அனைவருக்கும் நன்மையே செய்ய வேண்டும் என்று போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துக் கொண்டார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கும், தனி மனிதனுக்கும் பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் இரமலான் திருநாளாகும்.
இரமலான் திருநாளின் நோக்கமே அனைவரும் மகிழ்ந்திருக்க வேண்டும்; அனைவரும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்; எதிரிகள் நம்மை சீண்டினாலும் நாம் அதற்கு ஆளாகாமல் விலகிச் செல்ல வேண்டும்; தூய்மையையும், உடல்நலனையும் காக்க வேண்டும்; உணவின்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பவை தான். இரமலானைத் தவிர்த்து விட்டு இந்த போதனைகளை ஆய்வு செய்து பாருங்கள்.... இவை அனைத்தும் உலக நன்மைக்காக போதிக்கப்பட்டவை என்பதை அனைவராலும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.
நன்மைக்கான போதனைகளை யார் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் தேவையில்லை. இதை உணர்ந்து உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
No comments:
Post a Comment