கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இன்று காலை பெங்களூரில் சந்தித்துப் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், சட்ட ரீதியாக தீர்ப்பு வந்தாலும் காவிரிப் பிரச்சனையை மீண்டும் பேசித் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல் கூறியுள்ள கருத்து, காவிரிப் பிரச்சனையில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் போராடிப் பெற்ற உரிமையை தட்டிப் பறிப்பது போன்றது என்று காவிரிப் பாசன விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள இந்த நேரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக இதுபோன்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கர்நாடகாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என கமல்ஹாசன் கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ஆர்வக் கோளாறில் செய்யப்படும் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment