எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்?- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

34. தமிழை வளர்ப்பதற்கான தலையாயக் கடமைகள்!

குழந்தைகள் அனைவரும் அழகானவர்கள்....
ஆனாலும், கொஞ்சி மகிழ்வது என்றால் நமது கைகளும்,
கண்களும் முதலில் தேடுவது நமது குழந்தைகளைத் தானே...!

தாய்மார்கள் அனைவரும் அன்பு நிறைந்தவர்கள், பாசம் பொழிபவர்கள்....
ஆனாலும், காலில் விழுந்து வாழ்த்து பெறுவதென்றால் நமது கைகளும்,
கண்களும் முதலில் தேடுவது நம்மை ஈன்ற அன்னையைத் தானே...!

அன்னைக்கு இழைக்கும் துரோகம்

அதேபோல் தான் உலகிலுள்ள அனைத்து மொழிகளும் இனிமையானவை தான். ஆனாலும், நாம் போற்றி மகிழ வேண்டியது நமது அன்னை மொழியான தமிழ் மொழியைத் தான். நமக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது அடிபட்டாலோ நம்மையும் அறியாமல் நாம் அலறுவது ‘அம்மா’ என்று தான். அவ்வாறு இருக்கும் போது மகிழ்ச்சியாக கொஞ்சும் போது மட்டும் ‘மம்மி... டாடி’ என்று பிதற்றுவது நமது அன்னை மொழிக்கு மட்டுமின்றி, அன்னைக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா?

“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!’’  என்றும்,

‘‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’’ என்றும்

பெருமிதத்துடன் முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் தமிழகத்திலேயே தமிழ் புறக்கணிக்கப் படுவதைக் கண்டு,‘‘தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’’ என்று வேதனையை வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட கவிதையில் கூட நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை என்பது குறித்த கவலையைத் தான் பாரதிதாசன் வெளிப்படுத்துகிறார். ஆனால், தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் மட்டுமல்ல.... தமிழகத்தில் எங்குமே தமிழ் இல்லை என்பது தான் உண்மையாகும்.

பாரதிதாசனின் ஆவேசம்

அதனால் தான் ‘‘இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’’ என்று வள்ளுவர் மென்மையாகக் கேட்டதை,  ‘‘அமுதூட்ட நஞ்சூட்டி அகமகிழும் தாயுண்டோ அருமைச் சேய்க்கே?’’ என்று தமது மொழியில் ஆவேசமாக கேட்டிருக்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

அத்துடன் நிற்கவில்லை அவர்.  ‘‘தமிழ்நாட்டின் தமிழர்களின் தன்னுணர்வு நாட்டுவதைத் தவிர்ப்பீ ராயின் உமிழாதோ, வருத்தாதோ உம்மையே உம் மருமை உள்ளச் சான்றே?’’ என்று தமிழ்நாட்டில் தமிழைப் பயன்படுத்தாவிட்டால் உங்கள் மனசாட்சியே உங்களை காறி உமிழாதா? என்று பொங்குகிறார். பாவேந்தர் பாரதிதாசனின் வேதனைகள் நியாயமானவை. தமிழை தமது உயிருக்கு இணையாக நினைத்தவரால் தமிழ் சிதைக்கப்படுவதையும், புறக்கணிக்கப்படுவதையும் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?

தாகூரின் விமர்சனம்
தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படும் போக்கை பாரதிதாசன் மட்டுமல்ல... இந்திய தேசிய கீதத்தை எழுதியவரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற வங்கமொழிக் கவிஞருமான  இரவீந்திரநாத் தாகூரும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘‘தாய் மொழியையும் அதில் உள்ள இலக்கியங்களையும் மதிக்காமல், வேறு மொழிகளுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அளவு வேறு நாட்டில் இல்லை. வங்கத்தில் ஆங்கிலமயமாகிப் போன சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் எழுத்தில் மட்டுமே ஆங்கிலத்தை பயன்படுத்துவார்கள். மற்றபடி பேசுவது எல்லாம் முழுக்க முழுக்க வங்காளத்தில் தான். ஆனால், இங்கு(சென்னை) நிலைமை தலைகீழாக இருக்கிறது’’ என்று 1934&ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமது விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு நிதி திரட்டுவதற்காக சென்னை வந்த போது இரவீந்திரநாத் தாகூர் கூறியிருக்கிறார். தமிழர்களின் பிற மொழிக் காதல் அந்த அளவுக்கு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதை நாம் உணர்ந்து கொண்டு  திருந்டியிருக்க வேண்டும்... ஆனால் திருந்தவில்லை; திருத்த வேண்டிய நிலையில் இருந்த ஆட்சியாளர்களும் அதை செய்யவில்லை.

தமிழை வளர்க்க ஆட்சியாளர்களும், மற்றவர்களும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தமிழர்களாகிய நாம் அனைவரும் தன்னாய்வு செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். உலகில் இலக்கிய நயமும், இனிமையும் நிறைந்த மொழி தமிழைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? என்ற வினாவை நமக்கு நாமே எழுப்பிப் பார்க்க வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களைத் தவிர மற்ற நேரங்களில் தமிழில் மட்டுமே பேச வேண்டும்; தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று நாம் உறுதியேற்க வேண்டும்.

பிறமொழிப் பெயர்கள்

சில பத்தாண்டுகளுக்கு முன் ரமேஷ், சுரேஷ் என்ற பெயர்கள் தான் அதிகபட்சமாக பயன்பாட்டில் உள்ள பிறமொழிப் பெயர்களாக இருக்கும். மற்றபடி பெரும்பாலான பெயர்கள் தமிழிலேயே இருக்கும். ஆனால், இன்றைய நிலை என்ன தெரியுமா? பல பெயர்களை உச்சரிக்கவே முடிவதில்லை. அனைத்துப் பெயர்களிலும் ‘ஸ்ரீ’ என்ற பெயர் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளின் பெயர்கள் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக பெயருக்கு முன்போ, பின்போ ‘ஸ்ரீ’ சேர்த்துக் கொள்வது நாகரிகமாக இருந்தது. ஆனால், இப்போது  ஸ்ரீ அல்லது வடமொழி எழுத்து இல்லாத பெயர்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இந்த நிலை முதலில் மாற்றப்பட வேண்டும். நாம் நமது குழந்தைகள் அனைவருக்கும் தனித்தமிழில் பெயர் சூட்ட வேண்டும். முதலெழுத்துகளையும் தமிழில் குறிப்பிட வேண்டும். தாய், தந்தை இருவரின் முதலெழுத்துகளையும் இதே வரிசையில் குறிப்பிட வேண்டும். அனைவரும் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும். இவற்றை செய்ய நாம் இன்றே, இப்போதே உறுதிமொழி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆங்கில வழிக் கல்வி முறை தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் திட்டமிட்டு திணிக்கப்பட்டது என்றாலும் கூட, நமது ஆங்கில மோகம் தான் அதற்கு இடம் கொடுத்தது. அந்த மோகத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். தமிழ்வழிக் கல்வியில் தான் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நாம் உறுதியேற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அடுத்த ஓராண்டில் தமிழ் வழிக் கல்விக்கு மாறிவிடும். நாம் மனது வைத்தால் இந்த அதிசயத்தை நிச்சயமாக நிகழ்த்த முடியும்.

தமிழ் மின்ன ஒருவழி!

அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், அணிகலன்கள், ஆடைகள், எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கச் செல்லும் போது,‘‘எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழக அரசால் வரையறுக்கப்பட்டவாறு தமிழில் எழுத வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் கடையில் பொருட்களை வாங்குவதை நிறுத்தி விடுவோம்’’ என்று  நாம் பொருள் வாங்கும் கடையின் உரிமையாளர்/ மேலாளரிடம் கண்டிப்புடன் கூற வேண்டும். இதை ஓர் இயக்கமாகவே நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அடுத்த ஒரு மாதத்தில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கடைகளின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மின்னும்.

திருமண விழா, காதணி விழா, குல தெய்வ (முன்னோர்) வழிபாடு, ஈமக்கடன் போன்ற இல்லற வாழ்வியல் நிகழ்ச்சிகளில் பண்பாட்டுச் சிதைவுகள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்னைத் தமிழ் மற்றும் தமிழர் மரபுகளைப் பாதுகாத்திட மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழை வளர்ப்பதில் அரசின் பங்கு அளப்பரியது என்றாலும் கூட அதற்கான அழுத்தம் நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். தமிழ் குறித்த நூலில் அரசியல் பேசுவது முறையாக இருக்காது. ஆனால், தமிழையே அரசியலாக்க வேண்டியிருக்கிறது. அப்போது தான் தமிழை வளர்த்தெடுக்க முடியும். தமிழகத்தின் சாபக்கேடு என்னவென்றால் எதையாவது செய்ய வேண்டுமெனில் அதனால்  அரசியல்ரீதியாக என்ன பயன் கிடைக்கும்? என்று ஆட்சியாளர்கள் சிந்திப்பது தான். அதைத் தான் தமிழை வளர்த்தெடுப்பதற்கான ஆயுதமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் ஒரு காலத்திலும் வாக்கு வங்கியாக இருந்ததில்லை. 1967&ஆம் ஆண்டு  தேர்தலில் கூட திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அதை  ஒடுக்குவற்காக ஆட்சியாளர்கள் கையாண்ட வழிமுறைகள் மக்களிடையே உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது தான். அது இந்திக்கு எதிரான வாக்குகள் தானே தவிர, தமிழுக்கு ஆதரவான வாக்குகள் அல்ல. அதை திமுக ஆட்சியாளர்கள் நன்றாக உணர்ந்து கொண்டதால் தான் இந்திக்கு எதிரான உணர்வை தமிழுக்கு ஆதரவான உணர்வாக மாற்றாமல், ஆங்கிலத்துக்கு ஆதரவான உணர்வாக மாற்றினர். அதன்மூலம் தமிழை அவர்கள் சீரழித்தனர். அந்த நிலையை இப்போது நாம் மாற்ற வேண்டும். தமிழை வளர்த்தெடுக்கும் கட்சிகள் மட்டும் தான் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பா.ம.க.வின் செயல்திட்டங்கள்!

தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள கட்சிகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களைக் கொண்டுள்ள ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். 1989&ஆம் ஆண்டில் அக்கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்து பொது அரங்கில் வைத்து வருகிறோம். தமிழ் அரசியலாக்கப்பட்டிருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதோ ஆட்சிக்கு வந்திருக்கும். இதை நான் அரசியலுக்காக கூறவில்லை.... மாறாக தமிழ் வளர்ச்சிக்காக கூறுகிறேன்.

தமிழை ஆதரிக்காத கட்சிக்கு தமிழகத்தில் வாக்கு கிடைக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டால்  அனைத்துக் கட்சிகளும் தமிழ் குறித்த ஆர்வத்தை கடமைக்காகவாவது வளர்த்துக் கொள்வார்கள். அப்போது நிலைமை மாறும். தமிழ் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கும். தமிழ் வளரும்.

நான் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் தமிழை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு இருந்தாலும் கூட, அதை செய்யும்படி அவர்களுக்கு அழுத்தம் தரும் சக்தி நம்மிடம் தான் உள்ளது. அதை நாம் செய்ய வேண்டும் என்பது தான் எனது  கோரிக்கை.

அதெல்லாம் சரி.... தமிழை வளர்க்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
இந்த வினாவுக்கான விடைகள் முந்தைய அத்தியாயங்களில் பரந்து கிடக்கின்றன. முந்தைய அத்தியாயங்களில் தமிழ் வளர்ச்சி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்திருந்த யோசனைகளில் பாதியை நிறைவேற்றினால் கூட தமிழ் சிறப்பாக வளரும்; தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் ஒலிக்கும். அந்த யோசனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் நான் இங்கு பட்டியலிடுகிறேன்.

தமிழ் பயிற்றுமொழி கட்டாயம்

1) மழலையர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை செய்வது கடினமான காரணம் அல்ல. மக்களிடம் தமிழ் மொழி குறித்த ஆர்வமும், தமிழுக்காக புதிய முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும் இருந்தால் இது சாத்தியமானது தான். அத்துடன் தமிழை கட்டாயப் பாடமாக்க நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

2) தமிழ்நாட்டில் தமிழை அரியணை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் 1956&ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

3) வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்படுவதை  கட்டாயமாக்கும் அரசாணைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மொழிச்சட்டம்

4) தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதற்காக சில கடுமையான சட்டங்களை நிறைவேற்றுவதில் கூட தவறு இல்லை. ஸ்லோவாகியா நாட்டில் ஸ்லோவாக் மொழி பேசுவது தான் அந்நாட்டின் இறையாண்மையை போற்றும் செயல் என்று கூறி, ஸ்லோவாக் மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது.  சீனாவில் ஊடகங்களில்  மொழிக் கலப்பை தடுக்க சீன மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தமிழைப் பாதுகாப்பதற்காக, பிறமொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உரிமைகளையும் பறிக்காத வகையில் மொழிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.

5) செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய ஊடகங்களில் அன்னைத் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களுக்கான கலைச் சொற்களை உருவாக்கி, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியினை அன்னைத் தமிழ் மொழியில் வழங்கிட வேண்டும்.

6) சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானம் கடந்த 2006-ஆம் ஆண்டு திசம்பர் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 16ஆண்டுகள் நிறைவடைந்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்கச் செய்ய வேண்டும்.

7)ஆங்கிலமே தொடர்புமொழி என்னும் நிலைக்கு மாற்றாக, அன்னைத் தமிழையே தொடர்பு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

தமிழில் படித்தால் தான் வேலை

😎 தமிழகத்தில் பலரும் ஆங்கிலவழிக் கல்வி கற்பதற்கான காரணமாகக் கூறப்படுவது,‘‘ ஆங்கிலத்தில் படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்’’ என்பது தான். இதைவிட அபத்தம் எதுவும் கிடையாது.  ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அறிவு கிடையாது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் தமிழில் படித்தால் மட்டும் தான் தமிழகத்தில் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஆங்கில வழிக் கல்வி மீதான மோகத்தை தகர்த்து தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க முடியும்.

9) தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 18 மொழிகளில் அழைப்பிதழ் தயாரித்து எட்டாவது அட்டவணையில் அப்போது இருந்த 18 மொழிகளையும் (இப்போது 22) மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று 1998-ஆம் ஆண்டு தில்லியில் பா.ம.க. ஆட்சி மொழி மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இந்த கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அரசு நிர்வாகத்தில் தமிழின் பயன்பாட்டை பரவலாக்க முடியும்.

தமிழை வளர்ப்பதற்கான யோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சியும், நானும் முன்வைப்பது இது  முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை இத்தகைய யோசனைகளை ஆட்சியாளர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்துள்ளது. ஆனால், அவற்றை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான்  உண்மை.

விவாதிப்போம்... வலியுறுத்துவோம்

இப்போது கூட நான் இங்கு முன்வைத்திருக்கும் யோசனைகளை விட சிறப்பான யோசனைகள் தமிழறிஞர்களிடமும், தமிழ் உணர்வாளர்களிடமும் இருக்கக்கூடும். அவற்றை நமக்குள் பகிர்ந்து கொண்டு தமிழக அரசிடம் வலியுறுத்துவோம். இது குறித்து விவாதிப்பதற்காக எத்தனை கலந்தாய்வுக் கூட்டங்களை வேண்டுமானாலும் நடத்த நான் தயாராக இருக்கிறேன். இதுகுறித்து தொடர்ந்து  விவாதிப்போம்.... தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.... தொடர்ந்து  விவாதிப்போம்.... தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.... தொடர்ந்து  விவாதிப்போம்.... தமிழக அரசிடம் வலியுறுத்துவோம். தமிழை வளர்ப்பதற்கான தலையாயக் கடமைகளை இலக்கை எட்டும் வரை தொடருவோம்!

(நிறைந்தது)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages