எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

22. தமிழர் வாழ்வுரிமை மாநாடு!

தமிழ்நாட்டில் தமிழைக் காக்கவும், இந்தியை விரட்டவும் உளத் தூய்மையுடன் போராடியவர்கள் மாணவர்கள் தான்.  ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சிக்கு தீனி போட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களால் பயனடைந்தவை திராவிடக் கட்சிகள் தான் என்றாலும் கூட,  அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தியதும், போராட்டத் தீயின் கணல் குறையாமல் பார்த்துக் கொண்டதும் மாணவர்கள் தான்.

அண்ணாவின் தமிழ்ப் பற்று

மாணவர்களால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது 1967&ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அறிஞர் அண்ணா ஆட்சிக் காலம் வரை அதிகாரத்தில் இருந்தவர்கள் நேர்மறை அரசியல் செய்தனர். அறிஞர் அண்ணா அவரது சொந்த வலிமையில் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர். அதிகாரத்தை தாம் மட்டுமே குவித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர். அதனால் ஆட்சிக்கு வந்தவுடனே அனைத்துத் துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை கட்டாயப்படுத்தினார். தமிழகத்தில் அதுவரை பயன்பாட்டில் இருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழித் திட்டத்திற்கு முடிவு கட்டி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அதுவரை சென்னை மாகாணம் என்றழைக்கப் பட்ட மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார். ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும், தேவை இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்தார். இவை அவரது தமிழ் பற்றுக்கு சான்றுகள்.

தமிழ் தான் மாணவர்களின் போராட்ட உணர்வுக்கு கூர் தீட்டும் கருவியாக இருந்தது. மாணவர்கள் போராட்ட உணர்வுடன் இருப்பது எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்பதை திராவிட ஆட்சியாளர்கள் உணர்ந்து இருந்தனர். அதனால் தான் ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலம் ஒரு நாகரிகம், ஆங்கிலம் ஒரு ஆடம்பரம் என்ற உணர்வை மாணவர்கள் மீது திராவிடக் கட்சிகள் திணித்தன. அதன் விளைவு தான் ஆங்கிலம் மீதான மோகம் அதிகரித்தது;  தமிழின் மீதான தாகம் குறைந்தது.

தமிழர் வாழ்வுரிமை மாநாடு

தமிழால் வளர்ந்தவர்கள், தமிழால் ஆட்சியைப் பிடித்தவர்கள் தமிழை வளர்க்கத் தவறிவிட்ட நிலையில் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு ஆகியவற்றின் நலன்களைக் காக்கும் நோக்குடன் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை 1992-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் நடத்தினேன். முதல் இரு நாட்கள் மாநாடு சென்னை பெரியார் திடலில் உள்ளரங்கத்தில் நடைபெற்றது. மூன்றாவது நாள் மாநாடு மட்டும் பேரணியுடன் கூடிய திறந்தவெளி மாநாடாக சென்னை கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு ஆகியவற்றின் நலன்களில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.  அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பாரதிய ஜனதா அப்போது தமிழகத்தில் பொருட்படுத்தக் கூடிய அளவிலான கட்சியாக இல்லை. தமிழ்ச் சமுதாய அமைப்புகளும் பெருமளவில் பங்கேற்றன.

முதல் இரு நாள் நிகழ்ச்சிகள் உள்ளரங்கத்தில் நடைபெற்ற நிலையில் மூன்றாம் நாள் மாநாடு கடற்கரை சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இராம்விலாஸ் பாஸ்வான்,  அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கான்ஷிராம், ஃபார்வர்டு  பிளாக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் சிட்டபாசு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இப்போதைய காங்கிரஸ் தலைவரும், அப்போதைய எம்.ஜி.ஆர் அதிமுக கட்சித் தலைவருமான சு. திருநாவுக்கரசு, எனது நண்பர் பழனிபாபா உள்ளிட்ட தலைவர்கள்  கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ் முழக்கங்கள்

மாநாட்டுக்கு முன்பாக சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கடற்கரை வரை பாட்டாளிகளின் பேரணி நடைபெற்றது. அப்பேரணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அந்த பேரணியை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து நானும் பா.ம.க.வின் மூத்த தலைவர்களும் பார்வையிட்டோம். பேரணியில் தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றுக்கு ஆதரவாக  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ் மொழிக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட முழக்கங்கள் வருமாறு:

‘‘ தமிழே இங்கு பயிற்று மொழி...
  தமிழே நமது ஆட்சி மொழி....
  தமிழே நமக்குத் தொடர்பு மொழி!’’

‘ இந்தியும் ஆங்கிலமும் நம்மை ஆள்வதோ,
இரண்டாந்தரக் குடிமகனாய்த் தமிழன் வீழ்வதோ?’

என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆவேசமாக எழுப்பப்பட்டன. தமிழ் மொழி, இனம், நாடு ஆகியவை குறித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநாட்டில் எங்கு நோக்கினும் தமிழ் முழக்கமே ஒலித்தது.

* தமிழ்நாட்டைப் பொருத்தவரை கல்வி, நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழே ஆட்சி மொழியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஆதிக்க மொழிகளான ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.

* தமிழ்நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இந்தியைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டன. மாநாட்டில் பங்கேற்ற லட்சோப லட்சம் மக்களும் தமிழ் மொழிக்கு ஆதரவான இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக பெரு முழக்கங்களை எழுப்பினார்கள். இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான  தடை நீக்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் குரல் கொடுக்க எவரும் முன்வராத நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தான் மிகவும் துணிச்சலுடன் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது. இம்முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், முன்னாள்  பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதால் தமிழுக்காக பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய உரிமைக்குரல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பரவியது. தமிழ் தலை நிமிர்ந்தது.

பொய் வழக்கு; தடை முயற்சி

ஆனால், தமிழகத்தில் கருத்துரிமையை ஒடுக்கி வந்த ஜெயலலிதாவால் இப்படி ஒரு மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்காக என் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநாட்டில் பங்கேற்ற தமிழ்தேசிய இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் மீது ஜெயலலிதா அரசு கடுமையான பிரிவுகளில் வழக்குகளைத் தொடர்ந்தது. அத்துடன் நிற்காமல் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த பழ. நெடுமாறன், பெ.மணியரசன், தியாகு, சுப. வீரபாண்டியன் ஆகியோரும் நானும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம்.

தமிழர்களின் எதிரி என்று அம்பலப்பட்டுப் போன ஜெயலலிதாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி மீதான கோபம் அத்துடன் அடங்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தமது துதிபாடிகள் மூலம் வலியுறுத்தச் செய்தார். அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதைப் போல பேசிய ஜெயலலிதா,‘‘பாட்டாளி மக்கள் கட்சி தடை செய்யப்பட வேண்டிய கட்சி தான். அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன்.  விரைவில் பாட்டாளி மக்கள் கட்சி தடை செய்யப்படும்’’ என்று அறிவித்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி மொத்தம் 3 முறை  பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யப்போவதாக சட்டப்பேரவையில் முழக்கமிட்டார். ஆனால், அந்த 3 முயற்சிகளிலும் ஜெயலலிதா தோல்வியடைந்தார். பா.ம.க. தான் 3 முறையும் வெற்றி பெற்றது.

நாளை.... தமிழ்த் தாய்க்கு வாழ்வுரிமை தா!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages