தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-17 - Agnipuratchi

தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள் பகுதி-17

Share This

தமிழக சட்டமன்றத்தில் பாமக  தலைவர் ஜி.கே.மணி அனுபவங்கள்  பகுதி-17 
  
பா.ம.க சார்பில் மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் குரல் கொடுத்தை சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சுருக்கம்:
 
ஜி.கே.மணி:பேரவைத் தலைவர் அவர்களே,முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்றை முதல் அமைச்சர் அவர்களுக்கும்,அரசுக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
   
தாய்ப் பாலைக் குடித்து தாய்க் கற்றுக்கொடுத்த நம் தாய்மொழி தமிழ்.உலகின் மூத்த மொழி தமிழ். உலகின் மூத்த இனம் தமிழ் இனம்.
  
"கல்தோன்றி மன்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்குடி" என்ற பெருமையுண்டு.
உலகில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டு மொழிகளுள் கிரேக்கம், இலத்தின்,பாரசீகம்,ஈஃபருசீனம், போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மொழிகளுள் மிக முக்கியத்துவம் பெற்றது தமிழ்.கன்னடம்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தாய் தமிழ். நமது தாய்மொழி தமிழ் தொன்மையானது, தனித்தன்மையுடையது,முதன்மையானது,சிறப்புக்குரியது,தன்னிகரற்ற இலக்கண,இலக்கிய  வளங்களைக் கொண்டது.
  
செந்தமிழ்,பைந்தமிழ்,வண்டமிழ், ஒண்டமிழ்,தண்டமிழ்,தேன்தமிழ் சுந்தரத்தமிழ்,முத்தமிழ்,பொற்றமிழ், நற்றமிழ்,வெற்றித்தமிழ்,வாழும் தமிழ்,வளரும் தமிழ் என்றும்

"தேனினும் இனிய செந்தமிழ்  
   மொழியே !
  தென்னாடு விளங்குற திகழுந்  
  தென்மொழியே !
  ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் 
   மொழியே!
தழைத்தினி ஓங்குவாய் தண்டமிழ் 
மொழியே ! என்றும் பாராட்டப்பட்டது.
  அடுத்து 
யாமறிந்த மொழிகளிலே தமிழ் 
  மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் !
  ஊமையராய்ச் செவிடர்களாய்  குருடர்களாய்
  வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
  தமிழ் முழக்கம் செய்யச்செய்வீர் என்று பெருமைப்பட சொன்னார் மகாகவி.
"காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு"என்பதுபோல் ஒவ்வொருவருக்கும் முதன்மையானது அவரவர் தாய்மொழியே.

உலகளவில் நிறை மொழிகள் அழிந்துவிட்டதாகவும்,நிறைய மொழிகள் சிதைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஒரு இனத்தின் அடையாளம் மொழிதான்.மொழி அழிந்தால் அந்த இனம் அழியும். மொழி சிதைந்தால் அந்த இனத்திற்கு சிதைவு.
நமது தாய்மொழி தமிழ் வளமையும் இளமையும் குன்றாமல் இருப்பினும் பேச்சு வழக்கில்,எழுத்து வழக்கில், நடைமுறையில் கலப்பு மொழியாக ஊடுருவப்படுவதைக் காண்கின்றோம்.

பேச்சிலும் எழுத்திலும் கலப்பு ஏற்பட்டால் எதிர்கால தமிழர்கள் மத்தியில் தனித்தமிழ்,தூயத்தமிழ் எப்படி காண முடியும்.இது மொழிச்சிதைவு அல்லவா ?
இதை பாதுகாத்திட அரசு,அரசியல் கட்சிகளும்,பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும்,தமிழர்களும் சிந்தித்துப்பார்த்து முன் வர வேண்டாமா ?
 
இதை நான் நமது அவையில் குறிப்பிடுவதனால் வேறு மொழிக்கு எதிரானவன் அல்ல.வளர்ந்து வரும் நவீன உலகில் ஒவ்வொருவரும் விரும்புகிற ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் படிக்கட்டும்.பேசட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. உலகின் மூத்த மொழி தமிழ் பாதுகாக்கப்பட வேண்டாமா? இதுதான் எனது இன்றையப் பிரச்சனை.
  
இதில் எங்கள் மருத்துவர் அய்யா அவர்களும்,மருத்துவர் அன்புமணி அவர்களும்,நானும் எங்கள் பா.ம.கவும் உறுதியாக இருக்கிறோம்.
உதாரணத்திற்கு தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மொழி நன்கு படித்து புலமை பெற்று இருந்தாலும் அவர் தூங்கும் போது நடு இரவில் கனவு கண்டாவோ,ஏதாவது உலறினாலும் கூட தாய்மொழி தமிழில் தான் உலறுவார்.ஒருவர் நன்கு அயர்ந்து மெய் மறந்து தூங்கும் நேரத்தில் அவர் காலில் குண்டூசியால் குத்தினாலோ, கையால் அடித்தாலோ ஐயோ... அம்மா... என்று தமிழில் தான் கத்துவார்...  அலறுவார்... இது உயிரிலும்,உணர்விலும்,ஊனிலும் கலந்தது.
 
இப்படி இருக்க தமிழ்நாட்டில் தமிழில் படித்த ஒருவர் அல்லது படிக்காத ஒருவர் தன் மகனை ஆங்கில வழிப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார் என வைத்துக் கொள்வோம்.அவரது மகன் பள்ளியில்,கல்லூரியில் ஆங்கிலமும் மற்ற மொழியும் படித்தும் பட்டம் பெற்று வேலையில் சேர்ந்து விட்டார்.இவர் தமிழ்ப்பாடம் படிக்காததால் தாய்மொழி தமிழ் பேசத் தெரியுமோ தவிர எழுதப்படிக்க தெரியாது.இதுதான் உண்மை. இவருக்கு திருமணம் செய்ய வேண்டுமென முடிவெடுத்து இதேபோல் தமிழர் குடும்பத்தில் பிறந்து ஆங்கில வழிப் பள்ளி - கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வேலைக்கு சென்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த மருமகள் (பெண்ணுக்கும்) தமிழ் பேச தெரியுமோ தவிர தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.

ஆக திருமணமான இருவரும் தனியார் நிறுவனத்தில் வெளியூருக்கு வேலைக்கு சென்று தனியாக குடும்பம் நடத்துகின்றனர். அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளை வேலை பார்க்கின்ற இடத்தில் பள்ளிக்கு சேர்க்கிறார்கள்.அதுவும் ஆங்கில வழிக்கல்வி பள்ளி என்பதால் அப்பள்ளியில் எழுதுவது,படிப்பது, பேசுவது எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும்தான்.அந்தக் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் வீட்டிலும் பெற்றோர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள்.எப்போதாவதுதான் தமிழில் பேசுவார்கள்.ஆக இந்தக் குழந்தைகள் நன்கு தமிழ் பேசுவார்களா ? கலப்புத் தமிழில்தான் பேசுவார்கள். கொச்சைத் தமிழில் தான் பேசுவார்கள்.இவர்கள் திருவிழா,திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு சொந்த ஊருக்கு வந்தால் பேராசையுடன்,பாசத்துடன் தாத்தா,பாட்டி,உறவினர்கள் எல்லோரும் குழந்தைகளிடம் பேச ஆரம்பித்தால் எப்படி பேசுவார்கள். குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள். எண்ணிப் பாருங்கள்.
  
இது யாருடைய காலத்தில்?  எவ்வளவு ஆண்டுகளில்? அவர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே அவரது பேரக்குழந்தைகளின் இளம் வயது காலத்திலே... அவரது கண்முன்னே பேரக்குழந்தைகளால் தாய்மொழி சிதைந்து கொண்டிருக்கிறது அல்லவா ? எதிர்காலம் எப்படி இருக்கும்?  ஆகவே மொழிச்சிதைவு...   அழிவு நடந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையென அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
முதலமைச்சர் அவர்களே, அமைச்சர்களே,உறுப்பினர்களே இந்த ஜி.கே.மணி அதிகம் பேசுகிறான் என்று நினைக்காதீர்கள். இது தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை. இது உண்மை.எதார்த்த நிலை. உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.உங்கள் அனைவருக்கும் நினைவு படுத்தவே இதைக் கூறிப்பிடுகின்றேன்.
 
முதலமைச்சர் அவர்கள்: மணி அவர்களே,கவலைப்படாதீர்கள். தமிழுக்கு என்றும் அழிவோ, ஆபத்தோ வராது. இது கன்னித்தமிழ். இளமையும் வளமையும் குன்றா தனித்தமிழ்.உங்கள் மருத்துவர் அய்யா அவர்களும், நீங்களும் எடுத்துரைப்பதை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
 
ஜி.கே.மணி: முதலமைச்சர் அவர்களே,"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்று சொல்லி வருகிறார்களே.இதை தமிழ் ஆர்வலர்களே,இயக்கத்தின் மூலம் சொல்லி வருகிறார்கள்.நான் நீண்ட நேரம் சுட்டிக்காட்டியதும் உண்மை நிலவரம் தானே. இதையெல்லாம் போக்க,தமிழ் ஓங்கி வளர அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்பதுதான் எனது கோரிக்கை.
 
முதலமைச்சர் அவர்களிடம் தனி கோரிக்கை வைத்தோம். இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த முக்கிய நகரங்கள் சென்னை,பம்பாய்,கல்கத்தா (அப்போதைய பெயர்) டில்லி ஆகிய நான்கில் ஒன்று சென்னை.பிரசித்தி பெற்ற "புனித ஜார்ஜ் கோட்டை" அமைக்க அதன் சுற்றுவட்டார இடங்களையெல்லாம் தானமாக கொடுத்த கொடைவள்ளல் 'சென்னப்ப நாயகர்' பெயரால் 'சென்னப்பட்டணம்' என்று அழைக்கப்பட்டு வந்தது.இது பெயரளவில் சென்னப்பட்டணம், சென்னை என்று சொல்லப்படுகிறதே தவிர எல்லா பதிவேடுகளிலும், ஆவணங்களிலும் மெட்ராஸ் என்றும் மதராஸ் என்றும் தான் அழைக்கப் படுகிறது.

டில்லிக்கோ,வட மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேட்டி அணிந்து சென்றால் நம்மை மதராஸ் வாலா என்றுதானே அழைக்கின்றார்கள்.
முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 1996ஆம் ஆண்டு மதராஸ்,மெட்ராஸ் என்று இல்லாமல் இனி எல்லா நடவடிக்கைகளிலும் எல்லா இடங்களிலும் "சென்னை"என்று இருக்கும்,இருக்க வேண்டும் என அறிவித்தார்.

Tripilicane என்னும் ஆங்கிலப் பெயர் திருவல்லிக்கேணி,Poonamalli_பூந்தமல்லி_பூவிருந்தவல்லி, சேலம் மாவட்டத்தில் மெக்டொனால்டு சவுல்டரி_மகுடஞ்சாவடி எனவும் இப்படி தமிழ்நாடு முழுவதும் நிறைய பெயர்கள் உருவானது.
 
ஜி.கே.மணி:முதல் அமைச்சர் அவர்களே, மெட்ராஸ் ஸ்டேட், மெட்ராஸ் மாகாணம் என்பதை உங்களது ஆட்சி காலத்தில் தான் "தமிழ்நாடு" என பெயர் மாற்றப்பட்டது.இதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் கடிதப் போக்குவரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் தமிழில் தான் இருக்க வேண்டுமென1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே அரசு ஆவன செய்திருக்கிறது.ஆனால் இன்றும் அரசு கடிதங்கள், அறிவிப்புகள், அரசாணைகள் போன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. (சில கடிதம்,அரசாணைகள், நகல்களை கையில் காண்பித்தேன்) இதோ பாருங்கள் சில நகல்கள் என காண்பித்தேன்.இதை மாற்ற வேண்டும்.
 
தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ளோர் அனைவரும் வருகை பதிவேடு, சம்பளப்பட்டியல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழில்தான் கையெழுத்துப் போட வேண்டுமென விதி உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் தான் கையெழுத்துப் போடுகின்றார் கள். உடனே இதை மாற்ற வேண்டும். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்தால் குறிப்பிட்ட காலத்தில் தமிழ் பேச, படிக்க,எழுதக்கற்றுக்கொள்ள வேண்டு மென வரையறுக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் வணிக வளாகங்கள், கடைகள்,உணவகங்கள்,தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் பெயர் பலகைகள்,விளம்பரப் பலகைகள் தமிழ்நாட்டின் தெருக்களில் தமிழில் இல்லையே. கிராமப்புறத்தில் இருந்து பொதுமக்கள் வந்தால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதே! அடையாளம் காண தெரியாதே, இதற்காக இந்த பெயர்ப்பலகைகள், அதாவது அதன் வடிவில் 50% (5 பங்கு)தமிழில் மேலே இருக்க வேண்டும்.அதன்கீழ் 30% (3 பங்கு) ஆங்கிலத்தில் இருக்கலாம். அதன் கீழே 20% (2 பங்கு) அவர்கள் விரும்புகிற மொழியில் வைத்துக் கொள்ளலாம் என1983_84 ஆண்டிலும்,1987 மண் ஆண்டிலும் அதன் பின்னரும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அரசாணை வெளியிட்டு அறிவிப்பு செய்தும் இதுவரை தலைநகர் சென்னையிலும் தமிழ்நாடு முழுவதும் பெயர்பலகைகள் மாற்றப்பட வில்லையே.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே. இதை அரசு  நடைமுறைப்படுத்த முடியாதா? நாங்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம். பா.ம.க சார்பில் எங்கள் மருத்துவர் அய்யா அவர்களும், நாங்களும் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம், தார்பூசி அழிக்கும் போராட்டங்களும் நடத்தினோம்.இதில் எங்கள் A.K.மூர்த்தி மற்றும் கட்சியினர் மீதும் வழக்கு போடப்பட்டது.
 
முதலமைச்சர் அவர்கள்:நண்பர் ஜி.கே.மணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. "நீங்கள் ஆளை அனுப்பாதீர்கள்_நான் ஆணையை அனுப்புகின்றேன்" (என்றார் ஆவேசமாக... அப்போது அவை சலசலப்பாகவும்,கலகலப்பாகவும் காணப்பட்டது). (நீங்கள் போராட்டத் திற்கு ஆட்களை அனுப்பாதீர்கள் நான் அரசானையின் மூலம் நடவடிக்கை எடுக்கின்றேன் என பொருள்பட சொன்னது).
 
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,அரசு ஆணையை அனுப்புகின்றீர்கள்.அரசு ஆணையினால் இதுவரை நடவடிக்கை இல்லை.இதை அரசு நினைத்தால் செய்ய முடியாதா? என்ன தயக்கம்? இந்த நிலை இந்தியாவின் வேறு மாநிலத்தில் உண்டா? வேறு நாடுகளில் உண்டா?
 
அமைச்சர்: ஜி.கே.மணி அவர்களே, முதலமைச்சர் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். பொறுங்கள்.
   
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே, தாய்மொழிக்கல்வி தமிழ்வழிக் கல்வி என சட்டங்கள், அரசாணைகள் என எவ்வளவு செய்தாலும் தமிழ்வழியில்,படித்தவர்களுக்கு, அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை!
  
எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)தேர்வு செய்யும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களிலும் முன்னுரிமை வேண்டும்.அதற்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென தொடர்ந்து வாதாடி வந்தோம்.
 
அதை ஏற்றுக்கொண்டு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை-20% ஒதுக்கீடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதை பா.ம.க சார்பில் வரவேற்றோம். இது மகத்தான வெற்றி தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது எல்லோருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்து நீடிக்கும் நிலையும் உருவானது.

மருத்துவர் அய்யா அவர்களும் பாமக செய்த சாதனைகளும் மீண்டும் நாளைதொடரும்...  பகுதி-18

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages