எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
20. தமிழ்: மொழியல்ல... உணர்ச்சி அரசியல் ஆயுதம்!
தமிழை திராவிட இயக்கத்தினர் வளர்த்தார்களா.... அல்லது தமிழால் திராவிட இயக்கங்கள் வளர்ச்சி அடைந்தனவா? என்று கேட்டால் இரண்டாவது வாய்ப்பு தான் சரியான பதிலாக இருக்கும். திராவிட இயக்கங்களுக்கு தமிழ் மொழியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு. அந்தக் கடமையை அவை நிறைவேற்றவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.
திமுகவை வளர்த்த தமிழ்
இந்திக்கு எதிராக 1938-ஆம் ஆண்டிலும், 1965-ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்ட போராட்டங்கள் முறையே நீதிக் கட்சி வளர்ச்சிக்கும், தி.மு.க. வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களித்தன. 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததற்கு முக்கியக் காரணமே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான். ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே, அதாவது 1968-ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்தது; அதில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் தாக்கல் செய்யப்பட்டன என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, அந்த மாநாடே அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறப்படுவதும் உண்டு. திமுக ஆட்சியில் நடைபெற்ற ஒரே உலகத் தமிழ் மாநாடு 1968-ஆம் ஆண்டு மாநாடு தான். தமிழகத்தில் தமிழை வளர்க்கும் நோக்கத்துடன் அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் 50 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
முந்தைய அத்தியாயங்களில் நான் குறிப்பிட்டதைப் போன்று உலகத் தமிழ் மாநாடுகளை தனிநாயகம் அடிகளார் தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பு தான் நடத்தி வருகிறது. எனினும் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிகளை மட்டும் நடத்துவதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவாகும். 1968-ஆம் ஆண்டு மாநாட்டில் அவரது கனவு நனவானது. தமிழ் உயர் ஆய்வு மையமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பை நிறுவ அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை முன்வைத்த முனைவர் தனிநாயகம் அடிகளாரே இந்நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்படுவார் என உலகத் தமிழறிஞர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அத்திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் விளைவாக இந்நிறுவனம் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை. இந்த நிலை மாற்றப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கொண்டுவரப்பட வேண்டும். உலக தமிழறிஞர்களின் பிரதிநிதிகள், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆட்சிக்குழுவில் இடம் பெறவேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தினாலும் அது இன்னும் நனவாக வில்லை. தமிழ் வளர்ச்சி என்பது ஓர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தமிழறிஞர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டு 55 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்று வரை அந்த நிறுவனத்தை தமிழறிஞர்களிடம் ஒப்படைக்க திராவிடக் கட்சிகளின் அரசுகளுக்கு மனம் வரவில்லை. காரணம்... தமிழையும், தமிழ் சார்ந்த அமைப்புகளையும் உணர்ச்சி சார்ந்த ஆயுதமாக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் நினைப்பது தான்.
ஜெயலலிதா- உலகத் தமிழ் மாநாடு
எட்டாவது உலகத் தமிழ் மாநாடு 1995-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அப்போதைய ஜெயலலிதா அரசு நடத்தியது. மொரிஷியஸ் நாட்டில் 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது அடுத்த உலகத் தமிழ் மாநாட்டை லண்டன் நகரில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1991-96 காலத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் தான் நடைபெறவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து தஞ்சாவூரில் நடத்தினார். உலகத் தமிழ் மாநாடு என்று அறிவிக்கப்பட்டாலும் கூட அது அதிமுகவின் மாநாடு போலவே நடத்தப்பட்டது.
பொதுவாக உலகத் தமிழ் மாநாடுகளின் போது ஆய்வரங்க அமைப்பை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தான் தீர்மானிக்கும். ஆனால், தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் அனைத்தும் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படியே நடத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழறிஞர்கள் அவமதிக்கப் பட்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் எதுவுமே சுதந்திரமாக நடத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆய்வரங்க நிகழ்வுகளில் பங்கேற்க வந்த ஈழத்தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு பெரும் தலைகுனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. தமிழக அரசின் செயல் விமர்சனத்துள்ளானது.
அவப்பெயரைப் போக்க முயற்சி
எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியது தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக சரிந்து வரும் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகத் தான் லண்டனில் நடைபெறவிருந்த உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சாவூருக்கு கொண்டு வந்தார். 1991&ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே அளவுக்கு அதிகமாக அவப்பெயரை சம்பாதித்து வைத்திருந்தார். ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் சொத்துக்களை வளைத்துப் பறித்தல் என எல்லா வழிகளிலும் ஜெயலலிதா என்றால் முகம் சுளிக்கும் அளவுக்கு தான் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு இருந்தது. அவருக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஜெயலலிதா என்ற பெயர் தான் அந்த நேரத்தில் மிகவும் வெறுக்கத்தக்கதாக இருந்தது. அதை மாற்ற வேண்டும் என அவர் நினைத்தார்.
உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் மாநாடு நடக்கும் 5 நாட்கள் அதற்கு முன்பாக சில வாரங்களும் மக்களை கொண்டாட்ட உணர்வில் வைத்தல், மாநாடு என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவது தான் இத்தகைய மாநாட்டை நடத்தியதன் நோக்கம் ஆகும். இதற்கெல்லாம் மேலாக தமிழுக்கு மாநாடு நடத்தியவர் என்ற பெயரும், பெருமையும் மக்களிடையே நற்பெயரை பெற்றுக் கொடுக்கும், வாக்குகளை வென்று கொடுக்கும் என்பதால் தான் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை மிகப்பெரிய அளவில் உரிமைப் போராட்டம் நடத்தியும், பொருள் செலவு செய்தும் ஜெயலலிதா நடத்தினார்.
கலைஞர்-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
2010-ஆம் ஆண்டு கோவையில் கலைஞர் நடத்திய உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் அத்தகைய தன்மை கொண்டது தான். 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையில் இனப்படுகொலை உச்சத்தில் இருந்த காலத்தில் நடைபெற்ற 2009-ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட, ஆளுங்கட்சி எதிரான மனநிலை தான் மக்களிடம் நிலவியது. அதை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை கலைஞருக்கு இருந்தது. அதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஆகும். 2011&ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்ததால் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று கலைஞர் நினைத்தார். ஈழத்தமிழர்களை காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த தமக்கு எதிரான மனநிலையை மாற்ற முடியும் என அவர் நம்பினார்.
ஆனால், கலைஞரின் இந்த யோசனைக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தும் யோசனை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் நோபுரு கரஷிமாவுக்கு 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் அப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது. உலகத் தமிழ் மாநாடு என்பது சாதாரணமாக மக்களைத் திரட்டும் மாநாடு அல்ல. அதன் நோக்கம் தமிழ் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தான். அவ்வாறு தமிழ் குறித்து ஆராய்ச்சி செய்து அதன் கண்டுபிடிப்புகளை கட்டுரையாக தாக்கல் செய்ய 4 மாதங்கள் எந்த வகையிலும் போதாது. அதனால் 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முடியாது என்று நொபுரு கரஷிமா மறுத்துவிட்டார்.
அதுமட்டுமின்றி, அதற்கு முந்தைய எட்டாவது உலகத் தமிழ் மாநாடும் தமிழகத்தில் தான் நடந்தது. அப்போது நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகிகளின் மனதை உறுத்திக் கொண்டிருந்தன. அதனால் தமிழகத்தில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக இருந்தால்,‘‘5,000 பக்கங்களில் 5 தொகுதிகளாக அச்சிட்டு 2005-&ஆம் ஆண்டிலேயே விநியோகத்துக்குத் தயாராக இருந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வேடுகளை உடனடியாக வெளியிட வேண்டும்; மாநாட்டின்போது ஆய்வரங்கங்களுக்கும் உடன் நிகழும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இடையே தெளிவான எல்லை வரையறுக்கப்பட வேண்டும்’’ என்ற இரண்டு தெளிவான நிபந்தனைகளை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் நொபுரு கரஷிமா விதித்தார்.
உடைந்தது தமிழாராய்ச்சி மன்றம்
இதுதொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாநாட்டுக்கு அனுமதி தர இயலாது என்று கூறிய நொபுரு கரஷிமா, மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கு பதிலாக முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் 2010&ஆம் ஆண்டு ஜுன் 23 முதல் 27&ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் நடத்தினார். அந்த மாநாடும் கலைஞரின் புகழ்பாடும் மாநாடாகவே அமைந்திருந்தது.
ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இருவருமே தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கான கருவியாகத் தான் உலகத் தமிழ் மாநாடுகளைக் கருதினார்கள். விதிகளை வளைத்து அவர்கள் இருவரும் முறையே எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவற்றை நடத்தினாலும் கூட அவர்களின் நோக்கங்கள் நிறைவேறவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் இருவரும் அரசியல் லாபத்திற்காக தமிழை பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டது தான்.
பத்தாவது உலகத்தமிழ் மாநாடு
ஆனாலும், தமிழை உணர்ச்சி அரசியல் கருவியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்துவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்று நினைத்தார். அதன்படி 2019-ஆம் ஆண்டில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த அவரது அரசு திட்டமிட்டது. ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 2019-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது.
நாளை..... எங்கே தமிழ்.... எதிலே தமிழ்!
No comments:
Post a Comment