பாட்டாளிகளுக்கு ராணித்தேனீ சொல்லும் பாடம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல். - Agnipuratchi

பாட்டாளிகளுக்கு ராணித்தேனீ சொல்லும் பாடம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல்.

Share This

பாட்டாளிகளுக்கு ராணித்தேனீ சொல்லும் பாடம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தொண்டர்களுக்கு மடல்.

( எனது முகநூல் பக்கத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததைப் போல பா.ம.க. நாடாளுமன்றத் தொகுதி ஆய்வுக் கூட்டத்தில் இலக்கை அடைய எவ்வாறு உழைக்க வேண்டும் என்பது குறித்து பாட்டாளிகளிக்கு ஓர் இராணித்தேனீ பாடம் எடுத்தது. அது தான் இந்த பதிவு. தூக்கணாங்குருவி பாடம் நடத்தியது குறித்த பதிவு அடுத்து வெளிவரும்)

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

நான் தான் இராணித்தேணி. தேனீக்களுக்கு தலைமை வகிப்பவள். 

அரசியலில் உச்சங்களைத் தொட்டவர் மருத்துவர் அய்யா, மற்றவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல விஷயங்களை சாதித்துக் காட்டியவர் மருத்துவர் அய்யா.

பாட்டாளி மக்கள் கட்சியின்  தேர்தல் உத்தி குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்படி அவர் அழைப்பு விடுத்ததை ஏற்று இந்தக் கூட்டத்தில் உரையாற்ற  இராணித்தேனீயான நான்  இங்கு வந்திருக்கிறேன்.

இந்தியாவில் உள்ள தலைவர்கள் அனைவரும் பார்த்து பயந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்  கலைஞரும், ஜெயலலிதாவும்.  ஆனால், இந்தியாவே அஞ்சிய அவர்கள் ஒரு தலைவரைக் கண்டு  அஞ்சினார்கள்.  அந்த தலைவர் தான் உங்கள் அய்யா.
ஏராளமானவர்களை மத்திய அமைச்சர்களாகவும்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாவும் ஆக்கி அழகு பார்த்த  மருத்துவர் அய்யா அவர்கள், இன்று வரை ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியைக் கூட வகித்ததில்லை. இந்திய அரசியலில்  ஜே.பி. எனப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு அடுத்தபடியாக அரசியலில் துறவியாக இருப்பவர் அவர் தான்.

தேர்தல் அரசியலும் அவருக்கு அத்துபடி. மிகப்பெரிய சவால்களையெல்லாம் சந்தித்து வெற்றி பெற்றவர் அவர்.

அதனால், தேர்தல் உத்திகள் குறித்த கூட்டத்தில் உரையாற்ற தகுதியானவர் அவர் தான். ஆனால், அவர் ஏன் எங்களை அழைத்தார் என்ற ஐயத்துடன் தான் இங்கு பேச வந்தேன்.

தேனீக்களான எங்களுக்கு வழிகாட்ட இராணித்தேனீயான நான் இருக்கிறேன்.  உங்களுக்கு வழிகாட்ட  சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் இருக்கிறார்.

அவரது போராட்ட வரலாற்றை படித்தாலே, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, கடுமையாக உழைக்கத் தோன்றும்.  ஆனால், எளிய இலக்கை அடைய நாங்கள் கடுமையாக உழைக்கும் நிலையில், கடினமான இலக்கை அடைய உங்களில் பெரும்பான்மையினர் ஏன் கடுமையாக உழைக்க மறுக்கிறீர்கள்? என்பது தான் எனது வினா.

தேனீக்கள் சமூகத்தில் இராணித்தேனீயான நான் தான் தலைவன்.  எனக்கு கீழ் ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும், வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கிலும் இருக்கும்.  இராணித்தேனீயான நான் பிறக்கும் போதே இராணித் தேனீயாகவே பிறப்பதில்லை. மிகவும் சாதாரணமான தேனீயாகத் தான் பிறக்கிறேன். உங்கள் கட்சிகளில் ஒரு தலைவருக்குப் பிறகு எவ்வாறு இன்னொரு தலைவர் உருவாகிறாரோ, அதேபோல் தான் ஒரு இராணித்தேனீக்குப் பிறகு இன்னொரு இராணித்தேனீ தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எங்கள் இனத்தில் மலர்களில் இருந்து தேனை சேகரிப்பது, கூடு கட்டுவது உள்ளிட்ட அனைத்தையும் செய்பவை வேலைக்காரத் தேனீக்கள் தான். இவை அடிப்படையில் பெண் தேனீக்கள்; ஆனால், மலட்டுத்  தன்மை கொண்டவை.பிறந்து மூன்று வாரங்களிலேயே வேலைக்காரத் தேனீக்கள், மலர்களில் தேன் சேகரிக்கத் தயாராகிவிடும்.  தேனீக்கள் நிறைய பூந்தேனைச் சேகரிக்கும். தேனை  உறிஞ்சி தங்கள் வயிற்றில் சேமித்துக் கொள்ளும்.

தேனீக்களின் வயிறு எப்படி அமைந்திருக்கிறது தெரியுமா? உணவுக் குழாய்க்குள் சென்ற திரவ உணவை தனியாகச் சேகரித்து வைத்துவிட்டு, பிறகு தேவைப்படும் நேரத்தில் மீண்டும் வெளியே கொண்டு வரும் வகையில் அமைந்திருக்கிறது. வயிற்றில் அந்தத் தேன், தேனீயின் எச்சிலுடன் சேர்கிறது. அறுகோண வடிவிலான தேன் அறைகளை அமைப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், நாங்கள் திட்டமிட்டு உழைத்து அதை செய்கிறோம்.

உங்கள் பணியும் கிட்டத்தட்ட அதே போன்றது தான். கிராமக் கிளையில் தொடங்கி மாநிலம் வரை கட்சி அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் பல்வேறு பணிகளைச் செய்து மக்கள் ஆதரவைப் பெற வேண்டும். மக்களுக்கான போராட்டங்களை நடத்தி அவர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற வேண்டும்.  தேர்தல் நேரத்தில் மக்களுக்காக ஆற்றிய பணிகளையும், ஆற்றப் போகும் பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி  அவர்களின் வாக்குகளை பெற வேண்டும். இது தான் உங்கள் பணி. இதற்காக வாக்குச்சாவடி களப்பணியாளர்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

ஓரறிவு உயிரினங்களான நாங்கள் எந்த வசதியும் இல்லாமல் எங்கள் உழைப்பை மட்டுமே நம்பி, எங்கள் இலக்கை அடைய உழைத்துக் கொண்டிருக்கிறோம். தேனீக்களான நாங்கள் 90 நாட்கள் மட்டுமே உயிர்வாழும் பூச்சிகள். ஆனால்,  அந்த 90 நாட்களில் ஒரு நாள் கூட ஓய்வெடுப்பதில்லை. 90 நாள் வாழ்நாளில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் செய்கிறோம்.
நீங்கள் ஆண்டுக்கணக்கில் வாழும் உயிரினங்கள். தமிழ்நாட்டில் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நீங்கள் வலிமையாக இருக்கிறீர்கள். அவற்றில் 60 தொகுதிகளில்  வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில்  ஆட்சியைப் பிடித்து விடலாம். எங்களிடம் அதிநவீன வசதிகள் எதுவும் இல்லை. ஆனாலும் நாங்கள் உழைக்கிறோம், உழைக்கிறோம், உழைக்கிறோம், உழைக்கிறோம், உழைக்கிறோம்.... உழைத்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால், நீங்கள்  ஆறறிவுக்கும் மேலாக செயற்கை அறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.  நான்காம் தலைமுறை தொழில்நுட்பங்கள், முகநூல், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் போன்ற சமூக ஊடக செயலிகளும், செல்பேசிகள், மடிகணினிகள் போன்ற  அதி நவீன வசதிகளும் உங்களுக்கு உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் உழைப்பை எளிதாக்கிக் கொள்ளலாம். ஆனால், அதை ஏன் நீங்கள் செய்ய மறுக்கிறீர்கள். ஆனால், அந்த தொழில்நுட்பங்கள் எங்களுக்கு இல்லை என்பதால் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. உழைப்பு என்றால் அதற்கு நீங்கள் எங்களை உதாரணம் காட்டுகிறீர்கள்.  இந்த நிலை மாறி உங்களை நாங்கள் உதாரணம்  காட்டும் நாள் எப்போது வரும்?

எங்களுக்கான உணவை சேகரிக்க ஒவ்வொரு தேனீயும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பறக்கின்றன. தங்களின் இனத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் தேனீக்கள் இவ்வாறு திட்டமிட்டு, கடுமையாக உழைக்கின்றன. ஆனால்,  தேர்தல் வெற்றிக்காக மருத்துவர் அய்யா அவர்கள் உங்களுக்கு கொடுத்துள்ள பணி,  ஒவ்வொருவரும் ஒரு தெருவில் உள்ள 20 குடும்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உள்ள 100 வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெற்றுத் தாருங்கள் என்பது தான். அதற்காக நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் கூட பயணிக்க வேண்டியிருக்காது.

நாங்கள் செய்யும் பணியில் லட்சத்தில் ஒரு பங்கை செய்தாலே உங்கள் இலக்கை நீங்கள் அடைய முடியும் எனும் போது அதை செய்ய நீங்கள் தயங்குவது ஏன்? உங்களைத் தடுப்பது எது? 

60 இடங்களில் வெற்றி பெற்றாலே நீங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதற்கான நீங்கள் திட்டங்களையெல்லாம் வகுக்கத் தேவையில்லை. மருத்துவர் அய்யா அவரது அனுபவத்தின் துணை கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாரோ? அதை செய்தாலே போதுமானது.

அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டில்  அடுத்த ஆட்சி உங்களுடையது தான்.

நிறைவாக ஒரு செய்தி...

சமூகநீதி, அரசியல், விவசாயம், மனிதநேயம் ஆகியவற்றில் மருத்துவர் அய்யா அவர்கள் எவ்வாறு அக்கறை கொண்டிருக்கிறாரோ, அதே அளவு பிற உயிரினங்கள் மீதும் அன்பு காட்டுகிறார். அவற்றுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என்று நினைக்கிறார்.

மருத்துவர் அய்யா அவர்கள் காலையில் எழுந்தவுடன் கண்களைக் கசக்கி கொண்டு, இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் எந்தக் குறையுமின்றி நன்றாக வாழ வேண்டும்  என்று வேண்டுவதையே வாடிக்கையாகக் கொண்டவர். அவரை பின்பற்றும் நீங்கள் எங்களுக்கு ஓர் உதவி செய்யுங்கள். நாங்கள் அரும்பாடு பட்டு கட்டிய தேன் கூடுகளை கலைக்க எவரேனும் முயன்றால் அதை தடுத்து நிறுத்துங்கள். மிக்க நன்றி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages