மகாபலியின் ஆட்சியில் மகிழ்ந்திருந்த மக்களின் முக்கிய திருநாளான திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மன்னன் மகாபலியின் வரலாறு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதே போல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த விஷ்ணு, மூன்றாம் அடியை வாமணன் காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் திருநாளுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. அறுவடைத் திருநாள் என்றும் போற்றப்படும் ஓணம் திருநாளை நமது பாண்டிய நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது குறித்து பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் மாங்குடி மருதனார் விரிவாக விளக்கியிருக்கிறார். ஓணம் திருநாள் கொண்டாடப்படும் விதம் குறித்து தேவாரத்தில் சம்பந்தரும் விவரித்திருக்கிறார். ஓணம் திருநாள் உழைப்புக்கு கிடைத்த பயனை வரவேற்கும் வகையில் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டங்களுடனும் கழிக்கப்படும் திருவிழாவாகும்.
ஓணம் திருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு... ஓணம் திருநாள் கொண்டாட்டத்திற்கான களம். ஓணம் திருநாளின் சிறப்புகளையும், பெருமைகளையும் சங்க இலக்கியங்கள் விரிவாக விளக்கியுள்ளன. ஓணம் திருநாள் மக்களுக்கு சொல்லும் செய்தி என்பது அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான். அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment