கல்விக் கோயில் அனைத்துத் துறை
பேராசிரியர்களுடன் கல்விக்கோயில் மேம்பாடு குறித்து மகிழ்ச்சியான கலந்தாய்வு! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் அமைந்துள்ள கல்விக்கோயில் வளாகத்திற்கு இன்று மாலை சென்றேன். கல்விக் கோயில் வளாகத்தில் உள்ள சரசுவதி கலை அறிவியல் கல்லூரி, சரசுவதி பொறியியல் கல்லூரி, சரசுவதி சட்டக்கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள், அனைத்துத் துறை பேராசிரியர்கள் மற்றும் பிற நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினேன்.
சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. இளஞ்செழியன், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் எம்.வீரமுத்து மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் அண்ணாலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை பேராசிரியரும், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான முனைவர் ச.சிவப்பிரகாசமும் இந்த கலந்தாய்வில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
கலந்தாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் நான் ஆற்றிய உரை:
மாதா, பிதா ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் குருவாகிய நீங்கள் தான். இந்தக் கல்விக் கோயிலை மேம்படுத்த நீங்கள் தான் பாடுபட வேண்டும். உங்களுக்கு இங்கு வழங்கப்படுவது ஊதியம் அல்ல... ஊக்கத்தொகை. நீங்கள் மேலும், மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் தொகை.
கல்விக்கோயில் வளாகத்தில் இப்போது 3 கல்லூரிகள் உள்ளன. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இவற்றை நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டும். அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நான் ஏற்படுத்தித் தருகிறேன். நீங்கள் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இந்த பகுதியில் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக கல்விக் கோயில் உருவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
கல்விக் கோயில் வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளின் தலைமை நிர்வாக அதிகாரியாக ( சி.ஏ.ஓ) முனைவர் சிவக்குமார் செயல்படுவார் என்றும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொறுப்பாளராக பேராசிரியர் சிவா செயல்படுவார் என்றும் நான் அறிவித்தேன். இவர்களில் சிவக்குமார் தைலாபுரம் தோட்டத்தில் எனது தொலைபேசி உதவியாளராக பணியை தொடங்கியவர். அவர் தமது கடுமையான உழைப்பால் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.
கூட்டத்தில் பேசிய பேராசிரியர் ச.சிவப்பிரகாசம், ‘ இந்தக் கல்விகோயிலை மருத்துவர் அய்யா அவர்களும், அம்மா அவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் வடமாவட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் எவ்வாறு பங்களித்ததோ, அதே போல் இந்தக் கல்விக் கோயிலும் பங்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
அனைத்து பேராசிரியர்களும் தங்களின் கருத்துகளைக் கூறினார்கள். கல்விக்கோயிலின் கல்வித் தரத்தை மேம்படுத்த உழைப்பதாக உறுதியளித்தார்கள்.
No comments:
Post a Comment