தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு உகாதி திருநாளைக் கொண்டாடும் அந்த மொழிகளைப் பேசும் சகோதர, சகோதரிகளுக்கு - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
‘‘முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’’ என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தெலுங்கு பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் தமிழர்களிடமிருந்து மொழியால் வேறுபட்டு இருந்தாலும் சிந்தனையால் ஒன்றுபட்டவர்கள்; உடலால் வேறுபட்டாலும் உயிரால் ஒன்றுபட்டவர்கள். இதற்கு வாழும் எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். தமிழ்நாடு மாநிலம் தான் மொழியாலும், பிற வகைப்பாடுகளாலும் வேறுபட்டவர்களை ஒன்றாக்கி ஒற்றுமையாக வாழச் செய்யும் மாநிலம் ஆகும்.
உகாதி நாளில் தான் உலகம் பிறந்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். உலகத்தை உருவாக்கிய உகாதி நாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment