செப்டம்பர் 17: ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்திய மாபெரும் தியாகப் போராட்டம் நடைபெற்ற நாள் ஆகும்.
அன்று நடந்த போராட்டத்தால் இன்று ஒவ்வொரு வன்னியர் குடும்பமும் பயன் அடைந்துள்ளது. வன்னியர்கள் மட்டுமல்ல. கூடவே மீனவர், மறவர், குலாலர் உள்ளிட்ட மேலும் 107 சாதிகள் பயனடைந்துள்ளனர்.
ஒருபக்கம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் விளக்கேற்றிய இதே நிகழ்வு, இன்னொரு பக்கம் 'மரம்வெட்டி' என்று இழிவுபடுத்தும் 'இனெவெறி' வார்த்தையாகவும் இருக்கிறது!
வெளியில் நாகரீக அரசியல் பேசுவோர் - உள்ளுக்குள் ஆழ்ந்த இனவெறுப்புடன் இருப்பதை படம் பிடித்து காட்டுவதாக 'மரம்வெட்டி' என்கிற வார்த்தை உள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் தமிழிசை எனப் பலரும் - செப்டம்பர் 17 வீரத்தியாகத்தை 'மரம்வெட்டி' என்று இகழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
"மாபெரும் சமூகநீதிப் போரின் வரலாறு"
தமிழ்நாட்டில் இடப்பங்கீடு 1927 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால், உண்மையான வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்துவந்த 62 ஆண்டுகாலம் எந்த உரிமையும் அளிக்கப்படவில்லை. இந்த இரண்டு தலைமுறைக் கால துரோகத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்.
"1927 இடப்பங்கீடு"
பிராமணர் – பிராமணரல்லாதார் என்கிற சாதிப்பிரிவினையின் கீழ் இடப்பங்கீடு 1927 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால், பிராமணரல்லாத மக்களில் உள்ள உண்மையான வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு அந்த இடப்பங்கீட்டால் பயன் இல்லாத நிலை இருந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர் சமூகத்தினர் ஆகும்.
"1936 இடப்பங்கீடு கோரிக்கை"
வன்னியர்களுக்கு தனி இடப்பங்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை 1936 ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்தில் எஸ்.ஏ. நஞ்சப்பா முன்வைத்தார். அக்காலத்தின் வன்னியர்கள் மக்கள் தொகையில் 30 லட்சம் பேருக்கு கூடுதலாக இருந்தாலும், ஒரு சில அரசுப்பதவிகளில் கூட இடம்பிடிக்காததை சுட்டிக்காட்டினார். இத்தகைய அரசுப் பதவிகளுக்கு தகுதியான படிப்புடன் வன்னியர் சமூகத்தில் 200 பேர் இருந்தாலும், அவர்களை தேர்வு செய்யாமல் அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.
"அதிகாரத்தில் பங்கு இல்லை"
1937 ஆம் ஆண்டில் இரட்டை ஆட்சிமுறை ஒழிந்து மாகாண சுயாட்சி முறை ஏற்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் சென்னை சட்டசபைக்கும் மேல்சபைக்கும் 261 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவற்றில் வன்னியர்களுக்கு கிடைத்தவை வெறும் 7 இடங்கள் மட்டுமே. அப்போது பதவியேற்ற ராஜாஜி அமைச்சரவையில் ஒருவர் கூட வன்னியர் இல்லை.
1938 ஆம் ஆண்டில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம், முதலைமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கையில், அரசின் 1713 கெசட் அலுவலர்களில் வெறும் 6 வன்னியர்கள் மட்டுமே இருப்பதை சுட்டிக்காட்டியது.
வன்னியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை வன்னியர் சங்கம் சுட்டிக்காட்டி, தொடர்ந்து போராடியது. பரம்பரை பரம்பரையாக அரசுப்பதவிகளில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படும் அநீதிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று காங்கிரசு அரசிடம் வன்னியர்கள் கோரினர். ஆனால், வன்னியர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் இராஜாஜி பேசினார்.
"1946 அரசியல் அமைப்புச் சட்டத்தில் பங்கு இல்லை"
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை வகுக்கும் குழு 1946-ல் உருவாக்கப்பட்டு, பத்து லட்சம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்று அறிவித்தார்கள். அப்போது, வன்னியர்களுக்கு 6 இடங்கள் வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியிடம் கோரினர். ஆனால், அவர்கள் ஒரு இடம் கூட கொடுக்கவில்லை. வன்னியர்கள் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் இருக்கும் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (OBC) இருந்தும் ஒரே ஒரு உறுப்பினர் கூட அரசியல் சாசனம் உருவாக்கும் 'அரசியல் நிர்ணய சபையில்' இடம்பெறவில்லை.
"1947 அரசியல் அதிகாரத்தில் பங்கு இல்லை"
1947-ல் இந்தியா விடுதலை அடைந்தவுடன் வன்னியர்கள் இரண்டு கோரிக்கைகளை காங்கிரசு கட்சியிடம் வைத்தார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுப்பணிகளில் இடம் வேண்டும். காங்கிரசுக் கட்சி மூலம் நகர சபை, மாவட்ட சபை, சட்டமன்றங்களுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப வன்னியர்களை நிறுத்த வேண்டும் என்று கோரினர். இந்தக் கோரிக்கையையும் காங்கிரசு கட்சி நிராகரித்தது.
"வன்னியர்களின் வெற்றியை காங்கிரசுக்கு பலிகொடுத்த வரலாறு"
வன்னியர்களுக்கு அரசியலில் இடமளிக்க காங்கிரசுக் கட்சி மறுத்தது. காங்கிரசுக்கு ஆதரவான தலைவர்கள் பலமுறை தூதுசென்ற போதும், கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் 1949 ஆம் ஆண்டில் நடந்த மாவட்ட சபை தேர்தலை வன்னியர்கள் தனித்து சந்தித்தனர். இந்திய விடுதலையால் காங்கிரசுக் கட்சியின் புகழ் ஓங்கிருந்த அக்காலத்திலேயே, காங்கிரசுக் கட்சியை எதிர்த்து நின்று தென்னார்க்காடு மாவட்டத்தில் 52 மாவட்ட சபை இடங்களில் 22 இடங்களை வன்னியர்கள் தனித்தே நின்று கைப்பற்றினர்.
1950 ஆம் ஆண்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தபின்னர், சாதிச் சங்கங்கள் தேர்தலில் நிற்க வாய்ப்பு இல்லாததால், 1952 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி எனும் இரண்டு கட்சிகள் சார்பில் வன்னியர்கள் தனியே தேர்தலை சந்தித்தனர். சென்னை மாகான சட்டசபை இடங்களில் காமன்வீல் கட்சி 13 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 34 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றிபெற்றது. ஆகமொத்தம் 47 இடங்களில் போட்டியிட்ட வன்னியர் கட்சிகள் 25 இடங்களில் வெற்றி பெற்றன (அப்போது தமிழ்நாட்டில் 190 சட்டசபை இடங்கள் மட்டுமே இருந்தன).
காங்கிரசுக் கட்சி வன்னியர்களை புறக்கணிப்பதை கண்டித்து உருவான இந்த அரசியல் இயக்கங்கள் பின்னர் (வன்னியர் கட்சிகளை கலைத்துவிட்டு) காங்கிரசுடனே இணைந்தன. தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை இல்லாத காங்கிரசுக் கட்சி 1952 இல் வன்னியர்களின் காமன்வீல் கட்சியை இணைத்துக்கொண்டு, இராஜகோபாலாச்சாரியர் முதலமைச்சர் ஆனார்.
காமராஜர் ஆட்சி என்று இப்போது போற்றப்படும் ஆட்சி, வன்னியர் கட்சிகளாலேயே சாத்தியமானது. 1954 ஆம் ஆண்டில் ஆந்திர பிரிவினையால் தமிழ்நாடு தனி மாநிலம் ஆனது. வன்னியர்களின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியையும் சேர்த்துக்கொண்டு, காமராஜர் முதலமைச்சர் ஆனார். அப்போது, வன்னியர் கட்சிகள் தங்களது ஆதரவை மாற்றிக்கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும்.
"வன்னியர்கள் திமுகவை வளர்த்த வரலாறு"
காங்கிரசு ஆட்சி அமைப்பதற்காக, காமன்வீல் கட்சியும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் கலைக்கப்பட்டது. தொண்டர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், காங்கிரசை வெறுத்த வன்னியர் சமூகம் மாற்று வழியைத் தேடியது.
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் தலைவருமான ஆ. கோவிந்தசாமி 'உழவர் கட்சி' எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவரது தலைமையில் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர். திமுக உதய சூரியன் சின்னத்தை எடுத்துக்கொண்டது. அக்கட்சி முதன் முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாவட்ட தொகுதிகள் ஆகும். 1962 தேர்தலில் திமுக 51 இடங்களில் வெற்றி பெற்றது. அவற்றில் 43 இடங்கள் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாவட்ட தொகுதிகள் ஆகும்.
"வன்னியர்களுக்கு திமுக - அதிமுக துரோகம்"
காமராஜர் ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுஆய்வு செய்யும் பிரச்சினை பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டது. கலைஞர் கருணாநிதி சட்டநாதன் குழு எனும் முதலாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவை 1969 இல் அமைத்தார்; எம்ஜிஆர் அம்பாசங்கர் குழு எனும் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவை 1982 இல் அமைத்தார்;
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட இரண்டு பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுக்களும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிச் சமுதாயம் வன்னியர்களே என்றும், இடஒதுக்கீட்டின் பலன்களை பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்களே முதன்மையானவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டின. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இரண்டு குழுக்களுமே பரிந்துரை செய்தன.
கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய இரண்டு முதலமைச்சர்களுமே வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு என்கிற நியாயமான பரிந்துரைகளை குப்பைக்கு அனுப்பினர். முதலமைச்சர்கள் கலைஞரும் எம்ஜிஆரும் தாங்கள் அமைத்த நலக்குழுக்களின் அறிக்கையை தாமே மதிக்காமல், அவற்றின் பரிந்துரைகளை ஒதுக்கித் தள்ளியதால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட மிகப்பெரிய சமுதாயம் வன்னியர்களே!
மருத்துவர் அய்யா: மாபெரும் போராட்ட வரலாறு
மேற்கண்ட நீண்ட வரலாற்று பின்னணியில் - ஒட்டுமொத்தமாக அனைத்து சமூகங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அந்த அடிப்படையில் வன்னியர்களுக்கு விகிதாச்சார பங்கீடு வேண்டும் என்கிற நோக்கத்தில் வன்னியர் சங்கம் 1980 ஆம் ஆண்டில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் தொடங்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டில் வரிசையாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 15.3.1986 ஆம் நாள் சென்னையில் 'பட்டை நாமப் போராட்டம்'; 6.5.1986 இல் ஒரு நாள் சாலைமறியல் போராட்டம்; 28.6.1986 இல், மதுராந்தகத்தில் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்; 19.12.1986 ஆம் நாள் ஒரு நாள் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
வன்னியர் சங்கத்தின் எந்த போராட்டத்தையும் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாத நிலையில், 1987 செப்டம்பர் மாதத்தில், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் ஒருவார காலத்துக்கு தொடர்சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிவித்தார்கள்.
"திமுகவின் சதி"
தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய போராட்டம் இதுவாகும். செப்டம்பர் 17 முதல் வன்னியர் சங்கம் தொடர் சாலைமறியல் நடத்துவதாக அறிவித்த பின்பு, அதற்கு முதல் நாள் செப்டம்பர் 16-ல் சென்னையில் திமுகவின் அண்ணா அறிவாலயம் கட்டடத்தை திறக்கும் முப்பெரும் விழா மாநாட்டை நடத்துவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
திமுகவின் மாநாடு முடித்து செல்கிறவர்கள் தமிழ் நாட்டின் வடமாவட்டங்களை கடக்கும் நேரமும், வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் தொடங்கிய செப்டம்பர் 17 அதிகாலை நேரமும் ஒன்றாக இருந்ததால், சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மீது திமுக கட்சியினர் பெரும் தாக்குதலை நடத்தினார்கள்.
"அதிமுகவின் அடக்குமுறை"
எம்ஜிஆரின் காவல்துறை சாலைமறியல் செய்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. முதல் நாள் சாலைமறியல் போராட்டம் தொடங்கும் போதே 11 வன்னியர்களை சுட்டுக்கொன்றது தமிழக காவல்துறை. காவல்துறை தாக்கியதில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் சங்கத்தின் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பல கிராமங்களுக்குள் காவல்துறை புகுந்து சூறையாடியது.
காவல்துறையின் வன்முறைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், ஒருவார கால சாலைமறியல் போராட்டத்தை வெற்றியடைய வைக்கவும் - ஆங்காங்கே சாலைகளில் தடைகளை வன்னியர்கள் ஏற்படுத்தினர். இதனால் தமிழ்நாட்டின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. சென்னைக்கும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. ஒருவார காலம் தமிழ்நாடு ஸ்தம்பித்து போனது. அதற்கு பின்னரும் இயல்புநிலை திரும்பாமல் ஒரு மாத காலத்துக்கு போக்குவரத்து தடைப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் 21 வன்னியர்கள் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
திமுக குண்டர்கள், காவல்துறை வன்முறையாளர்களின் கொலைவெறியாட்டங்கள் தமிழ் மக்களின் நினைவலைகளில் இருந்து மறைந்து விட்டன. ஆனால், தமது உயிரைக் காப்பாற்ற வேண்டும், உடமைகளைப் பாதுகாக்க வேண்டும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலநூறு மரங்களை வெட்டி, சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதற்காக - வன்னியர்கள் இன்றும் 'மரம் வெட்டிகள்' என்று ஆதிக்கக் கூட்டத்தினரால் தூற்றப்படுகின்றனர்.
16.12.1988 இல் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது வன்னியர் சங்கம். பின்னர் 13.1.1989 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது.
இத்தனை போராட்டங்களுக்கும் உயிரழப்புகளுக்கும் பின்னர் 28.3.1989 இல் 'பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிகிதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியும்' கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆணையிட்டது (அரசாணை எண்: 242, நாள் 28.3.1989).
அன்று நடந்த போராட்டத்தால் இன்று ஒவ்வொரு வன்னியர் குடும்பமும் பயன் அடைந்துள்ளது. வன்னியர்கள் மட்டுமல்ல. கூடவே மீனவர், மறவர், குலாலர் உள்ளிட்ட மேலும் 107 சாதிகள் பயனடைந்துள்ளனர்.
தியாகிகள்
1. கோலியனூர் கோவிந்தன், 2.வினாயகம், 3.பார்ப்பனப்பட்டிரெங்கநாதக் கவுண்டர், 4.சித்தணி ஏழுமலை, 5.முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, 6.கயத்தூர் முனியன், 7. முத்து, 8. தாண்டவராயன்,
9. தொடர்ந்தனூர் வேலு, 10. ஓரத்தூர் ஜெகநாதன், 11. சிறுதொண்டமாதேவி தேசிங்கு, 12. கொழப்பலூர் முனிசாமி கவுண்டர், 13. பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், 14. அமரத்தனூர் மயில்சாமி, 15. வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், 16.சிவதாபுரம் குப்புசாமி, 17. அண்ணாமலை, 18. மொசரவாக்கம் கோவிந்தராஜ், 19. குருவிமலை முனுசாமி, 20. கடமலைப்புதூர் மணி, 21. கண்டரக்கோட்டை ஜெயவேலு.
No comments:
Post a Comment