உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி! -பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் - Agnipuratchi

உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி! -பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்

Share This

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் நிலையிலான பணிகளுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுகளுக்கு தகுதி பெறுவதற்கான தகுதி காண் மதிப்பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட, உயர்வகுப்பு ஏழைகளுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான இச்செயல் கடுமையான கண்டிக்கத்தக்கது; திரும்பப்பெறப்பட வேண்டியதாகும்.

நாடு முழுவதும் மொத்தம் 8500-க்கும் கூடுதலான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மண்டலத்தில் பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு 61.25 தகுதி காண் மதிப்பெண்ணாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான தகுதிகாண் மதிப்பெண் 53.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்பு ஏழைகளுக்கான தகுதி காண் மதிப்பெண் மட்டும் 28.50 என்ற அளவில் உள்ளது.

பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதற்காக தகுதி காண் மதிப்பெண்ணாக 35%  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் 40 விழுக்காடும், பட்டமேற்படிப்புக்கு 50 விழுக்காடும் தகுதி காண் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் 28.5% மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தால், அவர்களுடைய தகுதி எத்தகையதாக இருக்கும்? அவர்களால் வங்கிப் பணிகளை எவ்வாறு திறம்பட மேற்கொள்ள முடியும்?

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு திறமையிருந்தும் பிற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது ஆகும். ஆனால், இப்போது தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரைவிட மிகக்குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள போதிலும், அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். சுருக்கமாக கூற வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்வகுப்பு ஏழைகளுக்கு தரப்பட்டுள்ளது. இதை விட மோசமான, கொடூரமான, இயற்கைக்கு மாறான சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்சாதி ஏழைகளின் மக்கள் தொகை அளவை விட இட ஒதுக்கீட்டு அளவு அதிகமாக உள்ளது. அதனால், அந்தப் பிரிவில் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் கூட தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது. உயர்சாதியினருக்கு  இட ஒதுக்கீடு கூடாது என்பதற்கு இது மட்டுமே காரணம் அல்ல.... ஏராளமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தகுதியுடைய இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். எனவே, எந்த புள்ளி விவரமும் இல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages