எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

31. தமிழ் மண் பயனுறச் செய்த மக்கள் தொலைக்காட்சி!

தனித்தமிழில் நாளிதழ் நடத்துவதற்காக  தொடங்கப்பட்டது தமிழ் ஓசை என்றால், தனித்தமிழில் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள் இல்லாமல் ஓர் தொலைக்காட்சி அலைவரிசையை நடத்த வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டது தான் மக்கள் தொலைக்காட்சி ஆகும்.

தமிழ் மொழியின் உன்னதத்தை போற்ற வேண்டும்; தமிழ்க் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; தமிழரின் பண்பாட்டை பாதுகாக்க வேண்டும்; தமிழ் நாட்டின் உரிமைகளுக்கு முதலில் குரல் கொடுக்க வேண்டும் ஆகியவையே மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கங்கள். இந்த நோக்கங்களுடன் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி செயற்கைக்கோள் வானில் சிறகடிக்கத் தொடங்கியது மக்கள் தொலைக்காட்சி. ‘மண் பயனுற வேண்டும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து 17---&ஆம் ஆண்டில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

அணுஅளவும் ஆங்கிலச்சொல் இல்லை

மொழி, பண்பாடு, கலாச்சாரம் இம்மூன்றும் தொலைக்காட்சியின் உயிர் மூச்சு  என்பதை, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பறை சாற்றியது. தமிழர் பண்பாட்டை போற்றும் வகையில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்த ஆண் செய்தி வாசிப்பாளர்களும், பாரம்பரிய புடவைகளில் மிளிரும் பெண் செய்தி வாசிப்பாளர்களும், அணு அளவும் ஆங்கிலச் சொல் கலப்பின்றி பேசும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் அணிவகுத்து நின்றதால், மற்றவற்றில் இருந்து மாறுபட்டு நின்று, தமிழர்களின் தனித்த அடையாளமாய் மணி மகுடம் சூட்டியது மக்கள் தொலைக்காட்சி.

செந்தமிழே, உயிரே, நறுந்தேனே, செயலினை மூச்சினை உனக்களித்தேன் என்ற பாவேந்தரின் பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல், தமிழ் மண்ணும், தமிழ் மொழியும், தமிழினமும் மேன்மையுற வேண்டும். தரணி எங்கும் தமிழ்ப் பயிர் தழைத்தோங்கிட வேண்டும் என்பதற்காகவே, சின்னத் திரை ஊடகமாக மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. மக்கள் தொலைக்காட்சி மூலம் நானிலத்தில தமிழ்ப் பயிரை விதைத்திட நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகி வருகின்றன.

தமிழ் இலக்கணத்தை எளிமையாக எடுத்துக்கூறிய தமிழறிஞர் மா.நன்னன் வழங்கிய ‘களத்துமேடு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நெறியாள்கையில் ‘தமிழ் பேசு தங்கக் காசு’ போன்ற நிகழ்ச்சிகள் அடித்தட்டு மக்களுக்கும் தாய்த் தமிழை கொண்டு சேர்த்தன. மற்ற தொலைக்காட்சிகள் கண்டுகொள்ளாமல் விட்ட தமிழிசைப் பாடல்களை, அலைவரிசை மூலம் நிலை நிறுத்திய பெருமை மக்கள் தொலைக்காட்சிக்கு உண்டு. பள்ளிப் பருவத்து இளம் தளிர்களின் தனித்திறனை வெளிக்கொணர, திரையிசைப் பாடல்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு வணிக ஊடகங்கள் நிகழ்ச்சிகளை வடிவமைத்தன. ஆனால், மக்கள் தொலைக்காட்சி மட்டும் உலகப் பொதுமறையான திருக்குறளை கருப்பொருளாக வைத்தது என்பது தான் எனக்கு மிகவும் பெருமிதம் அளிப்பதாகும்.

100% தமிழ்

நாள்தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், வார இறுதி நாட்கள் மற்றும் திருநாள் கொண்டாட்டங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், நிகழ்ச்சித் தலைப்புகள் அனைத்திற்கும் தூய தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல், பொழுது போக்கு, சிந்தனைத் திறனை வளர்க்கும் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெறும் உரையாடல்களில், நூறு விழுக்காடு தமிழ் என்ற கொள்கையை பெருமையோடு கடைபிடித்து வருகிறது மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் வழிக் கல்வி தழைத்தோங்க வேண்டும், அரசுத் துறைகளின் வேலை வாய்ப்புகளில் தாய்மொழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும், அலுவல் மொழியாக தமிழ் ஆட்சி செய்யவேண்டும், வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிகழ்வுகளின் மூலமாகவும் நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தன்னலமின்றி பாடுபட்ட உணர்வாளர்களின் தியாகத்தை, நெஞ்சம் நிமிர்த்தி உயர்த்திப் பிடிக்கும் தருணங்களை கொஞ்சம் கூட தவறவிட்டதில்லை நமது மக்கள் தொலைக்காட்சி.

செய்திகளிலும் தனித்தமிழ்

பிற மொழிக் கலப்பின்றி நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் சரிபாதியாகக் கலந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. ஒருசார்பற்ற செய்திகள்,  அடக்குமுறை நடவடிக்கைகளை அழுத்தமாகப் பதிவு செய்தல், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல், அடித்தட்டு மக்களின் குமுறல்களை பிரதிபலித்தல் போன்ற காரணங்களால், உலகின் எந்த மூலையில் தமிழனுக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுத்தல் என நடுநிலையாளர்களின் மனதில் எளிதாக இடம்பிடித்தது மக்கள் செய்திகள்.

காற்றின் வழியே தகவல்களைத் தருவதோடு தனது சிறகுகளை முடக்கிக் கொள்ளாமல், ஆதிக்கம் செலுத்திய எண்ணற்ற ஆங்கிலச் சொற்களுக்கும்  பிறமொழிச் சொற்களுக்கும் முடிவு கட்டி, அதற்குரிய தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டியது மக்கள் செய்திகள். இதனால் வழக்கத்தில் பயன்படுத்தி வந்த ஆங்கிலம் அல்லது பிற மொழிச் சொற்களை மறந்து  தமிழ் மக்கள் தற்போது அழகு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் ஒரு சில இதோ...

அபகரித்து - கையகப்படுத்தி
சம்பவம் - நிகழ்வு
அலங்காரம் - ஒப்பனை
அவகாசம் - -காலக்கெடு
அஜாக்கிரதை - கவனக் குறைவு
அத்தியாவசியப்பொருள் - அன்றாடத் தேவைப்பொருள்
அவசியம் - கட்டாயம்
ஜனாதிபதி - குடியரசுத் தலைவர்
அபராதம் - தண்டம்
அமுலாக்கம் - நடைமுறைப்படுத்துதல்
அஸ்திவாரம் - அடித்தளம்
அபிவிருத்தி - வளர்ச்சி
அதிசயம் - வியப்பு, புதுமை, விந்தை
அகதிகள் - ஏதிலிகள்
அபாயம் - ஆபத்து
ஆஜர் - நேர் நிறுத்தல்
ஆஜர்படுத்துதல் - -முன்னிலைப்படுத்துதல்
ஆபரணங்கள் - -அணிகலன்கள்

தடம் மாறாத பயணம்

இதுபோன்று, இன்னும் நூற்றுக்கணக்கான சொற்களுக்கு ஊடக அகராதியாக நமது ‘மக்கள் தொலைக்காட்சி’ திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ‘மண் பயனுற வேண்டும்’ என்றால் மண் சார்ந்த இனம், அவர்கள் பேசும் மொழி, அவர்களின் பண்பாடு, அவர்களுக்கான உரிமை என அனைத்தும் மேம்பட பாடுபட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் தொலைக்காட்சி, அந்த தடம் மாறாமல் பயணித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்ச் சொற்களை சரியான உச்சரிப்புடன் பேசுவதற்கும், பிழையின்றி எழுதுவதற்கும், பயிற்சியளிக்கும் வகையில் தொடங்கப்பட்டதுதான் தமிழுக்கு முதல் வணக்கம் என்கிற நிகழ்ச்சி. சொற்களை கற்றுக் கொடுப்பதோடு, தமிழ் இலக்கியங்களில் புதைந்திருக்கும் ஆழ்கருத்துக்களையும் மொழிச்சார்ந்த சிந்தனையாளர்கள் துணையோடு விளக்கவும் செய்கிறது இந்த நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மூலமாக இனிமைத் தமிழின் இன்பத்தை பாமரனும் நுகரச் செய்கிறது.

விவேக வேட்டை

என்றுமே, எதையுமே தெரிந்துக் கொள்வதற்கு ஒரு சிலருக்கு தான் ஆர்வமிருக்கும் என்பதால், அனைவரும் செம்மொழியினை முறையாக அறிந்து பேசிட பரிசுகளும் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப விளையாட்டு நிகழ்ச்சிகளையும் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.. விவேக வேட்டை என்ற பெயரில், மொழி அறிவிலும், பொது அறிவிலும் சிறந்து விளையாடு பவர்களுக்கு பரிசுகளை அளித்து ஊக்கமளித்து வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது ஒளிப்பரப்பாகிறது என்றால், இதற்கு முன்னதாக பொது மக்களை களத்திலேயே சந்தித்து அவர்களுடன் மொழியோடு விளையாடிய கொஞ்சும் தமிழ், நொடிக்கு நொடி அதிரடி, சொல்லி அடி என பல்வேறு நிகழ்ச்சிகள் வெவ்வேறு காலத்தில் இடம் பெற்றன. மேலும் குழந்தைகளின் மனங்களில் குடி கொண்டிருக்கும் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றும் நிகழ்ச்சியான சின்ன சின்ன ஆசை என்ற நிகழ்ச்சியில் கூட நாக்கு பிறழாமல், தமிழ்ச் சொற்களை உச்சரிக்கக் கற்றுக் கொடுப்பது, தற்போதும் ஒளிப்பரப்பாகி வரும் அந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாகும்.

இறை பக்தி, இது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் பின்னிபிணைந்திருப்பதால், அதனையும் முறையாக காட்சிப்படுத்த தவறியதில்லை. தேவாரம், திருவாசகம் என இறை பக்தி பாடல்களையும் நிகழ்ச்சிகளாய் வடித்து பாமரனுக்கும் புரியும் வண்ணம் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. பன்னிரு திருமுறை, பண்பாடுவோம், பண்ணிசை வித்தகர்கள் ஆகியவை தமிழ் இன்பம் தரும் நிகழ்ச்சிகள் என்றால் அது மிகையல்ல. அது மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்தை, தமிழ் பக்தியினை கடல் கடந்து கொண்டு போய் சேர்த்த மாந்தர்கள் பலர் அதன் அடையாளங்களாக கட்டி வைத்த கோயில் களை அக்கரைச்சீமை ஆலயங்கள் என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. கூடவே தமிழ் மக்களின் குலதெய்வ வழிப்பாட்டையும் எங்க குலசாமி என்ற பெயரில் மக்கள் தொலைக்காட்சி காட்சிப்படுத்தி வருகிறது.

குறளோடு விளையாடு!

தமிழரின் வாழ்வியல் கருவூலமாக விளங்கிக் கொண்டிருக்கும் திருக்குறளை ஒரு காலத்தில் தமிழ் அமிழ்து என்ற பெயரில் அத்தனை குறட்பாக்களையும் எடுத்துக்காட்டோடு விளக்கியது என்றால், தற்போது பள்ளி மாணவர்கள், தித்திக்கும் திருக்குறளை கூறி, அதற்கு அழகுற பொருள் உரைத்து, பரிசை செல்லும் மாநில அளவிலான போட்டியாக உருமாற்றி வள்ளுவத்தின் பெருமையை போற்றும் நிகழ்ச்சியாக குறளோடு விளையாடு ஒளிபரப்பாகி வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக பிப்ரவரி மாதம் 21 ஆம் நாளினை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டுதோறும் தமிழ் மொழியின் மேன்மையினை போற்றிட, தமிழறிஞர்களின் நேர்காணல் மூலம் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, பிறமொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மொழி மீது தனிப்பற்றை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.

பொது அறிவு, விளையாட்டு, பக்தி, அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி, தமிழுக்கு மகுடம் சூட்டி, தமிழ் கலாச்சாரத்தை மட்டுமே வெளி உலகிற்கு சிறப்புடன் காட்சிப்படுத்தி வரும் ஒரே தொலைக்காட்சி நமது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறலாம்!

நாளை.... திரைப்படங்களுக்கு ‘இலக்கணம்’!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages