கர்நாடகா அணைகள் நிலவரம் - Agnipuratchi

கர்நாடகா அணைகள் நிலவரம்

Share This

மேட்டூர் அணை  நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து  திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அனைகள் நிரம்பியுள்ளதால், சிறப்பு பூசைகள் செய்ய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக அணைகளை ஆய்வு செய்ய குமாரசாமி வருவதால், அணைகளில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்தவிட்டப்பட நிலையில், தற்போது 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல கபினி அணையிலிருந்து 40 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.  இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதேநேரத்தில், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மேட்டூர் செல்கிறார். 

காலம் கடந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், தமிழக அரசு ஒத்துழைத்தால் குறுவை சாகுபடியை நல்ல முறையில் செய்ய முடியும் என காவிரிப் பாசன விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாளை திறந்து விடப்படும் மேட்டூர் அணை தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வந்து சேர பத்து நாட்கள் ஆகும் என்பதால், அதற்குள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

குறுகிய கால நெல் ரகங்களை வேளாண்துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கூட்டுறவு வங்கிகள் மூலம் விரைந்து விவசாயக் கடன்களை வழங்க வேண்டும் என்றும், விதை, உரம் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் காவிரிப் பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages