எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
32. திரைப்படங்களுக்கு ‘இலக்கணம்’!
பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே திரைப்படங்களுக்கு எதிரான அமைப்பு என்ற எண்ணம் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் நிலவுகிறது. உண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி திரைப்படங்களுக்கு எதிரான அமைப்பு அல்ல. இன்னும் கேட்டால், நான் நல்ல படங்களுக்கு சிறந்த ரசிகன். கொரோனா காலத்திலும், அதற்கு பிறகும் வெளியான பல திரைப்படங்களை நான் பார்த்து பாராட்டியிருக்கிறேன். நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சீரழிக்காத திரைப்படங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே ஆதரவளிக்கும். இன்னும் கேட்டால், திரைப்படங்களின் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற வலுவான எண்ணம் எனக்கு உண்டு. அதற்கு நான் செயல்வடிவமும் கொடுத்தேன்.
தமிழ் வளர்ச்சிக்கு ஒரு திரைப்படம்
தமிழை வளர்ப்பதற்காக ஒரு நாளேடு, ஒரு தொலைக்காட்சி தொடங்கவேண்டும்; ஒரு திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் விருப்பம் ஆகும். தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் 2006ஆம் ஆண்டில் முதல் இரு விருப்பங்களும் நிறைவேறின. அதே ஆண்டில் 3வது விருப்பத்தையும் நிறைவேற்றுவதற்காக தயாரிக்கப்பட்டதுதான் “இலக்கணம்” என்ற திரைப்படம் ஆகும்.
ஒரு திரைப்படம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக நாம் தயாரிக்கும் திரைப்படம் அமைய வேண்டும் என்று நான் கருதினேன். அதனால், அந்தத் திரைப்படத்திற்கு ‘இலக்கணம்’ என்று பெயரிடப்பட்டது. சந்திரசெயன் என்ற இளைஞர்தான் அத்திரைப்படத்தை இயக்கினார். நான் கேட்டுக்கொண்டவாறு நன்னெறி படைப்பகத்தின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இராசேசுவரி சண்முகம் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். கூத்துப்பட்டறையைச் சேர்ந்த ராம் என்ற இளம் நடிகர், தமிழரசன் என்ற கதை நாயகனின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். உமா என்ற நடிகை கதை நாயகியாக நடித்தார். நடிகர்கள் வினுசக்கரவர்த்தி, பாலாசிங், நடிகை ரோகினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இளையராஜாவின் மகள் பவதாரணி இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தார். 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இலக்கணம் திரைப்படம் 22.12.2006 அன்று வெளியிடப்பட்டது.
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி சொற்கள் கலப்பின்றி, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களுடன் இந்தப் படத்தை தயாரிக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதற்குமுன் எனக்கு அறிமுகமாகியிருந்த சந்திரசெயன் என்ற இளைஞரை அழைத்து, எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அதைக்கேட்ட அந்த இயக்குநர், முழுக்க முழுக்க தமிழ் வசனங்களுடன் திரைப்படம் தயாரிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், பொதுமக்கள் பார்த்து மகிழும் வகையில் அத்திரைப்படம் அமையாது என்றும் கூறினார். ஆனால், அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள நான் மறுத்துவிட்டேன்.
தமிழில் திரைப்படம் தயாரிக்க முடியாதது கேவலம்
“தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க தமிழ் வசனங்களுடன் திரைப்படம் உருவாக்க முடியாவிட்டால், அதைவிட பெரிய கேவலம் எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் வசனங்களுடன் திரைப்படம் தயாரிக்க முடியாது என்று கூறுவதையே நான் விரும்பவில்லை. கண்டிப்பாக முழுக்க முழுக்க தமிழ் வசனங்களுடன் திரைப்படம் தயாரிக்க வேண்டும்; அதை நீங்கள்தான் செய்யவேண்டும்’’ என்று அந்த இளம் இயக்குநரிடம் நான் தெளிவாகக் கூறிவிட்டேன். அடுத்த சில நாட்களில் முழுமையான கதை, திரைக்கதை, வசனங்களை அவர் எழுதி படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டார்.
இலக்கணம் திரைப்படத்தின் கதை மிகவும் நெகிழ்ச்சியானது; சமூக அக்கறை கொண்டது ஆகும். பழிவாங்கும் வெறி யாருக்கும் இருக்கக்கூடாது என்பதுதான் இலக்கணம் படத்தின் மையக்கரு. இத்திரைப்படத்தின் நாயகன் பெயர் தமிழரசன். அவர் சென்னையிலிருந்து வெளிவரும் பொதிகை என்ற மாத இதழில் இதழாளராகப் பணியாற்றுகிறார். மிகவும் நேர்மையான இதழாளரான அவர், எந்த வகையிலும் இதழியல் அறத்தை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றுகிறார். சமூக அவலங்களைப் பற்றி பொதிகை இதழில் எழுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கச் செய்கிறார். நேர்மையாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்த அவரது வாழ்வில் ஒரு நாள் வன்முறை வடிவில் புயல் வீசுகிறது.
கலவரம், கல்வீச்சு, காயம்
ஒருநாள் யாரோ ஒரு அரசியல் தலைவர் இறந்துவிடுகிறார். அதைத்தொடர்ந்து, அவரது அரசியல் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அப்போது ஆறுமுகம் என்பவன் வீசிய செங்கல், தமிழரசனின் மனைவி கயல்விழியைத் தாக்கி, அதனால் அவர் சுயநினைவை இழக்கிறார். சில மாதங்கள் மருத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைகிறது; அவர் மூளைச்சாவு அடைகிறார். இனியும் அவரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிடுகின்றனர்.
அதே நேரத்தில், அதே மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். கயல்விழியை இனி காப்பாற்ற முடியாது என்ற சூழலில், அவரது இதயத்தை மற்றொரு பெண்ணுக்கு பொருத்துவதன் மூலம் அவரைக் காப்பாற்றலாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார். அதைக்கேட்ட தமிழரசன், கதறியபடியே ஒப்புக்கொள்கிறான். அதற்கான படிவத்தில் தமிழரசன் கையெழுத்திடப் போகும் போது தான், தமது மனைவியின் இதயத்தைப் பொருத்தி காப்பாற்றப்படவுள்ள பெண்ணின் கணவர் ஆறுமுகம்தான், தமது மனைவி மீது கல்வீசித் தாக்கியது என்ற உண்மை தெரியவருகிறது. தமிழரசன் அவரது குழந்தைகளை வளர்க்கும்போதே யாரையும் பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது; எதிரிக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கூறி வளர்க்கிறார்.
எதிரிக்கும் நன்மை செய்யவேண்டும் என்று தங்களுக்கு அறிவுரை கூறி வளர்த்த தந்தை, இந்தத் தருணத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்று தமிழரசனின் குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர். தமிழரசன் தமது மனைவியின் இதயத்தை கொடையாக வழங்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. அப்போது அங்கு வரும் ஆறுமுகத்திடம், “யாரோ இறந்ததற்கு என் மனைவியை அழித்துவிட்டாயே?” என்று கதறியபடியே இதயத்தை கொடையாக வழங்கும் படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார். தமிழரசனின் குணத்தைக் கண்டு வியந்த ஆறுமுகம், தமது செயலுக்காக வருந்துகிறார். இனி எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று தமிழரசனிடம் உறுதிமொழி அளித்து திருந்தி வாழ்கிறார்.
தமிழ்ப் பெயர்கள்
தமிழரசனின் மகள் தாயை இழந்த நிலையிலும், நன்றாக படித்து மருத்துராகி ஏழைகளுக்கு சேவை செய்கிறார் என்பதுதான் இலக்கணம் திரைப்படத்தின் கதையாகும். அனைத்து வசனங்களும் தனித்தமிழில் இருப்பதால், இத்திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் கடினமானதாக இருந்தது. படப்பிடிப்பின்போது நடிகர்கள் இயல்பாக பஸ், டாக்டர், பெட், சீரியஸ் என்பது போன்ற சொற்களை பயன்படுத்தி விடுவார்கள். இதனால் அத்தகைய வசனங்கள் அடங்கிய பகுதிகளை மீண்டும் மீண்டும் படம்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், வெற்றிகரமாக இலக்கணம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு, டிசம்பர் 22&ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் தொடக்கத்தில் ஒவ்வொருவரும் எவ்வாறு வாழ வேண்டும் என்று நான் அறிவுரைகூறும் பகுதியும் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தமிழ்த் திருமணத்தை நடத்தி வைக்கும் தலைவராகவும், சுப.வீரபாண்டியன், தென்கச்சி கோ.சுவாமிநாதன் பொதிகை வார இதழின் நிர்வாகிகளாகவும் நடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களின் இயற்பெயரிலேயே நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதைப்பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் தனித்தமிழ் பெயர்கள் ஆகும். தமிழரசன், இளங்கோ, முருகவேள், மதியழகன், கலையரசன், மணிமாறன், செழியன், எழில், கயல்விழி, பனிமலர் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பாரதியார் பாடல்
இலக்கணம் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தந்தை பெரியாரின் உருவப்படம் இடம்பெறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
“திருவே நின்னை
காதல் கொண்டேனே
நினது திருவுருவம்
மறவாதிருந்தேனே
பல திசையில் தேடி
திரிந்திளைத்தேனே
நினக்கு மனம் வாடி
தினம் களைத்தேனே...”
என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை இத்திரைப்படத்தில் பாடலாக இடம்பெற்றிருந்தது. இக்கவிதை இதுவரை எந்தப் படத்திலும் பாடலாக இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு இல்லை
முழுக்க முழுக்க தமிழ் வசனங்களும், சமூகத்திற்கு அறிவுரைகூறும் கருத்துகளும் இடம் பெற்றிருந்ததாலோ என்னவோ, இத்திரைப்படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் நக்கீரன் வாரம் இருமுறை இதழ், மக்கள் குரல் மாலை நாளிதழ் ஆகிய இரு ஊடகங்களைத் தவிர வேறு எந்த ஊடகமும் இத்திரைப்படத்திற்கு விமர்சனம் கூட எழுதவில்லை. தங்கப்பதக்கம் பரிசு பெறுவதற்கான தகுதி இலக்கணம் திரைப்படத்திற்கு உண்டு என்று மக்கள் குரல் இதழ் பாராட்டியிருந்தது. மலேசியாவிலிருந்து வெளிவரும் மலேசிய நண்பன் என்ற நாளிதழில் இலக்கணம் திரைப்படத்தைப் பாராட்டி ஒரு பக்கத்திற்கு விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தின் பாடல்கள் எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. எந்த வானொலியிலும் ஒலிபரப்பப்படவில்லை. இத்திரைப்படம் வெளியாகி வரும் டிசம்பர் 22&ஆம் தேதியுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 16 ஆண்டுகளில் கடந்த 11.09.2018 பாரதியாரின் நினைவு நாளன்று தான் முதன்முறையாக “திருவே நின்னை காதல் கொண்டேனே” என்ற பாரதியாரின் பாடல் அகில இந்திய வானொலியின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டது. மற்றபடி இந்தத் திரைப்படம் மக்கள் தொலைக்காட்சியில் ஒருசில முறை ஒளிபரப்பப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
நன்னெறிகள்
இலக்கணம் திரைப்படம் பல வழிகளில் போற்றத்தக்கதாகும். முதலில் பழிவெறி கூடாது; தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற நன்னெறியை இந்தப் படம் போதிக்கிறது. இந்தப் படத்தின் வசனங்கள், பாடல்கள், பெயர்கள் அனைத்திலும் தமிழ் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் இன்று உறுப்புக்கொடையில் இந்தியாவிற்கே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2008ஆம் ஆண்டில் இதேந்திரன் என்ற மாணவன் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவனது உடலுறுப்புகள் மற்றவர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட பிறகுதான், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டிலேயே உடல் உறுப்பு கொடை குறித்த விழிப்புணர்வு இலக்கணம் திரைப்படத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. ஊடகத்துறையினர் எவ்வாறு துணிச்சலுடனும், நேர்மையுடனும் செயல்படவேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் இலக்கணம் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருந்தன. இப்படியும் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா? என்று பலரும் வியக்கும் வகையில் இலக்கணம் திரைப்படம் அமைந்திருந்தது. அந்த வகையில், அதைத் தயாரிக்க வைத்த நான் பெருமிதம் கொள்வேன். ஆனாலும் அனைவராலும் போற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை, தமிழ் சமுதாயம் எவ்வாறு புறந்தள்ளியது என்பதுதான் மனதில் வலியை ஏற்படுத்துகிறது.
ஒரு லட்சம் பரிசும், கலைஞரின் முயற்சியும்!
பொதுமக்கள் தரப்பில் மட்டுமின்றி, அரசுத் தரப்பில் இருந்தும் இத்திரைப்படத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அதில் அனைத்து வசனங்களும் தமிழில் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகவும், தமிழ் அல்லாத பிறமொழி வசனங்களையோ, அல்லது படத்தின் தலைப்புகளில் பிறமொழிச் சொற்களையோ எவரேனும் கண்டுபிடித்துக் கூறினால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தேன். திரையுலகைச் சேர்ந்த பலரும் இத்திரைப்படத்தில் ஏதேனும் குற்றம் கண்டுபிடிக்க முடியுமா? என்று முயன்றனர். ஆனால் முடியவில்லை.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர்பிரேம்ஸ் திரையரங்கில் இலக்கணம் திரைப்படம் சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது. கலைஞருடன் திமுகவின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களுமான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் இத்திரைப்படத்தைப் பார்த்தனர். இத்திரைப்படத்தில் தமிழ் தவிர பிறமொழி வசனங்கள் அல்லது சொற்களை கண்டுபிடித்துக் கூறினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற சவாலை கலைஞரிடமும் நான் தெரிவித்திருந்தேன். அந்த சவாலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை கலைஞர் உன்னிப்பாக பார்த்தார்.
சிம்பிள் அன்ட் பெஸ்ட்
திரைப்படம் முடிந்தவுடன் கலைஞருடன் வந்த ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் அரங்கிலிருந்து வெளியேறிவிட்டனர். ஆனாலும் கலைஞர் இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதாவது ஒரு சொல் ஆங்கிலத்தில் இருந்தால் அதைக் கண்டுபிடித்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறவேண்டும்; அடுத்த நாள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதுதான் கலைஞரின் விருப்பமாகும். ஆனால், கலைஞரின் எண்ணம் ஈடேறவில்லை. ஒரு பிறமொழிச் சொல்லைக்கூட கலைஞரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் திரைப்படத்தின் இயக்குநர் சந்திரசெயனிடம், “சிம்பிள் அன்ட் பெஸ்ட்” என்று திரைப்படம் குறித்து ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அந்த அளவுக்கு எந்தவொரு இடத்திலும் பிறமொழிச் சொல் கலப்பு இல்லாமல் இலக்கணம் திரைப்படத்தை நாங்கள் தயாரித்திருந்தோம்.
இலக்கணம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்ற கலைஞர், அப்படத்தைப் பாராட்டி இயக்குநர் சந்திரசெயனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்,
“ஒரு பெண் எப்படியிருக்கவேண்டும் & ஒரு இளைஞன் எப்படி இருக்கவேண்டும் & ஒரு குடும்பம் எப்படி இருக்கவேண்டும் & ஒரு பத்திரிகை எப்படி நடத்தப்படவேண்டும் & ஒரு தொலைக்காட்சி எப்படிப் பயன்படவேண்டும் என்று இப்படியே அறிவுரைகள் பலவற்றின் களஞ்சியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது “இலக்கணம்” என்ற இந்த இலட்சியப் படம்! ஆம், மருத்துவர் அய்யா மனத்துக்கு ஏற்ப!
இயற்கையான நடிப்பு & இனிய இசை & இலக்கிய உரையாடல்கள் & எல்லாமே சிறப்பு & எதிர்பாராத வெற்றி இயக்குனருக்கும், ஏனைய கலைஞர்களுக்கும் கிடைக்கும்!” என்று அக்கடிதத்தில் கலைஞர் கூறியிருந்தார்.
சிறப்புப் பரிசு
இலக்கணம் திரைப்படத்தை கலைஞர் இந்த அளவுக்கு பாராட்டியிருந்தாலும், அத்திரைப்படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பழிவாங்கும் வெறி கூடாது என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்ததால், அதை அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கும்படி படக்குழு சார்பில் அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால், அக்கோரிக்கையை ஏற்க அரசு மறுத்துவிட்டது.
2006ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக நடிகர் கார்த்தி நடித்த பருத்தி வீரன் தேர்வு செய்யப்பட்டது. விருது தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த நடிகர் சிவக்குமாரும், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற ஏ.நடராசனும், “இலக்கணம்” திரைப்படத்திற்குத்தான் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஏனோ, பருத்திவீரன் படத்திற்குத்தான் விருது வழங்கப்பட்டது. இலக்கணம் திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு என்ற விருது வழங்கப்பட்டது.
மானியம் வாங்க மறுப்பு!
தமிழ் மொழியை வளர்க்கும் நோக்குடன் இலக்கணம் திரைப்படத்தை தயாரித்ததில் பொருளாதார அடிப்படையில் பெரும் இழப்பு ஏற்பட்டது. சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படுவது வழக்கம். அத்தகைய மானியத்தைப் பெற இலக்கணம் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழை வளர்க்கவேண்டும்; நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்; முழுக்க முழுக்க தமிழ் வசனங்களுடன் திரைப்படம் தயாரிக்க முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட உன்னத நோக்கங்களுடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு செல்லும் முயற்சிக்கு தமிழக அரசு ஆதரவளிக்காத நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் ரூ.7 லட்சம் மானியத்தை வாங்க மறுத்துவிட்டோம். தமிழை வளர்ப்பதற்கான உன்னத முயற்சிக்காக பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. தமிழுக்காக எந்த வலியையும் எனது இதயம் தாங்கும்!
நாளை.... தமிழ் வளர்க்க கலந்தாய்வு!
No comments:
Post a Comment