முதல் வாக்காளரின் இறுதி ஊர்வலம் - நேரில் பங்கேற்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் இறுதி ஊர்வலத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பங்கேற்கிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியி(106) இறுதி ஊர்வலம் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கல்பாவில் நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், அந்த கிராமத்திற்கு புறபட்டுள்ளார்.
நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952, ஜனவரி - பிப்ரவரியில் நடைபெற்றது.
எனினும், அந்த சமயத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருக்கும் என கருதப்பட்டதால் அங்கு முன்கூட்டியே, அதாவது 1951, அக்டோபர் 25ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அன்றைய தினம் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார்.
இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் அவர் என அறியப்பட்டார்.
அதுமுதல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் ஷியாம் சரண் நேகி தவறாமல் வாக்களித்து வந்தார்.
கடந்த 2ம் தேதி, உடல் நிலை பாதிக்கப்பட்ட ஷியாம் சரண் நேகி முதல்முறையாக தனது வாக்கினை தபால் வாக்காக செலுத்தினார்.
இது அவர் வாக்களித்த 34வது பேரவைத் தேர்தல் வாக்காகும்.
சுதந்திர இந்திய வரலாற்றின் பாரம்பரிய அடையாளங்களில் ஒருவராக மாறிப்போன ஷியாம் சரண் நேகி, தனது 106வது வயதில் தனது சொந்த கிராமமான கல்பாவில் இன்று அதிகாலை காலமானார்.
ஜனநாயகத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றான வாக்கு செலுத்துவதை தவறாமல் செய்து வந்த அந்த மாமனிதரின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கல்பா கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.
Telegram: t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment