அக்னிப்புரட்சி இன்றைய (16.09.2022) முக்கிய செய்திகள்.
* திருப்பூர்: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்;
தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை.
* கடல் மட்டம் உயர்வு: சென்னை ரயில் நிலையங்கள் 100 ஆண்டுகளில் கடலுக்குள் முழ்கும் அபாயம்
சென்னை: கடல் மட்டம் உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள மின் நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் அபாயம் உள்ளதாக சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் "நெகிழ் திறன், உந்துதலுடன் சென்னை" என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகள் இந்தச் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் சென்னை அதிக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செ.மீ உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் முக்கிய அம்சம்:
2100-ம் ஆண்டில் சென்னையில் 16 சதவீத பகுதிகள் கடலில் முழ்கும்.
கடல் மட்டம் உயர்வால் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
17 சதவீத அளவில் குடிசைகளில் வாழும் 2.6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
2100-ம் ஆண்டில் 28 பேருந்து நிறுத்தங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும்.
4 புறநகர் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும். 2 மின் நிலையங்கள் கடலில் முழ்கும்
* கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதிய நிர்ணய சுற்றறிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 28.2.2014-ல் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.செல்வகுமார், மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்லையா நாடார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கையை ரத்து செய்து, கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணப்பலன்கள், பணி நியமனம் விவகாரத்தில் கூட்டுறவு சங்கங்களே முடிவெடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: ''இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த மத்திய அரசு பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் குழு அமைத்தது. இந்தக் குழு கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது. இந்த பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன. இந்த பரிந்துரை அடிப்படையில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களும் தன்னாட்சி பெற்ற குறுகிய கால கடன் அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு, ஊழியர்கள் நியமனம், ஊதிய நிர்ணயம், பணப்பலன் குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கூட்டுறவு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கை கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கையில் தன்னாட்சி அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர் நியமனம், ஊதியம், பணப்பலன் நிர்ணயம் ஆகியனவும் அடங்கும். தன்னாட்சி அதிகாரத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரோ, அரசோ தலையிட முடியாது.
இதனால் பதிவாளரின் சுற்றறிக்கை விதி மீறலாகும். கூட்டுறவு சட்டத்துக்கு எதிரானது. கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க நிர்வாகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதனால் கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
* குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் ஆகியோரையும் நீக்கி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், "ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்” எனக் கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜி ரவீந்திரன் , "ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான குழந்தைகள் உரிமை சட்டப்பிரிவையும், அப்பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டப்பிரிவையும் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
* தமிழ்நாட்டில் H1N1 காய்ச்சல் காரணமாக ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 9 குழந்தைகள் உயிரிழப்பு - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
* சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே
360 மீட்டர் உயரம் கொண்ட பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க முதல் கட்ட அனுமதி வழங்கியது மத்திய அரசு
* சுதந்திரப்போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது 105வது பிறந்தநாள்.
கடலூரில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை.
சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் புகைப்படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை.
* மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது.
தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது.
மதுரையில் இயங்கி வரும் 50,000 சிறு குறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது- தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்.
* புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா - அமைச்சர் சேகர்பாபு
திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுலா
பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது
* டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
* நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்
ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார். தமிழகத்தை ஆட்சி செய்வது அவரின் மகனும், மருமகனும், மனைவியும்தான்!
* தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பேச்சு
திருவாரூர் : விக்கிரபாண்டியம் பகுதியில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை
டாஸ்மார்க் ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் அதிரடி உத்தரவு
திமுக அரசு பொறுப்பு ஏற்ற முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை.
இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது- மின் கட்டண உயர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு.
மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராகவே உள்ளார். திமுகவின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
மக்களின் பிரச்னைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை.
திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு.
திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல்- மின் கட்டண உயர்வை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு.
* தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிவை கண்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.61.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
* ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் சென்றிருக்கும் இந்திய பிரதமர் மோடி இன்று ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களையும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொள்ள இருக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துருக்கிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளன.
இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதனிடையே உஸ்பெகிஸ்தானில் குடியரசு தலைவர் மற்றும் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்தும் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரை சந்தித்து பேசும் நிகழ்வு என்பதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
* சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வங்கக் கடலில் 360மீ உயரத்தில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.
மாசு கட்டுப்பட்டு வாரியம் மற்றும் சுற்றுசூழல் அனுமதியைப்பெற்று அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க திட்டமிடப்ப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை கோரிய மனு.
அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல எனக்கூறி பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - மனு தள்ளுபடி.
* மதுரையில் டைடல் மற்றும் மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக நடக்கும் இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு.
இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் என காலியாக உள்ள 15 இடங்களை நிரப்ப குரூப் 3 ஏ தேர்வு.
அக்டோபர் 14ம் தேதி வரை tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
* ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ரூ.20 முதல் ரூ.80 வரை விலை உயர்வு - ஆவின்.
* சென்னையில் சற்றே அதிகரிக்கும் கரோனா: கட்டாயம் மாஸ்க் அணிய மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை: சென்னையில் கரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 97.69% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 86.62% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போது வரை 6,02,998 முன்னெச்செரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் நேற்று (செப்.14) தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனவே, வரும் பண்டிகை காலங்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
* ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாட்டில் சம்பாதித்தது எவ்வளவு?
டென்னிஸ் ஜாம்பவான், ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லேவர் கோப்பை (Laver Cup) டென்னிஸ் அவரின் கடைசி தொடராக அமையவுள்ளது. கடந்த 1998ல் டென்னிஸ் உலகில் அறிமுகமான ரோஜர் ஃபெடரர், ஏடிபி (ATP) ரேங்கிங் தரவரிசையில் சுமார் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர். அதில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 6 ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்ச் ஓப்பன், 8 விம்பிள்டன், 5 யு.எஸ் ஓப்பன் என 20 முறை சாம்பியன் பட்டம் வென்றுவர். 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர்.
இப்படியாக டென்னிஸ் உலகில் அவர் எட்டாத உயரங்களே இல்லை. இருந்தபோதும் காயங்கள் அவரை ரொம்பவே வருந்தச் செய்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்களும் ஆபரேஷன்களும் அவரை நோகடித்தன.
எனினும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தைச் சேர்த்து டென்னிஸ் விளையாட்டின் மூலம் ஃபெடரர் சம்பாதித்த பரிசுத் தொகை $130.5 மில்லியன். இந்திய மதிப்பில் தோராயமாக 1041 கோடி ரூபாய். இந்த தொகையானது, சாம்பியன் பட்டங்கள் வென்றதன் மூலம் மட்டுமே. இதுதவிர, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரம் மூலம் ஃபெடரர் பெற்ற கூடுதல் வருமானங்கள் சேர்க்கப்படவில்லை.
என்றாலும், ஜோகோவிச், நடாலுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்திலேயே ஃபெடரர் உள்ளார். முதல் இடத்தில் 158.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் 131.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நடாலும் உள்ளனர்.
ஃபோர்ப்ஸ் இதழ்படி, 90.7 மில்லியன் டாலர் இந்த ஆண்டு மட்டும் பிற வருமானங்கள் மூலம் ஃபெடரர் ஈட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்” - ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடரர்
டென்னிஸ் விளையாட்டு உலகத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெகு விரைவில் தொடங்க உள்ள லேவர் கோப்பை (Laver Cup) டென்னிஸ் தொடர்தான் அவரது கடைசி தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. அவருக்கு வயது 41.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஃபெடரர். கடந்த 1998 வாக்கில் டென்னிஸ் உலகில் அறிமுகமானார். அவர் முதன்முதலில் சர்வதேச அளவிலான தொடரில் விளையாடியது அவரது தாய்நாட்டில்தான். அங்கிருந்து தொடங்கிய அவரது டென்னிஸ் ராக்கெட்டின் (பேட்) அரசாட்சியை யாராலும் அணை போட்டு தடுக்க முடியவில்லை.
ஏடிபி (ATP) ரேங்கிங் தரவரிசையில் சுமார் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர். அதில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதலிடத்தை தனக்கானதாக சீல் செய்தவர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டுமே 20 முறை சாம்பியன் பட்டம் வென்றுவர். அதில் விம்பிள்டன் அரங்கில் மட்டும் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றார்.
இப்படியாக டென்னிஸ் உலகில் அவர் எட்டாத உயரங்களே இல்லை. இருந்தபோதும் காயங்கள் அவரை ரொம்பவே வருந்தச் செய்தன. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பிரதான டென்னிஸ் தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில்தான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார். “24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
* சபரிமலையில் வரும் மண்டல காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து; ஆலோசனை கூட்டத்தில் முடிவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 17ம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்தில் தான் தொடர்ந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும். மகர விளக்கு காலத்தில் தொடர்ந்து 20 நாட்கள் நடை திறந்திருக்கும். பிரசித்தி பெற்ற இந்த 2 பூஜை காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் குவிவது வழக்கம். அப்போது சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். கடந்த பல வருடங்களுக்கு முன்பு சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் தான் மிக அதிகமாகும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி, முக கவசம் உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த 2 வருடங்களாக மண்டல, மகரவிளக்கு சீசன் சமயங்களிலும், மாத பூஜைகளின் போதும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்தது. இதனால் கோயில் வருமானமும் குறைந்தது. இந்த நிலையில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 17ம் தேதி திறக்கப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கடந்த 2 வருடங்களாக சபரிமலையில் அமல்படுத்தப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகளை இந்த வருடம் நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தரிசனத்திற்கு தினசரி எண்ணிக்கை கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. எத்தனை பேர் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக நிலக்கல் உட்பட 12 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....
* மயிலாடுதுறை - திண்டுக்கல் & மதுரை- செங்கோட்டை ரயில்கள் ஒருங்கிணைத்து மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலாக மாற்றம்.
* உக்ரைன் மருத்துவ மாணவர்கள் வழக்கு:
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரிய வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் - சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா.
* ஒரு வாரத்திற்குள் போலி பத்திரங்களை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் அமுலுக்கு வர உள்ளது.
போலி பத்திரப்பதிவு எப்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ரத்து செய்யப்படும்- அமைச்சர் பி.மூர்த்தி.
* பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை.
1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9ம் தேதி வரை விடுமுறை.
எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.
* புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை.
புதுச்சேரியில், காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
* நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை அக்டோபர் 26 வரை நீட்டிப்பு-சென்னை உயர் நீதிமன்றம்.
2016- 17 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கில் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு.
சட்டப்படி உரிய காலத்தில் பிறப்பிக்கப்படாததால் அபராத உத்தரவை ரத்து செய்ய வேண்டும் - விஜய்.
* இறுதி சடங்குக்கு பிறகு இங்கிலாந்து முழுவதும் 2 நிமிடம் ராணிக்கு மவுன அஞ்சலி
லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, நாடு முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், கடந்த 8ம் தேதி தனது 96 வயதில் இறந்தார். அவருடைய இறுதிச் சடங்கு வரும் 19ம் தேதி நடக்கிறது. அவருக்கு அருகில், கடந்தாண்டு ஏப்ரலில் உயிரிழந்த அவருடைய கணவர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது. தனது இறுதிச்சடங்கின் போதே கணவரையும் தனக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்பது ராணியின் கடைசி விருப்பம். அதற்காகவே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிலிப்பின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 19ம் தேதி ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நிரலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அதில், ‘ராணியின் உடல் இறுதிச் சடங்குக்கு முன்பாக, குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் லண்டனின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்படும். பின்னர், வின்சர் கோட்டை வளாகத்தில் நடக்கும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட 2 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். ராணியின் உடலுக்கு அருகே அவருடைய கணவர் பிலிப் உடலும் அடக்கம் செய்யப்படும். ராணியின் இறுதிச் சடங்கிற்கு பிறகு, இங்கிலாந்து முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது....
* புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அதிகம் பரவுவதால் கல்வித்துறை விடுமுறை அறிவிப்பு.
* INFORMATION
நாணயங்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதால், வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் ஒரே மதிப்புள்ள நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும். மேலும் அறிய 14440 -க்கு அழைக்கவும். - RBI
No comments:
Post a Comment