ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஜெயராமன் என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், தூத்துக்குடி நகரம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிவிரைவுப்படையினருடன் சென்ற காவல்துறையினர் வீடு, வீடாகச் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மூன்றாவது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதால் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி குடிநீர், பால், சமையல் எரிவாயு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பொது மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கைக்குழந்தைகள் மற்றும் முதியவர் களின் நிலை கடும் துயரம் மிகுந்ததாக உள்ளது. மாநகரின் ஒரு சில இடங்களில் மட்டுமே மருந்தகங்கள் இயங்குகின்றன. இதனால் நோயாளிகளும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாநகரம் தனித்தீவு போல மாற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் நீதிபதிகள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யும் பணி தொடங்கியது. அதேநேரத்தில் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தமிழக அரசு இன்று முறையீடு செய்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 30 ஆம் தேதி வரை உடல்களை பதப்படுத்தி வைக்க ஆணையிட்டனர்.
No comments:
Post a Comment