அக்னிப்புரட்சி இன்றைய (21.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.11.2022) முக்கிய செய்திகள்.

* தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

* கிஷோர் கே.சாமி பாண்டிச்சேரியில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்ட குற்றச்சாட்டிற்காக கைது என தகவல்.

*  கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள்:

மாலை 6.30 மணிக்கு இங்கிலாந்து - ஈரான்,

இரவு 9.30 மணிக்கு செனகல் - நெதர்லாந்து,

நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்கா - வேல்ஸ்  ஆகிய அணிகள் மோதல்

* தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம்

மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவரை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

* மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது

வளர்ச்சித் திட்டங்கள், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு

எம்.எல்.ஏ.க்கள் விஜி ராஜேந்திரன், எழிலன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்பு

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்புக்குழு அமைப்பு.

* முன்கூட்டியே தொடங்கிய குளிர்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனி தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. பகல் நேரத்திலும் குளிர் காற்று வீசுகிறது. இதமான காலநிலை நிலவுகிறது.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தொடங்கும் பனி, முன்கூட்டியே தொடங்கியிருப்பதற்கு காலநிலை மாற்றம் காரணமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* கத்தார் உலகக்கோப்பையில் பீர் கொடுக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் திருட்டுத்தனமாக மைதானத்திற்குள் பீரை கடத்தியுள்ளார்.

பீர் டின்னுக்கு வெளியே கொக்கோகோலா ஸ்டிக்கரை ஒட்டி, அதை கொக்கோகோலா என்று கூறி பீரை உள்ளே எடுத்துச்சென்றுள்ளார். அவரது இந்த செயல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

* 50 மருந்துகள் தரமற்றவை
நாட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை, இமாச்சல், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. போலி மருந்துகளின் விவரங்கள் குறித்து cdsco.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

* தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது.

தமிழக அரசு உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்ட பின் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் என கோரி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

* கத்தார் செல்லும் நாமக்கல் முட்டை!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி!

* ஆண்கள் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

'ஏடிபி பைனல்ஸ்' எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இத்தாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் நோவக் ஜோகோவிச் - காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்ற ஜோகோவிச், கோப்பையை கைப்பற்றினார்.

* இஸ்லாமிய சட்டத்துக்கு போக்சோவில் விலக்கு கிடையாது - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமியர்களுக்கான தனிச்சட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது போக்சோ சட்டத்தின் விதிகளில் இருந்து விலக்கப்படவில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி இஸ்லாமியர்கள் என்றாலும் 18 வயதுக்கும் கீழ் உள்ள மைனர் பெண்களை திருமணம் செய்ய முடியாது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

* ”டிவி, பிரிட்ஜ், வாகனம் வாங்காதீங்க” பயம் காட்டும் அமேசான் நிறுவனர்

பணவீக்கம், ரஷ்யா - உக்ரைன் போர், பெரு நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கை உள்ளிட்டவற்றை உதாரணம் காட்டி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “நீங்கள் டிவி, வாகனம், பிரிட்ஜ் போன்ற எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் அதை ஒத்திப்போடுங்கள். எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை தலைதூக்கலாம். பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

* விஜய் ஹசாரே தொடர்: தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்தாவது சதத்தை அவர் பூர்த்திச் செய்துள்ளார். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த ஜெகதீசன் 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையும் பதிவு செய்துள்ளார்.

இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககாரா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.

ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வெகு தொலைவில் உள்ளது மற்றும் இன்று இரவு சென்னை உட்பட NTN கடற்கரைக்கு அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்தியாவை பட்டேல் ஒன்றுபடுத்தினாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்குத்தான்' - கேரள கவர்னர் பேட்டி

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் அரசுக்கு பெருத்த தலைவலியாக திகழ்ந்து கொண்டிருப்பவர், அந்த மாநில கவர்னர் ஆரிப் முகமது கான். அங்கு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது தொடங்கி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது வரை அரசுக்கும், கவர்னருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில், ஆரிப் முகமது கான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சமீபகால நிகழ்வுகள்தான். பல லட்சம் ஆண்டுகளாக நாம் அரசியல் ரீதியாக துண்டு துண்டாக பிளவுபட்டுக்கிடந்தோம். கேரள மாநிலத்துக்கென்று மாபெரும் கலாசாரம் இருக்கிறது. இது இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இதற்கான பெருமை, கேரள சமூகத்துக்குத்தான் சேரும். கேரள மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும். ஆன்மிகவாதியான நாராயண குரு போன்றவர்கள் இந்தப் பெருமைக்குரியவர்கள். கேரளாவில் கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன.

எந்த அளவுக்கு இந்த ஒடுக்குமுறை இருந்தது என்றால் பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு இருந்தது. ஒரு நெருக்கடியான தருணம் ஏற்படுகிறபோதெல்லாம், அந்த கால கட்டத்தில் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன.

1947-ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை ஒன்றுபடுத்தியதால், நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆக முடிந்தது. நாம் ஒரே நாடாக முடிந்தது. ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தரான ஆதி சங்கரருக்குத்தான் போக வேண்டும். அவர்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களுக்கு அவர்களது கலாசார, ஆன்மிக ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

கேரள கவர்னர் ஆரிப் முகமது கானிடம் அவருக்கும், கேரள அரசுக்கும் இடையே நிலவும் மோதல் காரணமாக மாநிலத்தின் கல்வித் துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "கேரளா, இந்தியாவின் அறிவு மையமாக மட்டுமின்றி, அது உலகின் அறிவு மையம் ஆகவும் மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், அதன் வானிலை அத்தனை இதமானது. இந்த வானிலை மிகவும் குளிராகவும் இல்லை, மிகவும் வெப்பமாகவும் இல்லை. அறிவு தேடுவோருக்கு இது மிகவும் உகந்ததாகும்" என கூறினார்.

* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* விஜய் ஹசாரே தொடர்: அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி உலக சாதனை.

50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்து சாதனை.

தமிழக அணி வீரர் ஜெகதீசன் 250 ரன்கள் குவித்து அபாரம்.

LIST A கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் (277) எடுத்து சாதனையை படைத்தார் ஜெகதீசன்.

* பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் 254 உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை விளக்கம்.

கல்லூரி முதல்வர்கள் விளக்க மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க அரசாணை.

சத்துணவில் ஒரு முட்டை வழங்கப்பட்ட நிலையில் மேலும் இரு முட்டைகள் வழங்க உத்தரவு.

சத்துமாவு, ஊட்ட சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் குறித்தும் அரசாணை.

* தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக, மின் இணைப்பு எண்களுடன், நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர், அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

ஆனால், அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்களும், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணைத்தான் இணைத்துள்ளனர். இந்த நிலையில், நுகர்வோர், தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இதில் எந்த சிக்கலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களும், தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கவும் மின் வாரிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும், மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன், அந்த இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதில் மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன. 
மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது என்பதே அதற்குக் காரணம்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதி செய்துள்ளது. மேலும், https://adhar.tnebltd.org/adharupload/ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று, மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது.

அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.

* அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், சந்தேக குற்றவாளிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு திருச்சி நீதிமன்றம் அனுமதி.

சோதனை குறித்த விவரங்களை அறிக்கையாக 2 மாதத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு.

* வானிலை செய்தி
இரண்டு சாத்தியக்கூறுகள்: அடுத்த 12-24 மணிநேரத்திற்கு.

1.இன்று இரவு/நாளை காலை காற்றுடன் #சென்னை பகுதியில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.

2.காற்றழுத்த தாழ்வு நிலை கடலில் மறைந்து மேகங்கள் கலைந்து போகும்.சென்னையில் அதிக மழை பெய்யாது, வறண்ட குளிர் காற்று வீசும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து முதல் மேகக் கூட்டங்கள் சென்னை கடற்கரையை தொட்டுள்ளன, இங்கு ஃபோர்ஷோர் எஸ்டேட்- மண்டவெளியில் நல்ல மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் இன்று இரவு 45-55 கிமீ வேகத்தில் காற்று வீசும், மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

*தமிழகத்தை உலுக்கிய கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு - சிபிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களுக்கு சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கடந்த 2004ஆம் ஆண்டில் கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் குற்றவாளிகள் 10 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள்தண்டனையை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதை எதிர்த்து, கந்தவேலு, ஜோதி, மணி, தனவேல், அஞ்சாப்புலி, ஆகிய ஐந்து பேர் தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, பி.எஸ். நரசிம்மா அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

* சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் (85) மருத்துவமனையில் காலமானார்.

1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவ்வை நடராசன் இருந்துள்ளார்.

* ⚽ தோகா: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

* இந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 162ஆக உயர்வு; மீட்பு பணி தீவிரம்..!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு குழந்தைகள் பெண்கள் உள்பட 162 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் நண்பகல் 12 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சிலாங்கூர் நகரில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. சிலாங்கூர் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 76 கி.மீ தொலைவு வரை உணரப்பட்டுள்ளது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த பதற்றத்துடன் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 162 பேர் பலியாகிள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மலைகள் சூழ்ந்த மாவட்டமான சிலாங்கூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் வீதிகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளது.

நிலநடுக்கத்தில் வீடுகளை இழந்த மக்கள் உயிருக்கு அஞ்சி அலறியபடி ஓடிய காட்சியும், சிலர் உடலில் அடி பட்டு ரத்தம் வடிய என்ன செய்வது என தெரியாமல் பரிதாபமாக அமர்ந்திருந்த காட்சியும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் அவசர கால மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். நிலநடுக்கத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்து கண்ணீர் வடித்த பொதுமக்கள் சேதமடைந்த வீடுகளில் இருந்து எஞ்சிய பொருட்களை எடுத்துக் கொண்டு அரசின் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நிலநடுக்கம் மாகாரண்மாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்தோனேசியாவின் பல நகரங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நகரம் சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகதான் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால் தரையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் படுகாயம் அடைந்தவர்களின்  பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages