சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்குரைஞர்கள் முறையிட்டனர். அப்போது, குழந்தைகள் நலக்குழு சார்பாக முன்னிலையான வழக்குரைஞர் மெகருனிஷா, பாதிக்கப்பட்ட சிறுமியை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை காவல்துறை பின்பற்றவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டது. காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால் தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாலியல் வன்கொடுமை குற்றவாளி களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்புமாறும் அவர்கள் ஆணையிட்டனர். நீதிமன்றத்திலேயே குற்றவாளிகளை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் வழக்குரைஞர்கள் ஈடுபடக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், இதற்காக வழக்குப்பதிவு செய்ய ஆணையிட முடியாது என மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment