நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம்
முழுமையாக நிறைவேறுவது எந்நாளோ? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா,
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட உழவர்களின் கனவான நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் கனவாகவே தொடருகிறது. நந்தன் கால்வாயில் அவ்வப்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவை எதுவும் நந்தன் கால்வாய் பாசனப் பகுதிகளின் தேவையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மையாகும்.
திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகள் என மொத்தம் 36 ஏரிகளை நிரப்பி, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தித் தருவது தான் நந்தன் கால்வாய் திட்டம் ஆகும். கீரனூர் அணையும், கால்வாய்களும் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிதைந்து விட்ட நிலையில், 1972-ஆம் ஆண்டில் தான் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கோவிந்தசாமி வேளாண்துறை அமைச்சராக இருந்த போது, அதை சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர் காலமாகி விட்டதால் பணிகள் நிறைவடையவில்லை.
அதன்பின் பலமுறை நந்தன் கால்வாயை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, எதுவும் நந்தன் கால்வாய்த் திட்டத்தை முழுமையாக்கவில்லை. இப்போதும் கூட ரூ.35 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பனைமலை ஏரி வரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றுள்ளது. ஆனால், மழையால் அதிக நீர் கிடைத்ததால் தான் இது சாத்தியமானது; மழை குறைந்தால் அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வது சாத்தியமல்ல. மாறாக தென்பெண்ணையாறு & துரிஞ்சலாறு இணைப்பை செயல்படுத்துவதன் மூலம் தான் நந்தன் கால்வாயில் எப்போதும் நீர் ஓடுவதை சாத்தியமாக்க முடியும்.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூரில் கட்டப்பட்டுள்ள அணையிலிருந்து முதன்மைக் கால்வாய், கிளைக்கால்வாய் ஆகியவற்றை அமைத்து தென்பெண்ணையாற்று நீரை சமுத்திரம் ஏரிக்கும், அங்கிருந்து ஓலையாற்றின் வழியாக துரிஞ்சலாற்றில் கட்டப்பட்டுள்ள கீரனூர் அணைக்கும் கொண்டு வருவதற்கான திட்டத்தை தமிழக அரசு தயாரித்திருக்கிறது. தென்பெண்ணையாறு & பாலாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டம் ரூ.285 கோடியில் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே இத்திட்டம் உள்ளது. இத்திட்டத்தை விரைவுபடுத்தி உடனடியாக இணைப்புப் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
தென்பெண்ணையாறு - ஓலையாறு - துரிஞ்சலாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ஏரிகள், நந்தன் கால்வாய்த் திட்டத்தின் மூலம் 36 ஏரிகள் என 58 ஏரிகளும், அவற்றை சுற்றியுள்ள 57 கிராமங்களும், அவற்றை நம்பியுள்ள பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் பயனடையும். நந்தன் கால்வாயில் வரும் கூடுதல் நீரைக் கொண்டு மேலும் 13 ஏரிகளையும் நிரப்ப முடியும். இதுவும் கூட சாத்தனூர் அணையில் 0.767 டி.எம்.சி மட்டுமே கூடுதல் நீர் கிடைக்கும்; அதிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் 11 நாட்களுக்கு மட்டும் தண்ணீரை திறந்து விட முடியும் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலானது தான். ஆனால், கடந்த ஆண்டில் தென்பெண்ணையாற்றிலிருந்து 130 டி.எம்.சி நீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு கூடுதல் நீர் கிடைத்தால் கூட நந்தன் கால்வாய் திட்டத்தின் மூலமாக விழுப்புரம் & திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளை வளம் கொழிக்கச் செய்ய முடியும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் நந்தன் கால்வாயுடன் இணைந்த ஏரிகளை நிரப்புவது மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 50&க்கும் மேற்பட்ட சிறு ஏரிகளை நிரப்புவதுடன், வீடூர் அணை வழியாக புதுச்சேரிக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொருபுறம் நந்தன் கால்வாய் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். கீரனூர் அணையில் தொடங்கும் நந்தன் கால்வாய் பனைமலை ஏரியில் முடியும் வரை சில இடங்களில் மட்டும் கால்வாய் மீது சிமிட்டி பூச்சு பூசப்பட்டுள்ளது; சில இடங்களில் மட்டும் கால்வாய்க் கரைகள் மீது தார்ச்சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிற இடங்களில் மண் பூச்சும், மண் சாலைகளும் தான் உள்ளன. இந்த நிலையை மாற்றி கால்வாயின் தொடக்கம் முதல் இறுதி வரை சிமிட்டி பூச்சும், தார் சாலைகளும் அமைக்கப்பட வேண்டும்.
நந்தன் கால்வாயில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள வன்கைப்பற்றல்கள் (ஆக்கிரமிப்புகள்) முழுமையாக அகற்றப்பட வேண்டும். நந்தன் கால்வாய் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள 37.60 கி.மீ நிலப்பரப்பும் ஒரு மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விரைவில் திருவண்ணாமலை& விழுப்புரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment