வங்கிகள் அராஜகத்தை யார் கட்டுப்படுத்துவது?- எழுத்தாளர் சமஸ்.
எங்கள் நிறுவனத்தின் ஹெச்டிஎஃப்சி வங்கிக் கணக்கு சில நாட்களுக்கு முன் முடங்கியது. வங்கியைத் தொடர்புகொண்டபோது 'ஏதோ தொழில்நுட்பப் பிரச்சினையாக இருக்கும். எங்கள் தரப்பில் எதுவும் செய்யவில்லை' என்றார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் முடக்கம் சரியாகவில்லை. ”ஏடிஎம் பின் எண்ணை மாற்றுங்கள்; ஆன்லைன் பாஸ்வேர்டை மாற்றுங்கள்” என்று சொன்னார்கள். அப்படியெல்லாம் செய்தும் பலன் இல்லை. அடுத்து, இரு நாட்கள் விடுமுறை.
இன்று மீண்டும் வங்கிக்குச் சென்றால், ஒருவர் மாற்றி ஒருவர் என்று கூடி கணக்கைப் பார்த்துவிட்டு, 'மேலே இருந்து முடக்கியிருக்கிறார்கள். ஒரு ஃபார்ம் உங்களிடமிருந்து வர வேண்டியிருக்கிறது' என்றார்கள். வருமான வரி சம்பந்தப்பட்ட ஒரு படிவம் அது.
அப்படி ஒரு படிவம் வேண்டும் என்று என்னிடம் வங்கித் தரப்பில் இருந்து யாரும் இதுவரை கேட்கவில்லை. மின்னஞ்சல் அல்லது செல்பேசி வழியிலான தகவலும் எனக்கு அனுப்பப்படவில்லை. கணக்கு முடங்கியிருக்கிறது என்று நான் ஏற்கெனவே சென்றபோதும் இந்தக் காரணம் அவர்களால் கண்டறியப்படவில்லை. "உங்களுடைய ஆன்லைன் அக்கவுன்ட்டை நீங்கள் லாகின் செய்தால், மேலே சின்னதாக ஸ்க்ரோல் ஓடும்; பார்த்திருக்க தவறியிருப்பீர்கள்!" என்றார்கள்.
எனக்கு வந்த கோபத்துக்கு எல்லையே இல்லை. ஜிபே வந்துவிட்ட பிறகு, பெரும்பாலான பரிவர்த்தனைகள் அதன் வழியே நடக்கின்றன. ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாத முதல் தேதிகளில் செல்வதைத் தவிர எங்களுக்குப் பெரும்பாலும் தேவை இல்லை. அப்படி இருக்க நான் செல்லாத ஒரு இடத்தில் எனக்கான செய்தியை அதுவும் டிவியில் அடிக்குறிப்பு ஓடுவதுபோல ஓட்டுவார்கள்; தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வது என்ன முறை?
மேலாளர் நல்ல மனிதர். “எனக்குப் புரிகிறது சார். நம் கிளையில் இது நடக்கவில்லை சார்” என்றார்.
”எனக்கு கிரடிட் கார்டு தேவையில்லை; கடன்கள் ஏதும் வேண்டாம் என்று நூறு முறை சொல்லிவிட்டேன். ஆனால், வாரத்துக்கு நூறு முறை உங்கள் வங்கி சார்பில் செல்பேசி அழைப்புகள் வருகின்றன. இந்தப் படிவம் வங்கிக்கு அவ்வளவு அவசியம் என்றால், என்னைத் தொடர்புகொண்டு ஒரு கால் பேசுவதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முடக்குவது அதற்கு இழுக்கு இல்லையா? இது அராஜகமாக இல்லையா?”
யாரிடமும் பதில் இல்லை.
ஆடிட்டருக்குப் பேசினேன். அடுத்த சில நிமிஷங்களில் படிவத்தை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார். நிறுவனத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சலிலிருந்து அதை வங்கிக்கு அனுப்புகிறேன். மேலாளர் சொல்கிறார். ”சார், இதை நீங்கள் நேரில் வந்துதான் பிரின்ட் அவுட்டாக தர சீல் போட்டுத் தர வேண்டும்!”
பணிகளைக் கணினிமயமாக்குதல் என்பது சம்பந்தப்பட்ட நிறுவனம், வாடிக்கையாளர் இரு தரப்புகளுக்குமான
இரு வழிப் பாதையாக இருக்க வேண்டும். இந்திய வங்கிகளைப் பொறுத்தமட்டில் அது பெரும் அளவில் ஒற்றைவழிப் பாதை. குறிப்பாக, தனியார் வங்கிகள்.
“உங்கள் வங்கி அங்கீகரித்திருக்கும் மின்னஞ்சலில் இருந்துதானே அனுப்புகிறேன். நீங்கள் பணம் அனுப்புவதற்கான பின் உட்பட அதே மின்னஞ்சலில் அனுப்புகிறீர்கள். இப்போது ஒரு படிவத்தை - அதுவும் அரசுத் துறை சார்ந்தது - நான் நேரில் வந்து தர வேண்டும் என்கிறீர்கள்?”அவர் மிகுந்த சங்கடத்தோடு சொல்கிறார், “எங்களுக்கு இதுதான் நடைமுறை.”
பொதுத் துறை வங்கி உள்பட வேறு சில வங்கிகளிலும் எனக்குக் கணக்கு இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு வங்கியும் தத்தமது வசதிக்கேற்ப விதிகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறனவே அன்றி அரசின் வழிகாட்டுதல், பொது முறைமை என்று ஒன்று இன்று செயலில் இல்லை. தவிர, எல்லா விஷயங்களையும் மையப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 'ஹெச்டிஎஃப்சி' இந்த அராஜகங்களின் உச்சம்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
நாம் மத்திய - மாநில உறவுகள் சார்ந்து மட்டும் ‘மையப்படுத்துதல்’ பிரச்சினையைப் பேசுகிறோம். வங்கித் துறை பல துறைகளிலும் இன்று உருவாகிவரும் அபாயகரமான போக்கு எதுவென்றால், மையப்படுத்துதல். உள்ளூர் வங்கியில் ஒரு பிரச்சினை என்றால், பேச - கேள்வி கேட்க - பதில் அளிக்க ஆள் இருப்பார்கள். இந்த மையப்படுத்தப்பட்ட முறையில் எல்லாமே தானியங்கி இயந்திரச் செயல்பாடு அல்லது உங்களுக்கு முகம் தெரியாத மூன்றாம் ஆட்கள்தான்.
எங்கள் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள வங்கி இது. அங்கு கணக்கு தொடங்க அதுவே பிரதான காரணம். ஆனால், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எல்லாம் அப்பாற்பட்ட இடத்தில் இருக்கின்றன. வங்கியை மாற்றிக்கொள்ளுதல் என்பது எளிய முடிவு. வங்கிகளின் தடித்தனத்தை மாற்றிடுதலே நிரந்தரத் தீர்வு.
அலுவலகம் வந்தேன். சாரி சார் சொல்கிறார், "எங்க அப்பாவுக்கு 95 வயசு ஆகுது. கையெழுத்து நடுங்குது. நேர்ல வந்து கையெழுத்து போட்டத்தான் பென்ஷன் எடுக்க முடியும்னு வரச் சொல்றாங்க. தட்டுத்தடுமாற நேர்ல அழைச்சுக்கிட்டு போறோம். அவரே கையெழுத்து போடுறார். சரியா பொருத்தலையேன்னு சொல்றாங்க. யாரோ பத்துப் பேர் தப்பு பண்ணலாம். இவ்வளவு பென்ஷன் அக்கவுன்ட் இருக்கு. அதுக்குன்னு ஒரு ஆள் போடு. வீட்டுக்குப் போய் பென்ஷனர் இருக்கிறாரான்னு அவர் பார்க்கட்டும். அதுக்கு எதாவது சார்ஜ் பண்ணாக்கூட கட்டிடலாம். ஒவ்வொருத்தரையும் திருடன் இல்லைன்னு நிரூபிக்க அலைக்கழிக்கிறது அவலம் இல்லையா?"
அடிப்படையில் இந்த அலைக்கழிப்பு இந்திய மனோபாவத்தின் வெளிப்பாடு. மனிதர்கள் மற்றும் நேரத்தின் மீதான மரியாதையோ, கண்ணியமோ கருதாத திமிர்த்தனத்தின் வெளிப்பாடு. கேள்விக்குள்ளாக்கித்தான் அதைக் கரைக்க வேண்டும். தொட்டது தொண்ணூறுக்கும் 'வங்கிக்குப் போ!' என்று சொல்லும் ஒன்றிய அரசையும், ரிசர்வ் வங்கியையும் இதுகுறித்தெல்லாம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டும்!
- எழுத்தாளர் சமஸ்.
No comments:
Post a Comment