விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இள வயது முதலே தியானம் பழகிய விவேகானந்தர் சிறந்த பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்தது. 1886ம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும், ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் 4 ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது 3 நாட்கள் தியானம் செய்தார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தர், 1893ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொண்டார். அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. பிறகு மேலும் சில ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியர்களை விழிப்புற செய்தது. 1902ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி, தனது 39வது வயதில் விவேகானந்தர் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்றும் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாள் தினத்தை தேசிய இளைஞர் தினம்' ஆக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment