தமிழகத்தின் சமூகநீதி வரலாறு மிகவும் நீண்டது. தமிழக சமூகநீதி வரலாற்றை 3 பிரிவுகளாக பிரிக்கலாம். அவற்றில் முதல் பிரிவின் நாயகன் நீதிகட்சியும், அக்கட்சியைச் சேர்ந்த கும்பகோணம் முத்தையா முதலியாரும் ஆவார். இரண்டாவது பிரிவின் கதாநாயகன் தந்தை பெரியார் ஆவார். மூன்றாவது அத்தியாயத்தின் கதாநாயகன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ஆவார்.
சமூகநீதி வரலாறு: மூன்று அத்தியாயங்கள்
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சியைச் சேர்ந்த அப்போதைய முதல்வர் பணகல் அரசர் கம்யூனல் அரசாணையை பிறப்பித்தார். அவரது ஆட்சியில் இத்தகைய அரசாணைகள் மூன்று முறை பிறப்பிக்கப்பட்ட போதும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரவில்லை. 1928-ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆதரவுடன் ஆட்சி நடத்திய, எந்தக் கட்சியையும் சேராத முதலமைச்சர் சுப்பராயன் தான் தமது அமைச்சர் முத்தையா முதலியார் மூலமாக 100% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, கம்யூனல் அரசாணை மூலமான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செண்பகம் துரைராஜன் தொடர்ந்த வழக்கில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய தொடர்போராட்டங்களின் பயனாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. அச்சட்டத்தின் 340&ஆவது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது. அதன்படி 1951-ஆம் ஆண்டு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது பின்னாளில் கலைஞரால் 31 விழுக்காடாகவும், எம்.ஜி.ஆரால் 50 விழுக்காடாகவும் 30 ஆண்டு இடைவெளியில் உயர்த்தப்பட்டது.
வன்னியர் சங்கம் தொடக்கம்
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், அதை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முன்னேறிய நிலையில் உள்ள சிலர் மட்டும்தான் அனுபவித்து வந்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எந்த வித வாய்ப்பும் கிடைக்கவில்லை. அவர்கள் சமூக அடுக்கில் மிகமிக பின்தங்கிய நிலையில்தான் இருந்தனர். அத்தகைய சூழலில்தான் வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக போராட்டங்களை முன்னெடுக்க மருத்துவர் அய்யா தீர்மானித்தார். இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 28 வன்னிய அமைப்பிகளின் தலைவர்களை மருத்துவர் அய்யா 20.07.1980 அன்று திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அக்கூட்டத்தில் இடஒதுக்கீட்டுக்காகப் போராட வன்னியர் சங்கம் என்ற புதிய அமைப்பை தொடங்க தீர்மானிக்கப்பட்டது. அதன் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்ட மருத்துவர் அய்யா, சங்கத்தின் நிறுவனராக மட்டுமே தாம் நீடிக்கப் போவதாகவும், எந்தப் பதவியையும் அனுபவிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். அதைத்தொடர்ந்து வன்னியர் சங்கத் தலைவராக ஆர். கோபால் நியமிக்கப்பட்டார். அதன்பின், சில ஆண்டுகள் கழித்து மருத்துவர் அய்யாதான் வன்னியர் சங்கத தலைவராக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அதையும் நிராகரித்துவிட்ட அய்யாவும், வன்னியர் சங்கத்தின் பிற நிர்வாகிகளும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சா.சுப்பிமணியன் அவர்களை வன்னியர் சங்கத்தின் தலைவவராக நியமித்தனர்.
ஒருவார தொடர் மழையில் போராட்டம்
வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட பிறகு மருத்துவர் அய்யா தலைமையில் 1980 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தில் நடைபெற்ற முதல் மாநாட்டில், “அனைத்து சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றவகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, மருத்துவர் அய்யா தலைமையில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 25.08.1985 அன்று சென்¬னியல் ஆகஸ்டு பேரணி நடத்தப்பட்டது. அதன் பிறகும், இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 06.05.1986 அன்று ஒருநாள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என வன்னியர் சங்கப் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே, அப்போராட்டத்தை மருத்துவர் அய்யா வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அடுத்தக்கட்டமாக 19.12.1986 அன்று ஒருநாள் தொடர்வண்டி மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் பிறகும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலைதான் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒருவார தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என குற்றாலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கப் பொதுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
மாறுவேடத்தில் தப்பிய மருத்துவர் அய்யா
அதன்படி, 17.09.1987 அன்று அதிகாலை சரியாக 12, 01 மணிக்கு தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தை முறியடிப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வன்னியர் சங்க நிறுவனர் மருத்துவர் அய்யாவை கைது செய்துவிட்டால் போராட்டத்தை எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம் என்று நி¬த்த காவல்துறை, போராட்டம் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் திண்டிவனத்தில் தேடுதல் வேட்டை நடத்தியது. இதை அறிந்த மருத்துவர் அய்யா, புதுச்சேரிக்கு தப்பிச்சென்று அங்குள்ள விடுதி அறையில் தங்கியிருந்தார்.
ஒரு கட்டத்தில் அதையும் கண்டுபிடித்த காவல்துறையினர், மருத்துவர் அய்யா புதுவையில் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்கள், ஓர் இஸ்லாமியரைப் போன்று வேடமிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் என்ற இடத்தில், ஏரிக்கையில் பதுங்கியிருந்த மருத்துவர் அய்யா, சாலை மறியல் போராட்டம் தொடங்கும் நாளன்று திண்டிவனம் வந்து மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார். இதற்காக மருத்துவர் அய்யாவும், அவருடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மருத்துவர் அய்யா கைது செய்யப்பட்ட பிறகு, போராட்டத்தைக் கட்டுப்படுத்த மிகப் பெரிய அளவில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
போராட்டத்தில் முதல் பலி
தென்னாற்காடு மாவட்டம் பார்ப்பனப்பட்டியை அதிகாலை 3.00 மணிக்கு முற்றுகையிட்ட காவல்துறையினர், அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார்கள். அதிகாலை 3.00 மணிக்கு அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் எந்த அளவுக்கு இருள் இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும். அந்த இருட்டில் அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது, தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, முழங்காலுக்கு கீழே சுட்டு எச்சரிக்கை செய்யாமல் காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டனர் காவல்துறையினர். இதில் குண்டடிபட்ட வீரப்பன் என்ற 25 வயது இளைஞர் தட்டுத்தடுமாறி மாரியம்மன் கோவில் வாசலில் மயங்கி விழுந்தார்.
வீரப்பனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தந்தை ரெங்கநாதனை காவல்துறையினர் சரமாரியாக சுட்டுக் கொன்று அவரது உடலை கால்களைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த சிறுவனை துப்பாக்கியின் அடிக்கட்டையால் தாக்கி காயப்படுத்தினார்கள் காவல்துறையினர்.
காவல்துறையினரின் மிருகத்தனம்
அதேநாளில் கோலியனூர் கூட்டுச் சாலையில் காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்கார வேலு ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஏழுமலை 25 வயது மட்டுமே நிறைந்த இளைஞர். அவர் மறைந்ததால் அவரது மனைவி அஞ்சலாட்சியும், ஒரு வயதுக் குழந்தையும் ஆதரவற்றவர்களாகி விட்டனர். முண்டியம்பாக்கம் சிங்காரவேலு துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருந்த நிலையில் காவல்துறையினர் நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், 25 மணி நேரமாக அவரை மருத்துவமனைக்குக் கூட எடுத்துச் செல்லாமலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தராமலும் காவல்துறையினர் கொடுமைப்படுத்திக் கொன்றனர்.
கயத்தூரைச் சேர்ந்த முனியன், முத்து, தாண்டவராயன் ஆகியோரும் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார். இவர்களில் முனியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தாகத்தை தணிக்க தண்ணீர் தரும்படி கேட்டான். ஆனால், தண்ணீர் தர மறுத்த காவலர்கள் முனியனின் வாயில் சிறுநீரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். முனியன் கொல்லப்பட்ட போது அவருக்கு திருமணமாகி 10 மாதங்கள் கூட ஆகவில்லை. அப்போது அவரது மனைவி ஜெயா 7 மாத கர்ப்பினிணியாக இருந்தார்.
கோலியனூர் கோவிந்தனின் மரணமும் இத்தகையது தான். சதிகாரர்கள் சுட்டும் சாகாமலிருந்த கோலியனூர் கோவிந்தனைக் கொலைவெறி சண்டாளர்கள் நாயை அடித்துத் தூக்கிப் போடுவதைப் போல வேனில் தூக்கிப் போட்டு பூட்ஸ் கால்களாலேயே எட்டி எட்டி உதைத்தும், துப்பாக்கி அடிக்கட்டையால் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள்.
ஓரத்தூர் ஜெகநாதனும் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டவர் தான். துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெகநாதன் குடிக்கத் தண்ணீர் கொடுக்கும்படி கெஞ்சினான். ஆனால், இரக்கமற்ற காவலர்கள் தண்ணீர் தர மறுத்து விட்டனர். அதன்பின்னர் குண்டுபாய்ந்த இடத்திலிருந்து வழிந்த இரத்தத்தை நாவால் நக்கி உயிர் பிழைக்க ஜெகநாதன் முயன்றார். ஆனால், அதையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்தனர்.
புறநானூற்று வீரன் தேசிங்கு
கொள்ளுக்காரன்குட்டை என்ற இடத்தில் சிறுதொண்டமாதேவி தேசிங்கு என்ற 20 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். புறநானூற்று வீரனுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் தேசிங்குவைத் தான் சொல்ல வேண்டும். கொள்ளுக்காரன் குட்டையில் 30, 40 பேருடன் தேசிங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதைக் கண்டு அஞ்சாத தேசிங்கு, தனது சட்டைக் கழற்றி பரந்த முதுகைக் காட்டி ‘‘ சுடு.... சுடு’’ என்று முழங்கினான். ஆனால், இரக்கமற்ற, காட்டுமிராண்டி காவலர்கள் தேசிங்குவின் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
சிறையில் நடந்த கொலைகள்
போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொழப்பலூர் முனிசாமி கவுண்டர் என்பவர் சிறைக்காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். போராட்டம் தொடங்கிய இரண்டாவது நாளில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் பேரங்கியூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த காவல்துறையினர் அண்ணாமலைக் கவுண்டர் என்பவரை அடித்துக் கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் அமரத்தனூரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு, தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவர் இறந்ததற்கான காரணம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி எரித்து விட்டனர்.
மதுராந்தகம் வட்டம் வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், சேலம் மாவட்டம் சிவதாபுரம் குப்புசாமி, காஞ்சி மாவட்டம் மொசரவாக்கம் கோவிந்தராஜ் ஆகியோர் சிறைக்கொடுமையால் படுகொலை செய்யப் பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரையும் காவல்துறையினர் கொடுமைப்படுத்தியே கொலை செய்தனர்.
பெண்கள் மீதும் ஒடுக்குமுறை
அச்சரப்பாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் வன்னியர் அல்லர். அவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்தனர். அவர் தாம் வன்னியர் இல்லை என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் அவரை கோவை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவர்கள் தவிர காவல்துறையினரின் தாக்குதலில் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகினர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். வன்னிய மக்கள் வழிபடும் கோவில்கள் சூறையாடப்பட்டன. இந்த அடக்குமுறைக்கு துணையாக இராணுவமும் வரவழைக்கப்பட்டது.
அப்படியும் கூட வன்னியர்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தை அடக்க முடியவில்லை. போராட்டம் நடைபெற்ற 7 நாட்களும் தமிழகத்தில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை. இந்தியாவில் வேறு எங்குமே இப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாறு. சமூக நீதி கோரி போராட்டம் நடத்தியதற்காக மருத்துவர் அய்யா உட்பட 20,461 பேர் கைது செய்யப்பட்டோம். மருத்துவர் அய்யா அவர்கள் 27 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மற்றவர்களும் பல நாட்கள் சிறையில் வாடினார்கள். ஒருவார கால போராட்டம் முடிவடைந்த பின்பு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் மாதக்கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆருடன் பேச்சு
ஒருவார தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்ட போது, தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் இல்லை. மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து தாயகம் திரும்பிய அவர், 25.11.1997 அன்று அனைத்து சமுதாய தலைவர்களை அனைத்து இடஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார். அப்போது அவரைச் சந்தித்த மருத்துவர் அய்யா, இடஒதுக்கீடு போராட்டம் குறித்தும், தங்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தியதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். அதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். பேச்சுவார்த்தை முடிந்தபின் தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து எம்ஜிஆர், அவரது இல்லத்திற்கு புறப்பட்டபோது, அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வன்னியர் சங்கம் வாழ்க, மருத்துவர் அய்யா வாழ்க என்று முழக்கமிட்டனர். எம்ஜிஆரின் வரலாற்றில் அவருக்கு முன் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவரை வாழ்த்தி முழக்கமிடாமல் மற்றவரை வாழ்த்தி முழக்கமிட்டது அதுவே முதலும், கடைசியுமாக இருக்கும். ஆனால், அடுத்த சில வாரங்களில் உடல் நலக் குறைவால் எம்ஜிஆர் காலமானதால், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
எம்ஜிஆரின் மறைவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிமுக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது தமிழக ஆளுநராக இருந்த பி.சி.அலெக்சாண்டர், பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரை மருத்துவர் அய்யா தலைமையிலான வன்னியர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார். எனினும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் இல்லை.
குடியரசுத் தலைவர் மறுப்பு
11.05.1988 அன்று அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை சென்னை ஆளுநர் மாளிகையில் மருத்துவர் அய்யா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் சந்தித்துப் பேசினார்கள். ஆனால், அவர் வெளிப்படையாகவே இடஒதுக்கீடு வழங்க மறுத்துவிட்டார். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையறிந்த பிரதமர் ராஜீவ் காந்தி, பேச்சு நடத்த தில்லிக்கு வரும்படி அழைத்தார். அதன்படி, தில்லி சென்ற மருத்துவர் அய்யா தலைமையிலான குழுவினருடன் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் பேச்சு நடத்தி தனி இடஒதுக்கீடு வழங்க ஒப்புக் கொண்டார். ஆனால், அவரை தமிழகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து, இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார்கள். அதனால், இடஒதுக்கீடு பெறும் முயற்சி, அப்போதும் தோல்வியடைந்தது.
அதன் பின்னர், பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில், உள்துறை அமைச்சர் பூட்டாசிங் மருத்துவர் அய்யா உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, மருத்துவர் அய்யாவுக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கோடிக்கணக்கில் பணமும் தருவதாக ஆசைவார்த்தை காட்டப்பட்டது. ஆனால், அதை நிராகரித்துவிட்ட மருத்துவர் அய்யா, மத்தியிலும், மாநிலத்திலும் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் ஊறுதியாக இருந்தார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு
ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்குள் தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாமல் போனது. மருத்துவர் அய்யா உள்ளிட்ட தலைவர்கள், சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பதில் உறுதியாக இருந்துவிட்டனர். வன்னியர்கள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், அந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது.
இடஒதுக்கீட்டுக்காக மருத்துவர் அய்யா தலைமையில் வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டங்களின் வலிமையை உணர்ந்திருந்த முதலமைச்சர் கலைஞர், மருத்துவர் அய்யாவை அழைத்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து பேச்சு நடத்தினார். வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் மருத்துவர் அய்யா உறுதியாக இருந்தார். ஆனால், முதலமைச்சர் கலைஞரோ, அவரது சமூகமான இசை வேளாளர்கள் உள்ளிட்ட மேலும் 107 சமுதாயங்களை வன்னியர்களுடன் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பப்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி, அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இடஒதுக்கீட்டிலிருந்து, 20 விழுக்காட்டை தனியாக பிரித்து வழங்கினார். இதன் மூலம், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, 108 சமூகங்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மருத்துவர் அய்யா அவர்கள் பெற்றுத் தந்தார். இதன் மூலம், தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை மருத்துவர் அய்யா பெற்றார்.
No comments:
Post a Comment