2019-ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரதரத்னா வழங்கப்படுகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான பங்காரு அடிகளார் உள்ளிட்ட 112 பேருக்கு பத்ம விருதுகளும் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப் பட்ட பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான விருது வேறு யாருக்கும் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்மூவருமே பாரதரத்னா விருதுக்கு முழுமையான தகுதி கொண்டவர்கள் ஆவர். 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான பிரணாப் முகர்ஜி, இந்திரா காந்தியில் தொடங்கி ராஜிவ்காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், நரேந்திர மோடி வரை 10 பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். இந்தியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட காலங்களில் அவற்றை சமாளித்து நாட்டை வழிநடத்திச் செல்ல உதவியவர். காங்கிரசில் சாதாரண தொண்டராகத் தொடங்கி, குடியரசுத் தலைவர் வரை உயர்ந்த அவருக்கு இது சரியான அங்கீகாரமாகும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், உத்தரப்பிரதேசத்தில் சரண்சிங் தலைமையில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைக்க திட்டம் வகுத்தவர், அரசியலில் இருந்து விலகிய பிறகு ஊரக வளர்ச்சிக்காக பாடுபட்டவர் என பல முகங்களைக் கொண்ட நானாஜி தேஷ்முக், அஸ்ஸாமிய மொழிப் பாடகரும், இசையமைப்பாளருமான பேபென் ஹசாரிகா ஆகியோரும் பாரதரத்னா விருதுக்கு முழுத்தகுதி பெற்றவர்கள் ஆவர். மறைவுக்கு பிறகு இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது பெறும் அவர்களுக்கும் பா.ம.க. சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆதிபராசக்தி சித்தர்பீட குருவான பங்காரு அடிகளார் அவர்கள் பல பத்தாண்டுகளாக ஆன்மிகப் பணியுடன் கல்விப்பணி, மரம் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பத்மஸ்ரீ விருதை விட மிக உயர்ந்த விருதுகள் அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு பிறகு பங்காரு அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது அவருக்கு மிகவும் தாமதமாக வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் ஆகும்.
மதுரை மாவட்டம் பில்லுச்சேரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியவரும், 1999-ஆம் ஆண்டு ஸ்திரிசக்தி புரஸ்கார் விருது பெற்றதுடன், அந்த விருதை வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து வழங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மதுரை சின்னப்பிள்ளைக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் இதை விட மிக உயரிய விருது பத்தாண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பரதநாட்டியக் கலைஞரான திருநங்கை நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், மருத்துவர்கள் பி.வி.ரமணி, ராமசாமி வெங்கடசாமி ஆகியோரும் தமிழகத்திலிருந்து பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் பிறந்து தமிழகத்தில் வாழும் திரைப்பட நடனக் கலைஞர் பிரபுதேவா, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, பிற மாநிலங்களில் வாழும் பாடகர் சங்கர் மகாதேவன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோரும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது வெறும் 7 பேருக்கு மட்டும் தான் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் தமிழகத்தில் ஒருவருக்குக் கூட வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களிலாவது தமிழகத்திற்கு அதிக பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment