சமூக நீதி-சில வினாக்களும், விளக்கங்களும்! - மருத்துவர் இராமதாசு அய்யா.
13. நான் நடத்திய உரிமைப்போர்,
சாத்தியமான சமூக நீதி!
2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சிக்கு வழிகாட்டுவதற்கான குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை சேர்க்கப்பட்டது.
ஆனால், மன்மோகன்சிங் அரசு அமைந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 23.05.2006 அன்று காலை 27% இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் கூட்டுக் கூட்டம் தில்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% வழங்க முடியாது என்று கூறி விட்டனர்.
மிகவும் முக்கியமான அந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், பல்வேறு காரணங்களைக் காட்டி அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் மறுத்ததும், அதை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங்கும் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்ததும் எனக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர்களும் இந்த அநீதியை கண்டிக்க முன்வராமல் அமைதியாக இருந்தனர். அதனால் ஆத்திரமடைந்த நான், 27% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று ஆவேசமாக கூறினேன்.
அதைக்கேட்ட சோனியா காந்தி அவர்கள் என்னை சமாதானப்படுத்தினார். இந்தக் கூட்டத்தை இப்போது முடித்துக் கொள்ளலாம், மாலையில் மீண்டும் கூடி இதுகுறித்து விவாதிக்கலாம் என்று கூறினார். அதை ஏற்றுக் கொண்ட நான், அங்கிருந்த தயாநிதி மாறன் மூலம் கலைஞரை செல்பேசியில் தொடர்பு கொண்டு எனது கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். அவர் என்னை சமாதானப்படுத்தியதுடன், எனது கோரிக்கைக்கு முழு ஆதரவு உண்டு என்று கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட லாலு உள்ளிட்ட தலைவர்கள் எனது நிலைப்பாட்டை ஆதரித்ததுடன், நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் என்று உறுதியளித்தார். தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பேசி இது தொடர்பாக அழுத்தம் தரும் படி வலியுறுத்தினேன். அப்போதைய மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரதன் உள்ளிட்டோரையும் சந்தித்து இதுகுறித்து பேசினேன். அவர்களின் ஆதரவையும் திரட்டினேன்.
பிற்பகலில் பிரதமர் மன்மோகன்சிங் என்னை சந்தித்து பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நான் விரைந்து சென்று அவரை சந்தித்தேன். ஆனால், அவரோ காலையில் நடந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி என்ன கூறினாரோ, அதையே கூறி என்னை சமரசப் படுத்த முயன்றார். ஆனால், அதை ஏற்க நான் மறுத்து விட்டேன். 27% இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என்னை சமாதானப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த பிரதமர் மன்மோகன்சிங் சமாதான முயற்சியை கைவிட்டார்.
அதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் ஆகியோரிடம் உரிமையுடன் சண்டையிட்டேன். எனது வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை பல தலைவர்கள் பாராட்டினார்கள். அடுத்தநாள் கொல்கத்தாவிலிருந்து வெளியான தி டெலிகிராப் நாளிதழில்,‘‘Such a decision was not on the committee’s agenda, but the intense pressure by the southern MPs forced the government’s hand. S. Ramadoss, the PMK leader, was constantly interacting with the Left till the evening meeting. ’’என்று பாராட்டி எழுதப்பட்டிருந்தது. தினமணி நாளிதழில் ‘‘ இராமதாசு ஆவேசம்; தில்லியில் மாறியது காட்சி’’ என்று தலைப்பிட்டு நடந்த நிகழ்வுகளை தொகுத்து வெளியிட்டது.
இட ஒதுக்கீட்டுக்காக நான் நடத்திய போராட்டத்தைப் பார்த்த இடதுசாரிக் கட்சிகளின் தேசிய தலைவர்கள் அனைவரும் என்னை சமூக நீதித் தலைவர் என பாராட்டினார்கள். இவ்வாறாகத் தான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது.
நாளை...
27% இட ஒதுக்கீடு: சட்டமும், செயலாக்கமும்!
No comments:
Post a Comment