தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேரின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த தமிழக அரசு அனுமதி கோரியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு நடத்துமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர். மூன்று மருத்துவர்கள் அடங்கிய சிறப்புக்குழுவின் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும், இதில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். குண்டு பாய்ந்து, வெளியேறிய பகுதிகளை புகைப்படம் எடுக்க வேண்டும், உடல்களை அனைத்துக் கோணங்களிலும் ஊடுகதிர் மூலம் முழுமையாக படம்பிடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். எஞ்சிய 6 பேரின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். அதுவரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment