எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
27. மூன்றாவது மொழிப் போர்!
தமிழ்நாட்டில் தமிழ் வீழ்த்தப்பட்டதில் தமிழகத்தை ஆட்சி செய்த இரு கட்சிகளில் அதிகப் பங்கு அதிமுகவுக்கு தான் உண்டு. தமிழ் வளர்ச்சி குறித்து திமுக ஆட்சியில் கலைஞரிடம் கோரிக்கை வைத்தால் உடனடியாக அதை நிறைவேற்றுவதாக உறுதி அளிப்பார். பிறகு அந்தக் கோரிக்கையில் 40% அளவுக்கு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார். அதில் 20 விழுக்காடு அளவுக்காவது பயன் கிடைக்கும். கலைஞர் தமிழில் மெத்தப் படித்தவர். தமிழ்க் காவலர் என்ற பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவாவது தமிழுக்கு எதையாவது செய்வார்.
ஆனால், ஜெயலலிதா அறிவிக்கப்படாத தமிழ் எதிரி. தமிழும், தமிழர் பெருமையும் வளர்ந்து விடக் கூடாது என்று நினைத்தவர். பல சந்தர்ப்பங்களில் இதை வெளிப்படுத்தியவர். அதனால் தான், 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழுக்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தனியாகவும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூட்டாகவும் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட ஏராளமான கோரிக்கைகளில் ஒன்றைக்கூட ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழ் மொழியில் மாற்ற வேண்டும் என்பதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தினோம். தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கையாகும். ஆனால், எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொண்ட ஜெயலலிதா, அவரது அரசியல் வழிகாட்டி எம்.ஜி.ஆர். பிறப்பித்த அரசாணையையே செயல்படுத்த மறுத்தார். இதுதான் அவர் தமிழ் மீதும், எம்.ஜி.ஆர் மீதும் காட்டிய மரியாதை; பற்று ஆகும்.
ஆலயங்களில் தமிழில் வழிபாடு
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்பதைக் கடந்து தமிழ் சார்ந்த மேலும் பல கோரிக்கைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்களை நடத்தியது. அவற்றில் மிகவும் முக்கியமானது ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதாகும். 1995-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டுக்கு முன்பாக நான் மேற்கொண்ட தமிழ் வாழ்வுரிமைப் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், அதன்பின்னர் பத்தாண்டுகளாகியும் ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தான், அதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்தில் என்னுடன் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
‘‘ தமிழ் வேண்டும்; தமிழ் வேண்டும், கோவில்களில் தமிழ் வேண்டும்’’ என்ற முழக்கத்துடன் தொடங்கிய அந்தப் போராட்டத்தில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பேசிய நான்,‘‘ வடமொழியில் வழிபாடு என்ற அடிமைத்தனத்தில் இருந்து தமிழ்ச் சமுதாயம் மீள வேண்டும். நம் மீது ஆங்கிலம் எப்படி திணிக்கப்பட்டதோ, அதேபோல் வழிபாட்டு முறையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வடமொழி திணிக்கப்பட்டு விட்டது. இந்த அடிமைத்தனத்திலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். இந்த உரிமையைப் பெற்றுத்தரும் இயக்கத்தின் தொடக்கம் தான் இது. தமிழர்களின் உணர்வுகளை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த முன்வராவிட்டால் தமிழில் வழிபாட்டு உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்’’ என்று எச்சரித்தேன். தொடர்ந்து வடபழனி முருகன் கோவிலுக்கு சென்ற நாங்கள், கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கோரும் மனுவை அங்குள்ள குருக்களிடம் கொடுத்து வலியுறுத்தினோம்.
தமிழ் முறைப்படி திருமணம்
கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்துவதைப் போலவே, திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்பதிலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் உறுதியாக இருந்தது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் இயக்கம் நடத்துவதென தீர்மானித்தோம். ஏதேனும் ஒரு திருமண அரங்கத்தின் முன்பாக, அங்கு திருமணம் நடைபெறும் நாளில், யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஓரமாக நின்று, தமிழ் முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் தட்டிகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்துவது தான் எங்களின் திட்டம் ஆகும்.
அதன்படியே, 2004-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண அரங்கத்தின் முன்பாக தமிழ் முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். அதுமட்டுமின்றி, அந்த திருமண அரங்கத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சசிக்குமார்- கவிதா இணையரின் திருமணத்தை தமிழில் நடத்தி வைத்து வாழ்த்தினோம். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை அரசு மருத்துவமனை அருகில் நினைவரங்கம் முன்பாக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ் பயிற்றுமொழி
தமிழ் முறைப்படி திருமணங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்ட நாளில் இருந்து சரியாக ஒரு வாரம் கழித்து, அதாவது 2004-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளையும் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. ‘‘ மருத்துவம், தொழில்நுட்பம் உட்பட அனைத்துப் படிப்பையும் தமிழ் மொழி மூலம் கற்பிக்க வேண்டும். அண்ணாவின் சட்டமன்ற வாக்குறுதி (23.1.1968) உடன் நிறைவேற்றப்பட வேண்டும்’’ என்று தமிழர் வாழ்வுரிமை மாநாடு, தமிழ் வாழ்வுரிமைப் பேரணி ஆகியவற்றில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கையை முன்வைத்து தான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நான்,‘‘தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் மருத்துவப் படிப்பு வரை அனைத்துப் படிப்புகளும் தமிழ் மொழியில் தான் கற்பிக்கப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழக காவல்துறையில் உயர் பதவியில் உள்ளனர். இதற்குக் காரணம் அம்மாநிலத்தைச் சேர்ந்த பலர் தாய்மொழியான இந்தியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணி தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றிருப்பது தான். ஆனால், நாம் மாற்று மொழியான ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டியிருப்பதால் தான் தேர்ச்சி பெற முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அப்போது தான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேற முடியும்’’ என்று வலியுறுத்தினேன். அதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றார்கள்.
நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழ்
சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2006-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று முந்தைய அத்தியாயங்களில் கூறியிருந்தேன். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2004-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதியே சென்னையில் போராட்டம் நடத்தினோம்.
தமிழ் ஆட்சிமொழியாக்கும் சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 07.12.2004 அன்றும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் தமிழ் பண்பாட்டு சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 13.12.2004 அன்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2004 ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி திசம்பர் 13-ஆம் தேதி வரை மொத்தம் 5 வாரங்களுக்கு தொடர்ந்து போராட்டங்களை நாங்கள் நடத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றால் எந்த பயனும் ஏற்படவில்லை.
அதனால் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்குடன் மூன்றாவது மொழிப்போர் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக 26.03.2005 அன்று திருச்சி பொன்மலைத் திடலில் மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. அந்த மாநாட்டுக்காக 22.03.2005 அன்று சென்னையிலிருந்து எனது தலைமையிலும், புதுச்சேரியிலிருந்து திருமாவளவன் தலைமையிலும், கன்னியாகுமரியிலிருந்து மருத்துவர் சேதுராமன் தலைமையிலும், சத்தியமங்கலத்திலிருந்து பழ.நெடுமாறன் தலைமையிலும் தமிழ்ப் பாதுகாப்பு ஊர்திப் பயணம் திருச்சி நகரத்திற்கு புறப்பட்டது.
10 கோரிக்கைகள்
இந்தப் பேரணியின் போது தமிழ் வளர்ச்சிக்காக கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:
1. அன்னைத் தமிழைப் பயிற்றுமொழியாகவும், பாட மொழியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கட்டணமில்லாக் கல்வியும், பாகுபாடில்லாக் கல்வியும் வழங்கப்பட வேண்டும்.
2. 1956&இல் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் ஆட்சிமொழி’ சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
3. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அன்னைத் தமிழை வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்திட சட்டம் இயற்ற வேண்டும்.
4. வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றின் பெயர் மற்றும் விளம்பரப் பலகைகளில் அன்னைத் தமிழுக்கே முதன்மையான இடம் அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
5. செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய ஊடகங்களில் அன்னைத் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்திட அரசும், பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழில் உயர்கல்வி
6. திருமண விழா, காதணி விழா, குல தெய்வ (முன்னோர்) வழிபாடு, ஈமக்கடன் போன்ற இல்லற வாழ்வியல் நிகழ்ச்சிகளில் ஊடுருவும் பண்பாட்டுச் சிதைவுகளிலிருந்து அன்னைத் தமிழ் மற்றும் தமிழர் மரபுகளைப் பாதுகாத்திட அரசும் பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
7. அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களுக்கான கலைச் சொற்களை உருவாக்கி, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியினை அன்னைத் தமிழில் வழங்கிட வேண்டும்.
8. மாநில மொழிகளை உயர் வழக்கு மன்றத்தில் பயன்படுத்தலாம் என்ற அலகாபாத் உயர் வழக்குமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தின் உயர் வழக்கு மன்றம் உள்ளிட்ட அனைத்து வழக்கு மன்றங்களிலும், நீதிமன்ற மொழியாக அன்னைத் தமிழை நடைமுறைப்படுத்த வேண்டும்.
9. ஆங்கிலமே தொடர்புமொழி என்னும் நிலைக்கு மாற்றாக, அன்னைத் தமிழையே தொடர்பு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும்.
10. தமிழ்ப் பெருங்குடி மக்கள் இனிய தமிழ்ப் பெயர்களையே சூட்டிக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பெயரை ஏற்றுக் கொள்வோருக்குத் தமிழக அரசு முழுமையான கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்ப் பாதுகாப்பு ஊர்திப்பயணம் 26.03.2005 அன்று திருச்சியைச் சென்றடைந்தவுடன் மூன்றாவது மொழிப்போர் அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழ் வளர்ச்சி சார்ந்த 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் லட்சக்கணக்கானோர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன். ஆனால், அந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகம் கடுமையான வெள்ளத்தை எதிர்கொண்டது. அதனால், அறிவித்த மாதத்தில் போராட்டம் நடத்த முடியவில்லை. மாறாக, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் மிகவும் எழுச்சியாக நடத்தப்பட்டன.
நாளை..... பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை!
**********
No comments:
Post a Comment