அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.09.2022) முக்கிய செய்திகள்.

* மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.

மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் உள்ள பாப்புலர் பிரன்ட்ஸ் ஆப் இந்தியா (PFI) அலுவலங்கள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை.

மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி: பஞ்சாப் முன்முயற்சித் திட்டம்

JOIN US: https://t.me/Agnipuratchi1

* பஞ்சாப்: மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி அளிக்கும் சலுகையை முன்முயற்சித் திட்டமாக பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.

பஞ்சாப் சிறைத்துறையின் இந்த முடிவு குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல்: பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் இது நடைமுறைக்கு வர இருக்கிறது.

நபா மாநகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரு சிறைச்சாலைகளில் இது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது.

சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது இணையருடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்படும். இத்தகைய அனுமதியின் மூலம், சிறைக் கைதிகளிடம் நன்னடத்தை அதிகரிக்கும். அதோடு, அவர்களின் திருமண பந்தமும் வலுப்படும். இத்தகைய அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை, கரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றுடன் வரும் மனைவி அல்லது கணவனுக்கு மட்டுமே சிறையில் உள்ள தங்கள் இணையருடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற ஒரு சலுகையை அளிக்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என அந்த அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* நாள் ஒன்றுக்கு ரூ.1612 கோடி வருமானம்: ஒரே ஆண்டில் சொத்து மதிப்பை இரட்டிப்பாக்கிய கெளதம் அதானி

நாள் ஒன்றுக்கு சுமார் 1612 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதன் மூலம் ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை கெளதம் அதானி இரட்டிப்பு ஆக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இது தெரியவந்துள்ளது. அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இது ப்ளூம்பெர்க் பட்டியலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை காட்டிலும் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக பெற்று அதானி முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு சுமார் 10.94 லட்சம் கோடி ரூபாயாம்.

அதானி குழுமத்தின் பங்குகளின் விலை ஏற்றம் கண்ட காரணத்தால் கடந்த வாரம் உலக அளவில் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி எட்டி இருந்தார். அவர் அமேசான் நிறுவனர் பெசோஸை பின்னுக்கு தள்ளி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் வாக்கில் அவர் 100 பில்லியன் டாலர் செல்வந்தர்களுக்கான கிளப்பில் இணைந்திருந்தார். அதே போல அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 15.4 முறை என்ற கணக்கில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அம்பானி 7.94 லட்சம் கோடி ரூபாயை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய செல்வந்தர்களில் முதலிடத்தில் அம்பானி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 தாள்-2 என 2 நிலையில் நடைபெறும். தாள்-1 ஸ்பீடு தேர்வாகவும், தாள் – 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வாகவும் நடைபெறும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இளநிலை, முதுநிலை தேர்வில் தாள்- 1ல் ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர், தாள்-2ல் ஸ்பீடு தேர்வும் நடைபெறும் என தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தேர்வு முறையை ரத்து செய்து பழைய தேர்வு முறையிலேயே தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பழைய முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்து புதிய தேர்வு முறைப்படி தட்டச்சு நடத்தக் கோரி திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதில், கர்நாடகா, ஆந்திராவிலும் தட்டச்சு தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பலன் அளிக்கும். புதிய தேர்வு முறை அறிவிக்கப்பட்டதும் மாணவர்களை புதிய தேர்வு முறைக்கு தயார்படுத்தி வருகிறோம். மாணவர்களும் புதிய முறையில் தட்டச்சு தேர்வு எழுத தயாராக உள்ளனர். தனி நீதிபதி உத்தரவால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ‘தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக் கூடாது’ என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

* ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? - இணையத்தில் அறியும் எளிய வழி

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 21, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்று இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல்.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், அக்.3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

* நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம், கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு நிர்வாகிகளின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

* சென்னை குடிநீர் வாரியத்தில் உங்களின் புதிய வார்டை தெரிந்துகொள்வது எப்படி?

சென்னை: சென்னையில் குடிநீர் வாரியம் தங்களது பகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்துள்ளது.

சென்னையில் குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் செய்து வருகிறது. சென்னை குடிநீர் வாரிய நிர்வாக அமைப்பின் கீழ் சென்னை மாநகராட்சி வடக்கு, வட கிழக்கு, மத்திய, தெற்கு, தென் மேற்கு என்று 5 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பகுதியிலும் 3 பகுதிகள் என்று மொத்தம் 15 பகுதிகள் உள்ளன. இந்த 15 பகுதிகளும் பகுதி பொறியாளர்களின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் எல்லைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிப்டையில் உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மறு சீரமைப்பின் அடிப்படையில் குடிநீர் வாரியமும் தனது பகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்துள்ளது.

இதன்படி பகுதிகளின் புதிய எல்லை தொடர்பாகன விவரம் https://bnc.chennaimetrowater.in/#/public/find-my-new-ward என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் தங்களின் மண்டலம், வார்டு, பில் எண் ஆகியவைற்றை சமர்பித்து உங்களின் புதிய பகுதி அலுவலம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

* மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்.

தமிழகத்தில் மாற்றுப்பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் ரூ.7,500, ரூ.10,000,ரூ.12,000 தொகுதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளாலாம் -பள்ளிக் கல்வித்துறை.

* இனி கார் பேக் சீட்டுக்கும் அலாரம் கட்டாயம்: அரசு முடிவு

கார்களின் பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் அலாரம் வைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக மக்கள் அக்.,5க்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கார்களின் முன் இருக்கையில் சீட் பெல் அணிவது கட்டாயமாக உள்ளது.

அப்படி அணியவில்லை என்றால், சீட் பெல்ட்டில் அலாரம் ஒலிக்கும். அதைபோன்று பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் இதை கட்டாயம் ஆக்க அரசு முடிவு செய்து, அதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

* தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதி - தேர்தல் கமிஷன் பரிந்துரை

முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

சட்டசபை, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடுகிற அரசு பணியாளர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் தபால் ஓட்டு போடும் நடைமுறை உள்ளது. தேர்தல் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறபோது தபால் ஓட்டுக்கான படிவம்-12 பி வழங்கப்படுகிறது. அதை அவர்கள் நிரப்பி வழங்குகிறபோது, பயிற்சி வகுப்பு முடிகிறபோது வாக்குச்சீட்டு வழங்கப்படும்.

அவர்கள் ஓட்டை பதிவு செய்து, தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் பலரும் தபாலில் அனுப்புவதற்கே அனுமதி பெறுவதாக கூறப்படுகிறது.

தேர்தல் பணியாளர்கள் பலரும் ஓட்டை உடனே செலுத்தி தபாலில் அனுப்பாமல், ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நேரத்தில் போய்ச்சேரும்படி தபாலில் அனுப்புகிறார்கள்.

இது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது.

எனவே தபால் ஓட்டு தொடர்பான விதிமுறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. கடந்த 16-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த தேர்தல் கமிஷன் கூட்டத்தில் ஒரு முக்கிய பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அதாவது, தேர்தல் பணியாளர்கள் தங்கள் வாக்குச்சீட்டை நீண்ட காலம் தங்களிடம் வைத்துக்கொள்வதால் அதைத் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்கான நியமிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே செலுத்தும் வகையில் விதியை மாற்ற வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

இந்த விதி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அமல்படுத்தப்பட்டால் இது தேர்தல் பணியில் ஈடுபடுகிற அரசு ஊழியர்கள் நீண்ட காலம் வாக்குச்சீட்டை தங்கள் வசம் வைத்திருந்து, அதனால் ஓட்டுக்கு பணம் வாங்குதல், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகுதல், வேட்பாளர்களின் செல்வாக்குக்கு பயந்து செயல்படுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் 18-ல் மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

* கட்சியின் ஆயுள் தலைவராக ஜெகன் தேர்வு : சந்தேகத்தை எழுப்பியது தேர்தல் ஆணையம்

புதுடில்லி: ஆந்திராவில் ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்., கட்சியின் ஆயுள் தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

ஆந்திராவில் மறைந்த முன்னாள் காங்., முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவையடுத்து, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2011-ல் ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சியை துவங்கினார். அடுத்து வந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார்.

இந்நிலையில் இக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற இரண்டு நாள் கூட்டம் கடந்த ஜூலையில் துவங்கியது. அப்போது கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவராக இருந்த ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து மறுநாள் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆயுள் தலைவராக இருக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விதிமுறைகளின் படி உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் ஆணையம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது

* INDvsAUS 2வது டி20: கிரிக்கெட் ரசிகை மரணம்..20 பேர் காயம்

ஐதராபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியை காண டிக்கெட் வாங்கும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கிரிக்கெட் ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கான பேர் குவிந்ததால், கூட்டத்தை கலைக்க போலீசார்  தடியடி நடத்தியதில் 5 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். ரசிகை மரணம், போலீஸ் தடியடியை தொடர்ந்து டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

* கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது, சரியான அரசு ஆட்சி செய்கிறது.

தொழிற் துறையில் முதலீடு செய்வதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டிலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது-மதுரையில் நடந்து வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் தேசிய தலைவர் ஜேபி நட்டா பேச்சு.

மேக்கிங் இந்தியா திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர்.
பல்வேறு வளர்ச்சிக்கு மற்றும் தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது.

ரூ. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் வளர்ச்சிக்கும்,கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி உள்ளது.

பயண நேரத்தை குறைப்பதற்கு 4, 6 வழிச்சாலைகளை சாகர்மால திட்டம் என கொண்டு வந்தது.- பாஜக ஜேபி நட்டா.

* அருப்புக்கோட்டை நகர் போலீசாரின் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கப்பாண்டியின் என்பவரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கு.

உறவினர்கள் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

உடலை வாங்க தவறினால், காவல் துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வது போன்று அடக்கம் செய்யலாம்-நீதிபதி.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அவரது உடலை உறவினர்கள்பெற்றுக்கொள்ள வில்லை என அரசுத்தரப்பு தெரிவித்த நிலையில் உத்தரவு.

* தருமபுரி அருகே இரும்பு பீரோவை தூக்கும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.

கயிறு கட்டி மாடிக்கு தூக்கப்பட்ட பீரோவை இறக்கிய போது மின்கம்பி உரசி விபத்து.

* உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு.

தேசிய நெடுஞ்சாலை எண்-109ல் போக்குவரத்து துண்டிப்பு- காத்திருக்கும் வாகனங்கள்.

சீரமைப்பு பணி முடிந்ததும் போக்குவரத்து தொடங்கும்- ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம்.

* ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி:

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி.

நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு.

செப்டம்பர் 28-க்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு.

* என்ஐஏ சோதனைகள் மற்றும் கைதுகளை கண்டித்து செப்டம்பர் 23ம் தேதி (நாளை) கேரளா முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு.

* 2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரம்:

ரூ.3 கோடி இழப்பீடு கோரி பொறியாளர் சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

* தருமபுரியில் மின்சாரம் தாக்கி மூவர் சாவு: பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்

தர்மபுரி சந்தைப்பேட்டையில், வீட்டில் இருந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் போது மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சந்தைப்பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்த இலியாஸ் என்பவர், வீட்டை காலி செய்வதற்காக அந்த வீட்டில் இருந்த பொருட்களை மாடியிலிருந்து கீழே இறக்கிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், கோபி ஆகியோர் இரும்பு பீரோவை கயிற்றில் கட்டி, மேலிருந்து இறக்கும் போது வீட்டை ஒட்டிச் சென்ற. உயரழுத்த மின்சார கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.

இலியாஸ், பச்சையப்பன், கோபி ஆகியோரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

* 1919-ல் முதன்முதலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.

அப்போது நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா என்ற கட்சியை சாஸ்திரி தொடங்கினார். 1915-ல் கோகலே இறந்தபோது, சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சோசைட்டியின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். சாஸ்திரி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார்.

1916 முதல் 1919 வரை இம்பரிீ யல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் பணியாற்றினார். மேலும், இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால், இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேண்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார்.

பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரி. இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்க முடியும். இம்பரிீயல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்பட்ட உரைகளில் ஒன்று. அவரின் விவாதத்தை நேரில் பார்க்க காந்தி பார்வையாளராக கவுன்சிலுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு 16 மாதங்களுக்கு முன்பு சாஸ்திரி தனது 76-வது வயதில்
சென்னையில் ஏப்ரல் 17, 1946 அன்று இறந்துபோனார். தமிழர்கள் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் சாஸ்திரி.

* தமிழகம் முழுவதும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வரும் 41 கல்லூரிகள் அரசுக்கல்லூரிகளாக மாற்றம்.

41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுவிப்பு.

இனி பல்கலைக்கழகங்களுக்கு பதில் கல்லூரிக் கல்வி இயக்ககமே ஊதியம் & இதர செலவினங்களை வழங்கும்.

* பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்:

இந்திய துறைமுகங்கள் மசோதா குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

கடலோர மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாகவும், சிறு துறைமுகங்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் மசோதா அமைகிறது.

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பிரிவுகளை வரைவு சட்டத்தில் இருந்து அகற்ற பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

* நெப்டியூன் கிரகத்தை துல்லியமாக படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

நாசா நெப்டியூன் எடுத்த முதல் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

இந்த புகைப்படம் தான் நெப்டியூன் கிரகத்தின் வளையத்துடன் எடுத்த தெளிவான படம்.

வான் ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் கிரகத்தையும் அதன் வளையத்தையும் புகைப்படம் எடுத்துள்ளது.

கடந்த 33 ஆண்டுகளில் நெப்டியூன் கிரகம் தொடர்பாக எடுக்கப்பட்ட துல்லியமான புகைப்படம் இதுவாகும்.

* பள்ளி மாணவர்களுக்கு புதிதாக, 10 வகை விளையாட்டு போட்டிகளை, இந்த ஆண்டு முதல் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி கமிஷனரக இணை இயக்குனர் அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 10 வகை விளையாட்டுகள், இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய வேண்டும்.

அவர்களுக்கு கடற்கரை கையுந்து, குத்துச்சண்டை, சுண்டாட்டம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், வளையப்பந்து ஆகிய, 10 வகை விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

இதற்காக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வரும், 28 முதல், 30ம் தேதி வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

38 மாவட்டத்துக்கு, 760 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள் உரிய முறையில் தயாராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* வேலைவாய்ப்பு பதிவில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

அரசு வேலைக்காக தமிழ்நாட்டில் 73,99,512 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்தவர்களின் விவரத்தை  மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73,99,512 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 4,53,380 ஆண்களும், 39,45,861  பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்! 

அதேபோல், 18 வயதுக்கு கீழ் வரையுள்ளவர்கள் 23,01,800 நபர்கள், 19 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 29,88,001 நபர்களும், 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,68,931 நபர்களும்,  45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,35,190  நபர்களும், 60 வயதுக்கு மேல் 5,590 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1.264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

* தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஆ.ராசா. அவரது பேச்சை கண்டித்து குரலெழுப்பிய 107 பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் - காரைக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.

இது தொடர்ந்தால் தமிழக சிறைகள் நிரம்பும் நிலை ஏற்படும். சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல.

மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை. அவர் வேறு எதற்காகவோ சிறைக்கு சென்றுள்ளார்.

இனி தமிழகத்தில் எங்களது அரசியில் அதிரடியாக இருக்கும் - அண்ணாமலை.

மோடிஜியின் ஆட்சியில் தொடர்ந்து குறைகளை மட்டுமே திமுக அரசு சொல்லி வருகிறது. குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் தான் குறையை பார்ப்பர் - பாஜக தலைவர் அண்ணாமலை

* விவசாய துறைக்கு இதுவரை 5 மடங்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.

உலகமே பொருளாதர மந்தத்தில் சிக்கி தவித்தாலும், மோடியின் ஆட்சியால் இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.

நாம் நாடு முழுவதுமுள்ள குடும்ப அரசியல் கட்சிகளுக்கு எதிராக போராடி வருகிறோம். மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் குறித்து பாஜக அக்கறை கொண்டுள்ளது.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

தங்கள் தாய்மொழிகளில் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது - ஜே.பி.நட்டா பேச்சு.

* கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages