முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்- 13
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
12. 27% இட ஒதுக்கீட்டின் இன்றைய நிலை!
நம்மிடமிருந்து காலம் காலமாக பறித்துக் கொண்டிருந்தவர்கள், அதை அவ்வளவு எளிதில் திருப்பிக் கொடுத்து விட மாட்டார்கள் என்பது மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதிலும் பொருந்தும். மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் கூட, அதை இன்றளவும் முழுமையாகப் பெற முடியவில்லை என்பது தான் உண்மை.
மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி வி.பி.சிங் அரசு அறிவித்தது. அதற்கான அரசாணை 13.08.1990-இல் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்துத் தடைகளும் தகர்க்கப்பட்டு, 27% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று 1993-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அறிவிக்கப் பட்டது. அதற்குள் இருமுறை ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று விட்டன. அதன்பிறகும் 6 மாதம் கழித்து 1994&ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டின்படி முதன்முறையாக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதற்குப் பிறகு மத்திய அரசுப் பணிகளில் ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் கூட, அத்தனை விழுக்காடு இடங்களும் முழுமையாக நிரப்பப்படுவதில்லை. கிரீமீலேயர் உள்ளிட்ட பல காரணங்களைக் காட்டி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு தான் வருகிறது.
27% இட ஒதுக்கீட்டின்படி முதல் பணி ஆணை வழங்கப்பட்ட 1994-ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகள் கழித்து, 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித் துவம் வெறும் 7.00% என்ற அளவில் தான் இருந்தது. அதிலும் கூட அதிகாரம் நிறைந்த முதல்நிலைப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 5.40% மட்டும் தான்.
அதேபோல், இரண்டாம் நிலைப் பணிகளில் 4 விழுக்காடு இடங்களும், 3,4,5 ஆகிய நிலைப் பணியிடங்களில் 7.1 விழுக்காடு பணியிடங்களும் மட்டும் தான் 2008-ஆம் ஆண்டின் நிலவரப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருந்தன. இதில் ஒரு வேதனையான உண்மை என்ன தெரியுமா?
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையுடன் கூடிய மண்டல் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, 1980-ஆம் ஆண்டிலேயே மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 12.60% அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்று இருந்தனர் என்பது தான். முதல் நிலைப் பணிகளில் 4.70%, இரண்டாம் நிலைப் பணிகளில் 10.60%, 3,4,5-ஆம் நிலை பணிகளில் 19.00% என்ற அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவம் பெற்று இருந்தனர்.
2008-ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது. எனினும் இது திருப்தியடைவதற்கான அளவு அல்ல. 28.03.2018 அன்று நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடி சார்பில், அத்துறையின் இணையமைச்சர் முனைவர் ஜிதேந்திரசிங் அளித்துள்ள விவரங்களின்படி மத்திய அரசுத் துறைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 01.01.2012 நிலவரப்படி 16.55% ஆகவும், 01.01.2016 நிலவரப்படி 21.57% ஆகவும் உள்ளது.
மத்திய அரசில் மொத்தமுள்ள 79 அமைச்சகங்கள்/ துறைகளில் 77 அமைச்சகங்கள்/துறைகள் அளித்த புள்ளிவிவரங்களின்படி மத்திய அரசுத் துறைகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் வருமாறு: (01.01.2016 நிலவரப்படி)
1. வேளாண்மை -12.97%
2. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி - 2.78%
3. காலநடைத்துறை, பால்வளம் மற்றும் மீன்வளம் - 19.72%
4. மத்திய அமைச்சரவைச் செயலகம் - 13.03%
5. உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை - 15.31%
6. வர்த்தகத்துறை - 7.43%
7. தொழிற்கொள்கை மற்றும் மேம்பாடு - 16.52%
8. கலாச்சாரம் - 12.34%
9. அணுசக்தி - 20.83%
10. வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னேற்றம் -11.90%
11. புவி அறிவியல் - 8.28%
12. வனம் மற்றும் சுற்றுச்சூழல் - 11.92%
13. வெளியுறவுத்துறை - 12.80%
14. உணவுப் பதனத்துறை - 3.12%
15. உள்துறை - 25.45%
16. செய்தி ஒலிபரப்பு - 15.91%
17. தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு - 16.16%
18. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை -11.19%
19. புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி - 7.29%
20. பஞ்சாயத்து ராஜ் -20.90%
21. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை - 17.17%
22. நிர்வாகச் சீர்திருத்தத்துறை - 8.16%
23. ஓய்வூதியம் & ஓய்வூதியர் நலன் - 11.36%
24. பணியாளர் நலன் மற்றும் பயிற்சி - 8.92%
25. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை - 6.67%
26. எரிசக்தி - 8.32%
27. ரயில்வேத் துறை - 21.91%
28. சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் - 9.96%
29. விண்வெளித்துறை - 22.12%
30. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை - 21.60%
31. எஃகுத்துறை - 8.30%
32. ஜவுளித்துறை - 9.61%
33. பழங்குடியினர் விவகாரத்துறை -14.16%
34. நகர்ப்புற மேம்பாடு -7.30%
35. நீர்வளத்துறை -16.05%
36. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு - 14.58%
37. ஆயுஷ்துறை -25.73%
38. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை - 13.33%
39. பாதுகாப்புத்துறை - 19.23%
40. பாதுகாப்பு உற்பத்தித் துறை - 16.70%
41. முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை - 13.73%
42. பொருளாதார விவகாரம் - 8.98%
43. செலவினத்துறை -10.95%
44. நிதிச்சேவைத் துறை -13.59%
45. வருவாய்த்துறை - 11.43%
46. உயிரி தொழில்நுட்பம் -7.82%
47. அறிவியல் & தொழில்நுட்பம் - 5.71%
48. அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி - 8.05%
49. ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் - 13.95%
50. உரங்கள் - 14.50%
51. மருந்து தயாரிப்புத் துறை - 10.62%
52. நிலக்கரித் துறை -5.86%
53. கார்ப்பரேட் விவகாரங்கள்துறை -14.26%
54. நுகர்வோர் விவகாரங்கள்துறை - 12.98%
55. உணவு மற்றும் பொது வினியோகத்துறை - 18.07%
56. கனரகத் தொழில்துறை - 8.77%
57. பொதுநிறுவனங்கள் துறை -9.72%
58. உயர்கல்வித்துறை - 9.97%
59. மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை - 14.01%
60. அஞ்சல்துறை - 17.49%
61. தொலைத்தொடர்புத்துறை -10.54%
62. சட்ட விவகாரங்கள் துறை - 10.04%
63. சட்டம் இயற்றும் துறை - 11.41%
64. குடிநீர் மற்றும் துப்புறவுத்துறை - 14.61%
65. நில ஆதாரங்கள் துறை - 5.33%
66. ஊரக வளர்ச்சித்துறை - 10.83%
67. சுரங்கத்துறை - 13.29%
68. நிதி ஆயோக் - 8.70%
69. குடியரசுத் தலைவர் செயலகம்- -13.28%
70. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை- - 13.86%
71. கப்பல் போக்குவரத்துத் துறை -14.99%
72. சுற்றுலாத்துறை - 13.08%
73. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - 9.09%
74. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - 14.20%
75. குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் - 8.16%
76. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் - 13.37%
77. தேர்தல் ஆணையம் - 15.16%
மொத்தம் - 21.57%
மேற்கண்ட புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் நான்கில் மூன்று பங்கை பிற்படுத்தப்பட்டவர்கள் எட்டிப்பிடித்து விட்டார்களே என்று நினைத்து மகிழ்ச்சியடையத் தோன்றலாம்.
ஆனால், அவ்வாறு மகிழ்ச்சியடைவதற்கான நேரம் இதுவல்ல....
மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 21.57% அளவுக்கு உயர்ந்திருந்தாலும் இவை அனைத்தும் இட ஒதுக்கீட்டின் மூலமாக மட்டுமே கிடைத்தவை அல்ல. கடந்த சில ஆண்டுகளாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பொதுப்போட்டி பிரிவில் வெற்றி பெற்று வருகின்றனர். அவர்களையும் சேர்த்து தான் இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. மற்றபடி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு உரிமைகள் பல்வேறு காரணங்களைக் கூறி மறுக்கப்பட்டுக் கொண்டு தான் வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது கிரீமிலேயர் ஆகும்.
முதலில் இட ஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் பொருந்தாது. சமூக அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒருவரிடம் பொருளாதார வலிமை இருப்பதால் அவரது சமூக நிலை உயர்ந்ததாகி விடாது. அதனால் தான் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற தத்துவம் ஏற்கப்படுவதில்லை. சுருக்கமாக கூறினால்... இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை.... அது சமூக நீதி.
27% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்திரா சகானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மொத்தம் 8 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 4 அம்சங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுக்குரிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அடைய முடியாமல் தடுக்கும் முட்டுக்கட்டைகள் ஆகும். அவற்றின் விவரம் வருமாறு:
1. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் விலக்கி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது.
2. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% வரம்பைத் தாண்டக் கூடாது.
3. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.
4. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கும், சில குறிப்பிட்ட பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.
இந்த 4 முட்டுக்கட்டைகளும் இல்லாவிட்டால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்குரிய 27% இட ஒதுக்கீட்டை முழுமையாக கைப்பற்ற முடியும். அதுமட்டுமின்றி பொதுப்போட்டிகளில் கணிசமான இடங்களைக் கைப்பற்றவும் முடியும். அவ்வாறு கைப்பற்றும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் மக்கள்தொகைக்கு இணையான பிரதிநிதித்துவத்தை அடைய முடியும். அப்படிப்பட்டதொரு இலக்கை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அடைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் மேற்கண்ட 4 நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்திருக்கிறது. இவை பிற்படுத்தப்பட்ட மக்களின் விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கு மிகவும் கேடானவை ஆகும். இந்தக் கேட்டை அகற்றுவதற்கானத் தீர்வு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், விகிதாச்சார வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் தான்.
நாளை....
உயர்கல்வியில் 27% இட ஒதுக்கீடு: நான் நடத்தி வெற்றி பெற்ற இரண்டாவது சமூகநீதிப் போர்!
No comments:
Post a Comment