வரலாற்று வடம் பிடிக்கும் பெண்களின் தேர்! - Agnipuratchi

வரலாற்று வடம் பிடிக்கும் பெண்களின் தேர்!

Share This

வரலாற்று வடம் பிடிக்கும் பெண்களின் தேர்!

கொத்தமங்கலம் தேர்த் திருவிழா வழக்கம்போல செய்தித்தாள்களில் ஒரு சில பத்திகளோடு முடிந்துவிட்டது இந்த வருடமும். பெண்கள் மட்டுமே தேர் இழுத்த இந்தத் திருவிழாவுக்குப் பின்னால் ஒரு மாபெரும் உரிமைப் போராட்டம் இருக்கிறது என்பதை அறிந்தோ அறியாமலோ கிராமத்துப் பெண்கள் பேச்சியம்மனைக் கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

புதுக்கோட்டையிலிருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பச்சைப் பசேல் கிராமம்தான் கொத்தமங்கலம். தென்னந்தோப்புகள் சூழ்ந்த இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் நடக்கும் 12 நாள் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா. இந்த வருடம் மே மாதம் 28ஆம் தேதி கொத்தமங்கலத்தில் தேர்த் திருவிழா களைகட்டியது.

முத்துமாரியம்மன் பிரம்மாண்ட தேரில் வர, வாழவந்த பிள்ளையார் அதற்கு அடுத்த தேரில் வர, முன்னால் பேச்சியம்மன் சப்பரம் எனப்படும் சிறுவகை தேரில் வருகிறார். என்றாலும் கொத்தமங்கலத்தின் அடையாளமே இந்தப் பேச்சியம்மன் தேர்தான். ஆம், பேச்சியம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துவருகிறார்கள். ஊரின் வீதிகள் முழுவதும் தேரை இழுத்து மீண்டும் கோயிலுக்கே வந்து பத்திரமாக பேச்சியம்மனை தேரில் இருந்து இறக்குகிறார்கள்.

பெண்கள், பெண் குழந்தைகள் வயது வித்தியாசம் இன்றிப் பேச்சியம்மன் தேரிழுத்தார்கள். ஆண்களின் கை தவறியும்கூட வடத்தில் பட்டுவிடக் கூடாது. அவ்வளவு ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்வார்கள். இரு வடங்களுக்கும் இடையே கூட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே ஆண்கள் இருப்பார்கள்.

வரலாற்றின் வடம் பிடிப்போம்!

இந்தப் பேச்சியம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பதற்கான காரணத்தை அறிய முனைந்தபோது அதற்கான வரலாற்றின் தேரை வடம் பிடித்து இழுக்க வேண்டியிருந்தது. இது வெறும் நிகழ்வு அல்ல; உரிமைப் போராட்டத்தின் வெற்றி வரலாறு என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

கொத்தமங்கலத்தின் மண்ணின் மைந்தரான எழுத்தாளர் கண்ணன் இந்தத் தேரோட்ட வரலாற்றை நமக்கு விரிவாக விளக்கினார்.

நம் நாட்டு விடுதலைக்கு முன்னும் பின்னும் ஜமீன்தார் ராஜ்யம் பெருமளவில் இருந்தது. அதுவும் மன்னர் ஆட்சிக்குப் பேர்போன புதுக்கோட்டை பகுதியில் ஜமீன்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த வகையில் சேந்தன்குடி நகர ஜமீன் என்ற ஜமீனின் கட்டுப்பாட்டில் ஆறு கிராமங்கள் இருந்தன. அவற்றில் கொத்தமங்கலமும் ஒன்று. நல்லது கெட்டது எதுவென்றாலும் ஜமீன்தான் வர வேண்டும். அப்படித்தான் கோயில் தேரோட்டமும். ஜமீன் வந்து வடம் தொட்டுக் கொடுத்த பிறகுதான் தேர் இழுக்க வேண்டும். இது போன்ற பல கட்டுப்பாடுகள் கிராம மக்கள் மீது ஜமீன்களால் சுமத்தப்பட்டிருந்தன.

ஜமீன் ஒழிந்தும் ஜம்பம் ஒழியலை...

இந்த நிலையில்தான் 1950களில் நாடெங்கும் ஜமீன்தாரி முறை ஒழிப்பு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் சேந்தன்குடி நகர ஜமீனும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் ஜமீன் முறையை ஒழிப்பதாக அறிவித்தாலும் ஜமீன்தார்களின் ஜம்பம் ஒழியவில்லை. கோயில்கள், நிலங்கள் எங்கும் அவர்களின் ஆதிக்கமே நிலவியது. ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட ஆறு கிராமங்களிலும் இதுதான் நிலைமை. ஆனால் கொத்தமங்கலம் கொஞ்சம் கோப மங்கலம். ஜமீன்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியே வர வீறு கொண்டு எழுந்தது.

ஜமீனுக்கு எதிரான வழக்கு!

வைகாசி மாதம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் வழக்கம்போல் தனக்குத்தான் முதல் மரியாதை தர வேண்டும் என்றும், இல்லையென்றால் திருவிழாவே நடக்காது என்றும் சேந்தன்குடி நகர ஜமீன் இறுமாப்புடன் சொல்கிறார். ஆனால் கொத்தமங்கலம் கிராமத்தினர் இதற்கு உடன்படவில்லை. ‘உன்னையதான் சர்க்காரே தலைமுழுகிடுச்சே... இன்னும் என்ன உனக்கு இங்க வேலை’ என்று ஜமீனை எதிர்க்கின்றனர். அப்போதிலிருந்து ஜமீனுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்துநடக்கின்றன.

இந்நிலையில்தான் கொத்தமங்கலத்திலிருந்து படித்தவர்களான சிதம்பரம், ரெங்கன் சேர்வை, சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னையாப் பிள்ளை போன்றவர்கள் அரசு உத்தரவிட்டும் இன்னும் ஜமீன் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகச் சொல்லி சேந்தன்குளம் நகர ஜமீன் மீது வழக்குத் தொடுக்க முயற்சிக்கிறார்கள். கொத்தமங்கலம் கிராமத்துக்கு சார்பு நீதிமன்றம் என்றால், பட்டுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம், அது மன்னார்குடியில் இருக்கிறது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு ஜமீனுக்கு எதிராக மன்னார்குடி உரிமையியல் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள் கொத்தமங்கலம் கிராமத்தினர்.

இவர்கள் அடிக்கடி வண்டி கட்டிக்கொண்டு வருவதை கவனித்த மூத்த வழக்கறிஞர் ஒருவர், அழைத்து விவரத்தைக் கேட்டிருக்கிறார். “ஜமீன் இல்லாமல் ஒருமுறை தேரை இழுத்து நிலைக்குக் கொண்டுவந்துடுங்க. அப்புறம் கோர்ட்ல ஜெயிக்கிறது சுலபம்” என்கிறார்.

வைகாசித் தேரும் போரும்...!!

அதன்படியே அடுத்து வந்த வைகாசித் திருவிழாவில் ஜமீனை உள்ளுக்குள் விடவே ஊர்க்காரர்கள் மறுத்தனர். ஜமீனுக்கு ஆதரவாக வெளியூர் படை ஒன்று வந்தது. கொத்தமங்கலம் கிராமத்திலுள்ள வீர ஆண்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஊர் எல்லையிலேயே ஜமீன் படையை மறித்தனர். கடுமையான சண்டை, வேல் கம்பு, முள் படல்கள்தான் ஆயுதங்கள். காலை ஒடிப்பது, கையை ஒடிப்பது, இடுப்பை ஒடிப்பது ஆகியவை இந்தச் சண்டைகளில் இயல்பாக நடக்கும்.

அன்று தேர்த் திருவிழா. ஆனால் ஆண்கள் எல்லாம் ஊர் எல்லையில் ஜமீன் படைகளோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜமீன் எக்காரணம் கொண்டும் ஊருக்குள் வந்துவிடக் கூடாது என்று கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

களம் இறங்கிய களப்பாயி...!!

ஊருக்குள் ஆண்கள் யாரும் இல்லை. ஆனால் தேர்த் திருவிழா நடந்தாக வேண்டும். என்ன செய்வது என்று பலரும் விழித்துக்கொண்டிருக்க, கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பெண்மணி களப்பாயி என்பவர் வீடு வீடாகச் சென்று பெண்களைத் திரட்டுகிறார். களப்பாயி சொன்னால் ஊரில் எல்லாரும் கேட்பார்கள். ஏனென்றால் அதற்கு முன்பே ஜமீனின் கொடுமைகளை எதிர்த்து கொத்தமங்கலம் கிராமம் மற்றும் ஆறு கிராம பெண்களுக்கு ரவிக்கை அணியும் உரிமையைப் போராடி வாங்கிக் கொடுத்தவர் களப்பாயி.

அவர் மீண்டும் களத்தில் இறங்கி எல்லாப் பெண்களையும் திரட்டி, “ஆம்பளைங்க ஊரைப் பாதுகாக்கட்டும். நாம தேரைப் பாதுகாப்போம் வாங்க” என்று அழைத்து முழுக்க முழுக்க பெண்கள் எல்லாம் சேர்ந்து தேரோட்டத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். தேரும் வெற்றிகரமாக முடிந்தது, ஊருக்கு வெளியே போரும் வெற்றிகரமாக முடிந்தது. அவ்வளவுதான், அதற்குப் பின் ஜமீன் அவமானத்தால் ஊருக்குள் வர முடியவில்லை.

அன்று முதல் இன்று வரை....

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில்தான் அன்று முதல் இன்று வரை பேச்சியம்மன் கோயில் தேரை மட்டும் பெண்களே இழுக்கிறார்கள். ஜமீன்களை எதிர்த்துப் போராடியதன் வெற்றியாக இந்தத் தேரோட்டம் பார்க்கப்படுகிறது என்று பெருமிதக் கண்களோடு நம்மிடம் இந்த தேரோட்டத்தின் கால ஓட்டத்தை நினைவுகூர்ந்தார் கண்ணன்.

இந்தக் கொத்தமங்கலத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஜமீனை ஒழித்து விரட்டிவிட்ட பின்பு ஊர் பெரியவர், உயர்ந்த சாதியினர் என யாரையும் வடம் தொட்டுக் கொடுக்க அழைப்பதில்லை. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தால் யார் ஊரின் தலைவரோ அவர் வடம் தொட்டுக் கொடுப்பார். அப்படி இல்லையென்றால் விழா கமிட்டியின் தலைவரே வடம் தொட்டுக் கொடுப்பார் என்கிறார் கண்ணன்.

பெண்களால் இழுக்கப்பட்டு நிலைக்கு வந்த தேரின் வடத்தைத் தொட்டுப் பார்த்தோம். ஐம்பதாண்டு கால வரலாற்றின் சுவடுகள் உள்ளங்கைக்கும் உள்ளத்துக்கும் புலப்பட்டன.

இதுபோல் தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூருக்குள்ளும் ஒரு வீரப்பெரு வரலாறு யாரும் வாசிக்காமலேயே வசித்துக்கொண்டிருக்கிறது. ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு அணுவுக்கும் இது போன்ற வரலாற்று வடங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages