தமிழக முதல்வரை ஏமாற்றுவது ஆவின் நிர்வாகமா? பால்வளத்துறை அமைச்சரா?"
"ஏற்கனவே உற்பத்தி, விற்பனையில் இருக்கும் ஆவின் டிலைட் பால் மீண்டும் எப்படி அறிமுகம்? - பால் முகவர்கள் சங்கம் கேள்வி.
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தக் கூடிய UHT தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்படும் 90நாட்கள் காலாவதி கொண்ட "Aavin Delite" பால் பாக்கெட்டுகளை புதிதாக இன்று அறிமுகம் செய்துள்ளதாக ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில் 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் UHT (Ultra-High Temperature) தொழில்நுட்பத்தில் தயாராகும் 4.5% கொழுப்பு சத்து, 8.5% திடசத்துள்ள 180நாட்கள் வரையிலும் மற்றும் 3.5% கொழுப்பு சத்து, 8.5% திடசத்துள்ள 90நாட்கள் வரையிலும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தக் கூடிய "Aavin Delite" "Pure Cows Milk" எனும் பெயரிலான பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதோடு, தமிழகத்திலும் விற்பனையில் இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் UHT தொழில்நுட்பத்தில் 90 மற்றும் 120நாட்கள் காலாவதி தேதி கொண்ட UHT தொழில்நுட்பத்திலான பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கான கட்டமைப்புகளை சுமார் 30கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்பட்டு, 2019ம் ஆண்டு முதல் "Long Life" எனும் பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சேலம் ஒன்றியத்தின் பால் பண்ணையில் "Aavin Delite" "Pure Cows Milk", இணையத்தின் சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் "Long Life" எனும் பெயர்களில் 90, 120, 180நாட்கள் வரையிலும் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தக் கூடிய UHT தொழில்நுட்பத்திலான பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பழைய பாக்கெட் வடிவமைப்பை மற்றும் மாற்றி விட்டு "பழைய மொந்தையில் புதிய கள்" என்கிற அடிப்படையில் புதிதாக அறிமுகம் செய்வதாக கூறுவது தமிழக முதல்வர் அவர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றுகின்ற செயலாகும் என்பதால் ஆவின் நிர்வாகத்தின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பால் விற்பனையையும், பால் கொள்முதலையும் அதிகப்படுத்த ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்காமல் ஏற்கனவே உற்பத்தியில், விற்பனையில் உள்ள பால் மற்றும் பால் பொருட்களுடைய வடிவத்தையும், அளவையும் மட்டும் மாற்றம் செய்து புதிது போல கட்டமைக்க முயல்வது என்பது ஆவினை அழிவிற்கே கொண்டு செல்லும் என்பதால் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக கண்காணிக்க முன்வர வேண்டும் எனவும், அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்து பழைய பொருட்களை புதிதாக அறிமுகம் செய்வது போல் செய்யும் ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
- பொன்னுசாமி, நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment