிறது.
நோயாளிகளின் எச்சில் (அ) சளியை தொட நேர்வதாலும் இது தொற்றலாம். சுத்தமாக கை கழுவுவது, முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இதை தடுக்க உதவும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
* முன்னாள் அமைச்சர் காலமானார்:
கடலூர்: தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஜனார்த்தனன்(76) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் தே.ஜனார்த்தனன்.
The Agnipuratchi is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment