தமிழக சட்டமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் அனுபவங்கள் பகுதி-27 (11.06.2020)
சட்டமன்றத்தில் பா.ம.க செயல்பாடு_
காவல்துறை சம்பந்தமான நிகழ்வுகள் நிறைய இருந்தவற்றிலும் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். இன்றும் ஒருசில காவல்துறையில் தலைமைக்காவலர் (ஏட்டு) 15, 20, 25 ஆண்டுகள் பணியாற்றி வந்தாலும் பதவி உயர்வு எட்டாக்கனியாகவே இருந்ததால் வேதனைப்பட்டு வந்தனர்.இதை தொடர்ந்து வற்புறுத்தி வாதாடி நம் கோரிக்கை ஏற்கப்பட்டு, பதவிஉயர்வுக்கு சிறப்பு சப்_இன்ஸ்பெக்டர் (SSI) என பதவி உருவாக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான தலைமைக்காவலர்கள் பயன்பெற்று வருவதை நேற்று குறிப்பிட்டிருந்தேன்.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளும்,அதற்கு முன்பு பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டு முடிவு பெறாமல் இருப்பதையும் உங்களுக்கு பட்டியல் கொடுக்கின்றேன்.
இதில் புலப்படுகின்ற உண்மை,பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நீண்ட காலம் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தோல்வி அடைந்ததே அதிகம் இதற்கு என்ன காரணம்? பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா? வழக்குக்காக சாட்சியங்கள் இல்லையா? முக்கியமானவர்களின் தூண்டுதலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறதா? விருப்பு, வெறுப்பு, வேண்டியவர்,வேண்டாதவர் என்ற பாகுபாட்டுடன் சில இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா?என்றுதான் தோன்றுகிறது.
முதலமைச்சர் அவர்கள்:மணி, நீங்கள் இப்படி அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லக்கூடாது.
ஜி.கே.மணி:முதலமைச்சர் அவர்களே,இதோ பட்டியலை வைத்துக்கொண்டு தான் பேசுகின்றேன்.இதற்குமேல் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையும் உள்ளது.முதலமைச்சர் அவர்களை நான் வற்புறுத்துவது, எங்கும் பொய் வழக்கு போடக்கூடாது. முக்கியமானவர்கள் அதாவது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களாலோ சில காவல்துறை அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் தூண்டுதலாலோ வழக்கு பதிவு செய்யக்கூடாது. நியாயத்தின் அடிப்படையில் உண்மையாக, குற்றத்திற்குரிய சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்பதுதான்.
மேலும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரம் அமைதியாக முடிவு பெற்றிருக்கிறது. இது வரவேற்புக் குரியது. அங்கு மக்கள் அமைதியாக வாழ வேண்டும்.இருதரப்பினரிலும் முக்கியமானவர்களை அழைத்துப்பேசி,சமாதானப்படுத்தி இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப்பெற்றால் நல்லதாக அமையும்.
முதலமைச்சர் அவர்களே,காவல் துறையினருக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை போக்கி ஊக்கப்படுத்த இடையிடையே பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். நவீன குற்றவாளிகள்,கணினி வழி குற்றவாளிகள் அதிகரித்து குற்றங்கள் பெருகி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காவல் துறையினரும் தீவிரவாதிகள் போன்ற குற்றவாளிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். காவல்துறை பணியில் சேருவோருக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. உலகளவில் பயிற்சி தரம் உயர காவல்துறை பல்கலைக்கழகம் துவங்கப்பட வேண்டும்.
காவல்துறையினருக்கான சில கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். நிறைவேற்ற வேண்டும். காவல்துறையினருக்கு சீருடைக்கான தைத்த உடை,தொப்பி, இடுப்பு பட்டை (பெல்ட் ),காலணி (ஷூ) போன்றவை அரசு வழங்கி வருகின்றது.இவற்றை ஒட்டுமொத்தமாக ஒப்பந்ததாரர் மூலம் பெறப்படுகிறது எனக் கருதுகின்றேன்.
சின்ன தலைக்கு பெரிய தொப்பி வழங்கப்படுகிறது, தலை முகம் மூடிக்கொள்கிறது, ஆடிக்கொண்டிருக் கும். பெரிய தலை உள்ளவருக்கு சின்ன தொப்பி. தொப்பி தலைக்கே பொருந்தாது. இதேமாதிரி உடை,உடல் சிறுத்தவருக்கு பெரிய அளவு உடை,உடல் பெருத்தவருக்கு சிறிய உடை.இதற்குமேல் காலணி,கால் உள்ளே நுழையாத அளவில் பெரிய காலுக்கு சின்ன ஷூ,சின்ன காலுக்கு பெரிய ஷூ, இதைப்போலவே பெல்ட்.
(இதை சற்று நயமாக சொல்லும்போது அவையில் எல்லோருக்கும் சிரிப்பு. தமாஷ் போலவும் இருந்தது)
எனவே ஆண்டுதோறும் உடைக்கு துணியும் தையற்கட்டணம் கொடுத்துவிட்டால் அவர்கள் சரியான அளவிற்கு தைத்து போட்டுக்கொள் வார்கள். இதைப்போலவே தொப்பி,காலனி (ஷூ),பெல்ட் எல்லாவற்றிற்கும் தொகையாக கொடுத்துவிடுங்கள். அவரவர்கள் சரியான அளவில் வாங்கிக் கொள்வார்கள். கச்சிதமாகவும் இருக்கும், பார்ப்பதற்கு கவர்ச்சியாக பொருத்தமாகவும் இருக்கும்.
ஏற்றுக்கொள்ளப்பட்டு பணமாக வழங்கப்பட்டது.
காவல்துறையினரின் பணியின் தன்மை கடினம் என்பதால் அதற்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஆண்கள் மகளிர் இருபாலர் இரண்டாம் நிலை காவலர், முதல்நிலைக் காவலர்,தலைமை காவலர்,உதவி ஆய்வாளர், ஆய்வாளர்,துணை கண்கானிப்பாளர்,உதவி கண்கானிப்பாளர்,மாவட்ட கண்கானிப்பாளர்,காவல்துறை துணைத்தலைவர்(DIG),காவல்துறை தலைவர்(IG),கூடுதல் தலைமை இயக்குனர்(ADGP )உள்ளிட்ட அனைவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு படி (STEP) பதவி உயர்வு அவசியம் வழங்கப்பட வேண்டும்.
இதைப்போல சிறைத்துறையில் பணியாற்றக்கூடியவர்,தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் உள்ளவர்களுக்கும்,காவல்துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வும்,பதவி உயர்வும் வழங்க வேண்டும். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பு கவச உடைகள்,பணி நாட்களுக்கு கூடுதல் படி (ALLOWANCE)வழங்க வேண்டும்.
ஊர்க்காவல் படையில் உள்ளவர்களுக்கு பணி நாட்களும் குறைவு,ஊதியம் மிக மிகக் குறைவு கூடுதலாக வேண்டும்.
காவல்துறையில் தமிழ்நாடு முழுவதும் வீரதீர செயல்களை பாராட்டி பதக்கமும், சாதனையாளர்களுக்கு ரொக்கப் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அந்த பரிசுத்தொகை அதிகப்படுத்துவதோடு. வீரதீர செயல்களின் சாதனைகளுக் கேற்ப பதவி உயர்வும் வழங்க வேண்டும்.
*தேவையான வாகனங்கள் வழங்க வேண்டும்.
*காவலர்களுக்கு இடர்படி(RISK ALLOWANCE) வழங்கப்படுவதை அதிகரிக்கவேண்டும்.
*சீருடைப்படி,உணவுப்படி,சீருடை தையல் கட்டணம் போன்றவற்றை உயர்த்தவேண்டும்.
*காவலர்களுக்கு என நியாய விலைக்கடைகளில் அரிசி,பருப்பு, எண்ணெய்,கோதுமை,சர்க்கரை உள்ளிட்டவை மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
*மோப்பநாய் உணவுக் கட்டணம் கூடுதலாக்க வேண்டும்.
*காவல்துறையின் குழந்தைகள் படிக்க கல்விக் கட்டணச்சலுகை வழங்க வேண்டும்.
*எல்லாக் காவல் நிலையங்களையொட்டி காவலர் குடியிருப்பு கட்டப்பட வேண்டும். காவலர்கள் தூங்க,ஓய்வெடுக்க ஓய்வறைக் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.
*காவல் நிலையங்கள் அனைத்தும் கணினிமயமாக்க வேண்டும்.
*காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் கண்கானிப்பு காமிரா(CCTV) பொருத்த வேண்டும்.
*சாலை விபத்துக்களை கண்கானிக்க மாநகர,நகர,பேருர் சாலை சந்திப்புகளில் சைகை விளக்கு (SIGNAL LIGHT) மற்றும் (CCTV)வைக்க வேண்டும்.
*காவல்துறையில் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக் குழுக்கள் உள்ளது.வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி குழுக்கள் மேம்படுத்த வேண்டும்.
*காவல்துறையில் உள்ள இசைக் குழுக்கள் மேம்படுத்த வேண்டும்.
*காவல் துறையினருக்கு காப்பீட்டுத்தொகை அதிகப்படுத்த வேண்டும்.
*புறக்காவல் நிலையங்களை காவல் நிலையங்கள் ஆக உயர்த்த வேண்டும்.
*கடலோர காவல் படையின் காவல்நிலையங்கள் அதிகரிப்பதோடு விசைப்படகுகள், நவீன துப்பாக்கிகள்,உபகரணங்கள் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும்.
(பா.ம.க பேசினால் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு எங்களிடம் காவல்துறையினர் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். காவல்துறையின் சலுகைகளுக்கு அதிகம் பேசி வாதாடுவது பா.ம.கதான்.மருத்துவர் அய்யா அவர்களும் இதை வலியுறுத்துவார்கள்).
மற்றவை நாளை தொடரும்... பகுதி-28
No comments:
Post a Comment